முகப்பு /செய்தி /தமிழ்நாடு / MK Stalin | தமிழக முதல்வராக இன்று பதவியேற்கிறார் மு.க.ஸ்டாலின்..!

MK Stalin | தமிழக முதல்வராக இன்று பதவியேற்கிறார் மு.க.ஸ்டாலின்..!

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

தமிழக முதலமைச்சராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு பதவியேற்கிறார். பதவியேற்பு விழாவை தொலைக்காட்சியில் காணும்படி தொண்டர்களுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

  • 1-MIN READ
  • Last Updated :

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றது. இதில், திமுக மட்டும் 125 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மை பெற்றது. இதனை தொடர்ந்து திமுக சட்டமன்ற கட்சி தலைவராக மு.க.ஸ்டாலின் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். திமுக சட்டமன்ற கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கான கடிதத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் வழங்கி ஆட்சியமைக்க உரிமை கோரினார்.

இதனையேற்றுக் கொண்ட ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தமிழக முதலமைச்சராக ஸ்டாலினை பதவியேற்க அழைப்பு விடுத்தார். இதன்படி, ஆளுநர் மாளிகையில் இன்று காலை 9 மணிக்கு எளிய முறையில் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. அப்போது ஸ்டாலினுக்கு ஆளுநர் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார். அவரைத் தொடர்ந்து 33 பேர் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர்.

பதவியேற்றதும் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைசர்கள் கோட்டைக்கு செல்ல உள்ளதால், தலைமை செயலகத்தில் அலுவலகங்களை சீரமைக்கும் பணி, பழைய பெயர் பலகைகளை மாற்றி புதிய பெயர் பலகைகள் வைக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்றது.முதலமைச்சர் அறை மற்றும் வளாகத்தை வர்ணம் பூசி புனரமைக்கும் பணியும் விறுவிறுப்பாக நடைபெற்றது.

இதேபோன்று மு.க.ஸ்டாலின் இல்லத்தில் இருந்து ஆளுநர் மாளிகை வரையும், தலைமைச் செயலக வளாகத்திலும் முதலமைச்சர் பாதுகாப்பு வாகனங்களின் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

மு.க ஸ்டாலின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க கூட்டணி கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, காவல்துறை உயர் அதிகாரிகள், மு.க. அழகிரியின் மகன் துரை தயாநிதி, மகள் கயல்விழி உள்ளிட்டோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழக முதலமைச்சராக பதவியேற்க உள்ள நிலையில், பதவியேற்பு விழாவை வீட்டிலிருந்தே காணுமாறு தொண்டர்களுக்கு முக.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பதவியேற்பு விழாவை தமிழகம் முழுவதும் உள்ள தொண்டர்களை அழைத்து பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் கொரோனா பரவல் காரணமாக மக்கள் கூடும் மாபெரும் விழாவாக பதவியேற்பு விழாவை நடத்த முடியாது என்றும் கூறியுள்ளார்.

தேர்தல் வெற்றிக்கு கடுமையாக உழைத்த தொண்டர்களின் முன்னால் பதவியேற்க முடியவில்லை என்று தான் வருந்துவதாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். முதலமைச்சராக பதவியேற்கவிருப்பதை முன்னிட்டு ஸ்டாலின், அரசியல் கட்சிகளின் மூத்த தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார். சென்னை குரோம்பேட்டையில் வசிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யா இல்லத்திற்கு நேரில் சென்று மு.க.ஸ்டாலின் வாழ்த்து பெற்றார்.

பின்னர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, எம்ஜிஆர் கழகத் தலைவர் ஆர்.எம் வீரப்பன் ஆகியோர் இல்லங்களுக்கும் சென்று அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து பெற்றார். இதேபோன்று மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

இதனிடையே, தமிழக முதலமைச்சராக பதவியேற்க இருக்கும் தன் தம்பி மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவிப்பதாக அவரது சகோதரர் மு.க. அழகிரி தெரிவித்துள்ளார், அவர் வெளியிட்டிருக்கும் வாழ்த்து செய்தியில், தன் தம்பி முதலமைச்சராவதில் பெருமைப்படுவதாகவும், மு.க.ஸ்டாலின் நிச்சயம் நல்லாட்சி தருவார் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

First published:

Tags: DMK, MK Stalin