திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சிஎன்என் நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு மின்னஞ்சல் வாயிலாக பிரத்யேக பேட்டியளித்துள்ளார். அதில் புதிய கல்வி கொள்கையை ஏன் திமுக எதிர்க்கிறது என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள ஸ்டாலின், புதிய கல்விக் கொள்கையில் மாநிலங்களின் உரிமை அப்பட்டமாக மறுக்கப்பட்டுள்ளதாகவும், பிற மொழிகளை வலிந்து திணிக்கும் போக்கு இருப்பதாகவும் கூறியுள்ளார்.
இருமொழிக் கொள்கை நடைமுறையில் உள்ள தமிழகத்தில் இந்தி- சமஸ்கிருதத்தை திணிக்கக் கூடாது எனவும் கூறினார். நீட் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், கிராமப்புற மாணவர்களின் முன்னேற்றத்தை தகர்த்து, சமுகநீதியையும் சிதைத்துவிட்டதாக சாடினார்.
பாஜகவுடன் தொடர்பில் உள்ள பலர், நீட் தேர்வு பயிற்சி மையங்கள் நடத்துவதாகவும், அதன்மூலம் கட்டண கொள்ளைக்கு நீட் தேர்வு வழிவகுத்திருப்பதாகவும் கூறினார். எனவே இத்தேர்வு என்பதே மோசமான கொலை, கொள்ளைத் திட்டம் என சாடியுள்ளார்.
மத்திய அரசின் அனைத்துத் திட்டங்களையும் ஏன் எதிர்க்க வேண்டும் என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு, மத்திய அரசு கொண்டுவரும் பெரும்பாலான திட்டங்கள் எல்லோரையும் ஒதுக்கி வைக்காமல் அனைவரது நலனுக்கும் உகந்ததாக இருப்பதில்லை என சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி போன்றவைகளால் ஏழை, நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டதாகவும், மாநிலங்களின் நிதி வருவாய் பறிக்கப்பட்டிருப்பதாகவும் விமர்சித்தார்.
பெரும்பான்மை மக்கள் ஆதரவுடன் தான் இத்திட்டங்கள் கொண்டுவரப்படுவதாக பாஜகவினர் கூறும் விளக்கத்துக்கு பதில் கூறிய ஸ்டாலின், மாநில உரிமைகளை மறுப்பது தான் பெரும்பான்மை அரசா என வினவியுள்ளார்.
Also read... நீட் விவகாரம் - முதலமைச்சர், எதிர்கட்சி தலைவர் காரசார விவாதம்!
தமிழக சட்டப்பேரவையின் நீட் தேர்வு ரத்து தீர்மானம் எங்கே இருக்கிறது என மத்திய அமைச்சர் தெரிவித்து இருப்பதற்குப் பெயர் தான் பெரும்பான்மை அரசா? எனவும் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
ஜனநாயக சக்திகள் அனைவரும் தேசத்துரோகிகள், அர்பன் நக்சல், ஆன்டி இந்தியன் என முத்திரை குத்தப்படுவதாகவும், சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற தன்னாட்சி அமைப்புகளின் வரிசையில் தற்போது போதை தடுப்புப் பிரிவையும் அரசியல் பழிவாங்கலுக்கு பயன்படுத்துவது என்ன ஜனநாயகம் எனவும் கேள்வி எழுப்பினார். பெரும்பான்மையின் பலத்தை கொண்டு எதிர்க்குரலை அடக்கிட கூடாது எனவும் ஸ்டாலின் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.