மன்னர் மன்னன் மரணம் தமிழர்களுக்கு ஈடு செய்யமுடியாத இழப்பு - மு.க.ஸ்டாலின் உருக்கம்

மன்னர் மன்னன் மரணம் தமிழர்களுக்கு ஈடு செய்யமுடியாத இழப்பு - மு.க.ஸ்டாலின் உருக்கம்
மன்னர் மன்னன்
  • Share this:
புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் மகனான மன்னர் மன்னன் இன்று உடல்நிலைக் குறைவு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மு.க. ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தி: "'புரட்சிக் கவிஞர்' பாவேந்தர் பாரதிதாசனின் ஒரே மகனும் முதுபெரும் தமிழறிஞருமான கலைமாமணி மன்னர் மன்னன் அவர்கள் தனது 92-வது வயதில் உடல் நலக்குறைவால் மறைவெய்தினார் என்ற வேதனை மிகுந்த செய்தியறிந்து சொல்லொணாத் துயரமுற்றேன். அவரது மறைவிற்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

புதுச்சேரி வானொலி நிலையத்தில் ஆசிரியராகப் பணியாற்றிய அவர்; சுமார் 50 நூல்கள் எழுதி புதுச்சேரி தமிழ்ச் சங்கத்தின் தலைவராக இருந்து- அச்சங்கத்திற்குச் சொந்தக் கட்டடம் கட்டியவர். தமிழக அரசின் திரு.வி.க விருது, கலைமாமணி விருது, புதுச்சேரி அரசின் தமிழ்மாமணி, கலைமாமணி விருது உள்ளிட்ட பல விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்ட அவர், சிறந்த எழுத்தாளர், கவிஞர் - அனைவரையும் கவர்ந்த மிகச் சிறந்த பேச்சாளர்!


நமக்கெல்லாம் புரட்சிக் கவிதைகள் தந்த பாவேந்தர் பாரதிதாசனின் வாழ்க்கை வரலாற்றை முதன் முதலில் வெளியிட்ட அவர், பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோருடன் மிக நெருக்கமான நட்பு பாராட்டியவர்.

Also see:
இந்திய விடுதலைப் போராட்டத் தியாகியும், மொழிப் போராட்டத்தில் பங்கேற்று சிறைச் சென்றவருமான அவரது மறைவு நாட்டிற்கும், இலக்கியம் மற்றும் தமிழ்கூறும் நல்லுலகிற்கும் தாங்க முடியாத - ஈடு கட்ட முடியாத பேரிழப்பாகும்.

மன்னர் மன்னன் அவர்களை இழந்து வாடும் அவரது மகன்கள், மகள் ஆகியோருக்கும் - உறவினர்களுக்கும், இலக்கிய ஆர்வலர்களுக்கும் - கவிஞர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
First published: July 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading