• HOME
 • »
 • NEWS
 • »
 • tamil-nadu
 • »
 • ஜல்லிக்கட்டின் நிஜ நாயகர்கள் இளைஞர்கள்தான்... ஓபிஎஸ், மோடி இல்லை - மு.க.ஸ்டாலின்

ஜல்லிக்கட்டின் நிஜ நாயகர்கள் இளைஞர்கள்தான்... ஓபிஎஸ், மோடி இல்லை - மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

ஜல்லிக்கட்டின் நிஜ நாயகர்கள் இளைஞர்கள்தான்‌, இதில் எந்த அரசியல் தலைவர்களுக்கு பங்கு இல்லை என்றும், ஜல்லிக்கட்டு நாயகன் ஓபிஎஸ், மோடி என்று கூறி கொச்சைப் படுத்தாதீர்கள் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

 • Share this:
  ஜல்லிக்கட்டின் நிஜ நாயகர்கள் இளைஞர்கள்தான்‌, இதில் எந்த அரசியல் தலைவர்களுக்கு பங்கு இல்லை என்றும், ஜல்லிக்கட்டு நாயகன் ஓபிஎஸ், மோடி என்று கூறி கொச்சைப் படுத்தாதீர்கள் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

  தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சராத்தில் ஈடுபட்டார். அப்போது பேசுகையில், “தேர்தலுக்காக மட்டும் ஓட்டு கேட்பதற்கா நான் இங்கு வரவில்லை, உங்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் எப்பொதும் நான் ஓடோடி வருவேன். போடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் தங்கதமிழ்செல்வனுக்குவாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும். எதையும் வெளிப்படையாக பேசுபவர் தங்கத்தமிழ்செல்வன், வெள்ளை மனம் படைத்தவர் தங்க தமிழ்செல்வன். ஏனென்றால் எதிர்த்து நிற்கும் அதிமுக வேட்பாளர் (ஓபிஎஸ்) அவ்வாறு கிடையாது.

  13வயதில் திருவாரூர் பள்ளியில் மாணவனாக படித்துக் கொண்டிருந்த கலைஞர் கருணாநிதி, இந்தி மொழி திணிப்பிற்கு எதிராக மாணவர்களை திருட்டி போராடியவர். அவ்வாறு நானும் மாணவப் பருவத்தில் இருந்து திமுகவில் இணைந்து பணியாற்றி வருகிறேன். சட்டமன்ற உறுப்பினர், சென்னை மேயர், உள்ளாட்சி தலைவர், துணை முதலமைச்சர் என வளர்ந்து தற்போது எதிர்க்கட்சித் தலைவராக உள்ளேன். நாளை என்னவாக இருப்பேன் என உங்களுக்கு தெரியும்.

  இதே போடியில் பரப்புரை செய்த முதலமைச்சர் பழனிசாமி தோல்வி பயத்தில் ஏதேதோ பேசி வருகிறார். பதவிக்காக ஊர்ந்து சென்றார் என சமூக வலைதளங்களில் வந்த கருத்துக்களைத் தான் கூறினோம். ஆனால் அதை ஏற்காமல் நான் பல்வியா, பாம்பா என கேட்கிறார்.

  இதே போடியில் பரப்புரை செய்த முதலமைச்சர், ஓபிஎஸ்-ஸை இறைவன் தந்த கொடை என கூறியிருக்கிறார். இது அவரை தேனி மாவட்டத்த்தை விட்டு வேறு எங்கும் வரவேண்டாம் என்பதற்காகவே அவ்வாறு தெரிவித்தார். ஆனால் அது புரியாத ஓ.பன்னீர்செல்வம் தன்னை புகழ்வதாக பெருமிதம் கொள்கிறார்.

  முதலமைச்சர் சொல்கிறார், அதிமுகவிற்கு துரோகம் செய்தவர்கள் டெபாசிட் இழக்க வேண்டும் என்று, நிஜத்தில் ஓபிஎஸ்தான் துரோகம் செய்துள்ளார். ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறிய ஓபிஎஸ் தற்போது வரை விசாரணை கமிஷனில் ஆஜராகவில்லை.

  முல்லைப் பெரியாறு அணை விவகாரம், நியூட்ரினோ ஆய்வகம், 18ஆம் கால்வாய் தூர்வாருதல், குரங்கனி டாப் ஸ்டேஷன், மாம்பழக் கூழ் தொழிற்சாலை உள்ளிட்ட எந்தவித தேர்தல் அறிக்கையும் ஓபிஎஸ் நிறைவேற்றவில்லை. ஆனால் பக்கம் பக்கமாக நாளிதழ்களில் விளம்பரம் தருகிறார். மேலும் டிவிக்களிலும் நடித்து வருகிறார்.

  அதிமுகவிற்குள் இருக்கும் கோஷ்டி பூசலை மறைத்து தேர்தலுக்காக நாடகம் ஆடி வருகிறார்கள். உள் ஒதுக்கீடு சட்டம் இயற்றப்பட்ட போது சட்டமன்றத்தில் அமைதியாக இருந்த ஓபிஎஸ், நேற்று முன்தினம் தி இந்து நாளிதழக்கு அளித்த பேட்டியில், 10.5 சதவீத இட ஒதுக்கீடு தற்காலிகமானது‌ என்று கூறியுள்ளார். இதே கருத்தை தான் அமைச்சர் ஆர்‌.பி. ‌உதயகுமாரும் கூறுகிறார். ஆனால் பாமக தலைவர் ராமதாஸ் முதலமைச்சரிடம் பேசியதாக்கூறி, இது நிரந்தரமானது என்று கூறுகிறார். தேர்தலுக்காக இவ்வாறு மக்களிடம் நாடகம் ஆடி வருகிறார்கள். திமுக ஆட்சி அமைத்ததும் சரியான முறையில் இட ஒதுக்கீடு வழங்கப்படும்.

  தேர்தல் பிரச்சாரத்திற்கு தமிழகம் வந்த பிரதமர் நரேந்திர மோடி பொய் பேசி வருகிறார். அந்த மேடையில் ஓபிஎஸ் கூறுகிறார். நிஜ ஜல்லிக்கட்டு நாயகன் மோடி என்று. ஆனால் ஜல்லிக்கட்டின் நிஜ நாயகர்கள் இளைஞர்கள்தான்‌. இதில் எந்த அரசியல் தலைவர்களுக்கு பங்கு இல்லை. தயவு செய்து ஜல்லிக்கட்டு நாயகன் ஓபிஎஸ், மோடி என்று கூறி கொச்சைப் படுத்தாதீர்கள்.

  தேர்தல் கருத்துக்கணிப்புகளில் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்று, ஒரு இடத்தில் கூட அதிமுக வெற்றி பெறக் கூடாது. எதற்காக என்றால், நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. ஆனால், தேனியில் மட்டும் அதிமுக வெற்றி பெற்றுள்ளது‌. ஆனால் அதிமுக எம்‌.பி. ஓ.பி.ரவீந்திரநாத் நாடாளுமன்றத்தில் அடிமையாக உள்ளார். அவரது லெட்டர் பேடில் கூட மோடியின் படம்தான் உள்ளது.

  வேளாண் சடங்குகளுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் போராடினார். ஆனால் பிரதமர் மோடி அவர்களை சந்திக்கவில்லை. நான் ஒரு விவசாயி எனக் கூறும் தமிழக முதலமைச்சர் பழனிசாமியும் விவசாயிகளை சந்திக்க வில்லை. உண்மையில் முதலமைச்சர் பழனிசாமி விவசாயி அல்ல, விஷ வாயு. மீண்டும் இவர்கள் ஆட்சிக்கு வரப்போவது போல அதிமுகவினர் வாக்குறுதிகளை அளித்து வருகின்றனர். போகிற போக்கில் ஹெலிகாப்டர் கூட தருவோம் என்று சொன்னால் கூட ஆச்சரியப் படுவதற்கில்லை. அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள 3,60,000 பணியிடங்களுக்கு தமிழ்நாட்டை சார்ந்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும்.

  தமிழகத்தில் மீண்டும் கொரோனா இரண்டாம் அலை உருவாக உள்ளது. ஆனால் மக்கள் யாரும் கவலைப் படுவதில்லை. இங்கு உள்ளவர்கள் யாரும் மாஸ்க் போடவில்லை ‌.வேட்பாளர்களும் அணியவில்லை. ஏன் நான் கூட அணியவில்லை தான்‌‌. இருந்தாலும் நான் தனியாக நிற்கிறேன். ஆனால் நீங்கள் எல்லாம் கூட்டமாக நிற்கிறீர்கள். தயவு செய்து விதிமுறைகளை பின்பற்றுங்கள். தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள். அது உடலுக்கு நல்லது ‌.நான் ஏற்கனவே போட்டுள்ளேன்.

  போடியில் மாம்பழக் கூழ் தொழிற்சாலை, கேரள அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி கண்ணகி கோட்டம் சீரமைக்கப்படும். தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இதய தமனி அறுவைச் சிகிச்சை மையம் ஏற்படுத்தப்படும். தேனியில் திராட்சை கிட்டங்கு, முருங்கைக்காய் கிட்டங்கு உள்ளிட்ட தேனி மாவட்ட மக்களின் கோரிக்கைகள் ஐந்தாண்டுகளில் நிறைவேற்றப்படும்.

  Must Read : கடந்த 68 ஆண்டுகளில் இல்லாத அளவு சென்னையில் நேற்று கடுமையான வெயில்

   

  எனவே தேனி மாவட்டத்தில் உள்ள திமுக வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்யுங்கள்‌. தற்போது எனக்காக உங்களிடம் வாக்கு கேட்கிறேன். முதல்வர் வேட்பாளராக உள்ள நான் வெற்றி பெறுவதற்கு உதயசூரியனுக்கு வாக்களியுங்கள்.” இவ்வாறு பேசினார் மு.க.ஸ்டாலின்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Suresh V
  First published: