• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கிராம சபையில் பங்கேற்க மதுரை பாப்பாப்பட்டி செல்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் - காரணம் இதுதான்!

கிராம சபையில் பங்கேற்க மதுரை பாப்பாப்பட்டி செல்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் - காரணம் இதுதான்!

கிராம சபை

கிராம சபை

பாப்பாப்பட்டியில் உள்ள கள்ளர் மேல்நிலை பள்ளி வளாகத்தில் அக்டோபர் 2 ஆம் தேதி காலை கிராம சபை கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

  • Share this:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சராக இருந்த போது, மதுரையில் உள்ளாட்சி தேர்தல் நடத்தி சாதித்த பகுதியில், அக்டோபர் 2-ல் நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்கிறார். முதலமைச்சரின் வருகையை ஒட்டி பாப்பப்பட்டி பகுதியில் கிராமசபை கூட்டம் நடைபெற உள்ள இடத்தில் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2006ஆம் ஆண்டில் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த போது, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகாவிற்கு உட்பட்ட பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம் ஆகிய கிராம ஊராட்சி பகுதிகளில் இரு சமூகத்தினருக்கு இடையேயான பிரச்சனைகளால் வெகு காலமாக நடத்தப்படாமல் இருந்த உள்ளாட்சி தேர்தலை நடத்திக்காட்டினார்.

இதே போல நெடுங்காலமாக தேர்தல் நடத்தப்படாமல் இருந்த விருதுநகர் மாவட்டம் திருச்சுழி வட்டத்திற்கு உட்பட்ட கொட்டக்கச்சியேந்தல் ஊராட்சி மன்ற உறுப்பினர் தேர்தலையும் நடத்திக் காட்டினார் அப்போதைய அமைச்சர் ஸ்டாலின்.

2006-ம் ஆண்டு நவம்பர் 11-ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற சமத்துவ பெருவிழாவில், தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த கிராம ஊராட்சி மன்ற பிரதிநிதிகளை அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி நேரில் அழைத்து பொன்னாடை அணிவித்து, கேடயங்கள் வழங்கி கவுரவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



இந்த நிகழ்வுகளின் போது மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த உதயசந்திரன் ஐ.ஏ.எஸ், தற்போது முதலமைச்சரின் முதன்மை செயலாளராக உள்ளார். இவரது ஆலோசனையின் அடிப்படையிலேயே தற்போது அக்டோபர் 2-ம் தேதி தமிழகம் முழுவதும் நடத்தப்பட உள்ள கிராம சபை கூட்டங்களில், மதுரை - பாப்பாப்பட்டியை முதலமைச்சர் தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது.



முதலமைச்சரின் வருகையை ஒட்டி பாப்பப்பட்டி பகுதியில் கிராமசபை கூட்டம் நடைபெற உள்ள இடத்தில் மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். பாப்பாப்பட்டியில் உள்ள கள்ளர் மேல்நிலை பள்ளி வளாகத்தில் அக்டோபர் 2 ஆம் தேதி காலை கிராம சபை கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டு, வளாகத்தை சுத்தம் செய்யும் பணிகளும், பாதுகாப்பை அதிகரிக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.



Must Read : ரவுடிகளுக்கு ஆயுதங்கள் கிடைப்பதைத் தடுக்க காவல்துறை அதிரடி நடவடிக்கை

முதலமைச்சராக பொறுப்பேற்ற உடன் கடந்த மே மாதம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய முதன் முறையாக மதுரை வந்தார் மு.க.ஸ்டாலின். அதன் பின்னர், தற்போது இரண்டாவது முறையாக மதுரை வரும் முதலமைச்சர் ஸ்டாலின், அவருடைய அரசியல் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்திய நிகழ்வுடன் தொடர்புடைய ஒரு இடத்திற்கு வருகிறார் என்பது மதுரை மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Suresh V
First published: