சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில்,
திமுக பொதுக்குழு உறுப்பினர் புழல் நாராயணன் மகன் திருமண நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், நீண்ட காலமாக கழகத்திற்காக பணியாற்றிவர் புழல் நாராயணன் என்று பேசிய அவர், தொண்டர்கள் இல்லை என்று சொன்னால் இங்கு நான் இல்லை, அவர்களின் உழைப்பால் தான் இந்த இயக்கம் கம்பீரமாக உள்ளது எனவும், சுயமரியாதையோடு திராவிட உணர்வோடு நம் பணி தொடர்ந்து இருந்து வருகிறது என்றும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், உள்ளாட்சித் தேர்தலில், வரலாற்றில் பதிய வேண்டிய மிகப்பெரிய வெற்றி, இதுவரையும் நாமே இந்த வெற்றி பார்த்ததில்லை எனவும், அப்படிப்பட்ட வெற்றியை நாம் பெற்றிருக்கிறோம் எனவும் அந்த வெற்றியை மனதில் வைத்து உள்ளாட்சி பிரதிநிதிகள் அவர்களின் கடமையாற்ற வேண்டும் என்று கூறினார்.
மேலும், ஆளும் கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் தொடர்ந்து மக்களுக்கான பணியை ஆற்றி வருகிறோம். கடந்த காலங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாததால் தான் மக்கள் பல இன்னல்களுக்கு ஆளாகி இருந்தார்கள். தற்போது, நமக்கு ஏதாவது ஆபத்து என்றால் திமுக காரன் ஓடிவருவான் என்றுதான் மக்கள் நம்பி நமக்கு வாக்களித்திருக்கிறார்கள் என்றார்.
கொரொனா காலத்தில் எதிர்கட்சி தலைவராக இருந்த போது உடனடியாக அரசியல் நோக்கம் இல்லாமல் உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுங்கள் என்று அப்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு தெரிவித்திருந்தேன், அவர் நீங்கள் என்ன டாக்டரா என்று என்னை பார்த்து கேட்டார்.
Read More : தொடரும் போர்... உக்ரைனில் உள்ள இந்திய தூதரகத்தை போலந்துக்கு மாற்ற முடிவு
அதுவே திமுக ஆட்சிக்கு வந்த போது கொரோனா எந்த அளவில் இருந்தது என்று உங்கள் எல்லோருக்கும் தெரியும், ஆனால் தற்போது உலக அளவில் கொரொனாவை முழுமையாக வென்றெடுத்து இருக்க கூடிய நாடு தமிழகம் என்ற நிலைமை உருவாகியுள்ளது. மக்கள் பணிக்கு சிறந்த ஆட்சி திமுக என்று விளங்கியுள்ளது.
Must Read : திராவிட மாடல் ஆட்சி... பாஜக ஆட்சியை அசைத்துப் பார்க்கின்ற சக்தி மு.க.ஸ்டாலினுக்கு உண்டு - அமைச்சர் ரகுபதி
இந்த நாட்டில் வைதிக திருமணத்தை நடத்திவைக்கும் புரோகிதர்களுக்கு கிராக்கி இருக்கிறதோ இல்லையோ ஆனால் சீர் திருத்த திருமணத்தை நடத்திவைக்கும் இந்த (தன்னை குறிப்பிட்டு) புரோகிதருக்கு கிராக்கி அதிகம் ஏற்பட்டிருக்கிறது. மணமக்கள் தங்களது குழந்தைகளுக்கு தமிழ் பெயரை சூட்டுங்கள், தமிழ்நாட்டுக்கு பெருமை சேருங்கள், தமிழர் என்ற உணர்வைப் பெறுங்கள் என்று மு.க.ஸ்டாலின் அப்போது தெரிவித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.