தமிழக சட்டப்பேரவையில் காவல் மற்றும் தீயணைப்புத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்திற்கு முதலமைச்சர் மு.க.
ஸ்டாலின் பதில் அளித்துப் பசுகையில், மறைந்த முதலமைச்சர்
ஜெயலலிதா முகாம் அலுவலகமாக செயல்பட்ட கோடநாடு வழக்கை நடத்துவோம் என்றும், உண்மைக் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் தப்பிக்க முடியாது எனவும் கூறினார்.
இது குறித்து மு.க.ஸ்டாலின் பேசுகையில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா முகாம் அலுவலகமாக செயல்பட்ட கோடநாடு பங்களாவில் நடைபெற்ற கொள்ளை, கொலை சம்பவங்களில் தொடர்புடையோர் கைது செய்யப்பட எவ்வளவு காலம் ஆனது என்பதையும் சற்று நீங்கள் எண்ணிப் பார்த்திட வேண்டும். காவல் துறை மானியக் கோரிக்கை விவாதத்தின்போது கடந்த 9ஆம் தேதியன்று பேசிய எதிர்க்கட்சித் தலைவர், ‘கோடநாடு வழக்கை நடத்துங்கள், வேண்டாமென்று சொல்லவில்லை; புது விசாரணை செய்யுங்கள், நாங்கள் வேண்டாமென்று சொல்லவில்லை’ என்று சொன்னார்கள். அதற்காக நான் அவருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
கோடநாடு வழக்கை நடத்துவோம். உண்மைக் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் தப்பிக்க முடியாது என்பதை இந்த மாமன்றத்திற்கு நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். வழக்கு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது; வேண்டுமென்றே திட்டமிட்டு எங்கள்மீது குற்றம்சாட்டுவதைத் தவிர்க்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் அன்றைக்கு சொன்னார். கோடநாடு வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும்போது இந்த அவையிலே கோடநாடு வழக்கு பற்றி முதலில் பேசியது யார்? எதிர்க்கட்சித் தலைவர் தான்.
ஆகஸ்டு 18ஆம் தேதி இந்த அவையில், அந்தப் பிரச்சினையைக் கிளப்பினார்கள்; வெளிநடப்பு செய்தார்கள். வழக்கு முடியும் தருவாயில் இருக்கும்போது எதற்காக மேல் விசாரணை செய்ய வேண்டுமென்று பேட்டியும் கொடுத்தார். என்னைப் போன்றவர்களுக்கே திமுக ஆட்சியில் பாதுகாப்பில்லை என்றும் பேட்டியளித்தார்கள். மறுநாள் ஆகஸ்டு 19ஆம் தேதி அன்று தமிழக ஆளுநரை சந்தித்து எதிர்க்கட்சித் தலைவர் மனுவும் கொடுத்திருக்கிறார்.
நிர்பந்தம் காரணமாக காவல் துறையினர் மேல் விசாரணை நடத்துகிறார்கள் என்று குற்றம் சாட்டியிருக்கிறார். முடியும் தருவாயில் உள்ள வழக்கை மீண்டும் எதற்காக விசாரணை செய்கிறார்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் கேட்டார்கள். அதாவது, நீதிமன்றத்தில் உள்ள வழக்கை சட்டமன்றத்தில் எழுப்பியது யார்? நாங்களல்ல என்பதையும் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன் இவ்வாறு முதலமைச்சர் கூறினார்.
Must Read : நீட் வைத்து அரசியல் செய்யாதீர்கள்.. தைரியம் இருந்தால் வெள்ளை அறிக்கை விடுங்கள் -முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை சவால்
அதனைத் தொடர்ந்து பேசிய எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, கோடநாடு வழக்கு நடக்கிறது. நீதிமன்றத்தில் நடப்பதை பற்றி நான் சொல்லவில்லை. ஆனால் குற்றம்சாட்டப்பட்ட ஒருவரை போலீசார் விசாரித்தபோது அவர் என் பெயரை குறிப்பிட்டதாக செய்திகள் வந்தது. அந்த செய்தியை தங்களின் கவனத்திற்கு கொண்டு வருவதற்காக தான் தெரிவித்தேன். வழக்கு சம்பந்தமாக எந்த கருத்தையும் நான் தெரிவிக்கவில்லை என்று கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.