தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அதிமுக அரசு தகுதி அடிப்படையில் வேலை வழங்கவில்லை என்று கூறிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இவர்களுக்கு தகுதி அடிப்படையில் வேலை வழங்கப்படும் என்று கூறினார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம், கோவில்பட்டி, விளாத்திகுளம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக மற்றும் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி சிதம்பர நகரில் பிரச்சாரம் செய்தார்.
அப்போது பேசிய ஸ்டாலின், “எப்படிப்பட்ட நிலையிலும் உங்களோடு இருப்பேன் என்ற உரிமையில் வாக்கு கேட்டு வந்துள்ளேன். 50 ஆண்டுகளாக மக்கள் பனி செய்து வருகிறேன். கோவில்பட்டியில் திமுக வேட்பாளரை எதிர்த்து நிற்பவா்கள் டெபாசிட் வாங்கக் கூடாது.
கலைஞர் தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஏற்கனவே பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி உள்ளார். இதுபோன்று திட்டங்களை சொல்லி தமிழக மக்களிடம் எடப்பாடி பழனிச்சாமி வாக்குகள் கேட்க முடியுமா? ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக காந்திய வழியில் போராடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது தமிழக அரசு. மத்திய பாஜக அரசும் தமிழக அரசும் இணைந்து திட்டமிட்டு துப்பாக்கிச் சூடு நடத்தியது.
இந்த துப்பாக்கிச் சூட்டின்போது, நான் தூத்துக்குடிக்கு வந்தேன் அப்போது தூத்துக்குடியை கலவர பூமியாக காட்சியளித்தது. ஆனால், முதல்வர் பழனிசாமியிடம் இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு ‘அப்படியா நான் டிவியில் பார்த்தேன் எனக்கு தெரியாது’ என்று பதில் அளித்தார்.
துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அதிமுக அரசு தகுதி அடிப்படையில் வேலை வழங்கவில்லை. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இவர்களுக்கு தகுதி அடிப்படையில் வேலை வழங்கப்படும். ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு குறித்து சிபிஐ விசாரணை முறையாக நடக்கவில்லை. பாஜக அரசு சிபிஐயை முடக்கி வைத்துள்ளது. ஒரு நபர் விசாரணை ஆணையம் இதுவரை விசாரணை குறித்து அறிக்கை கொடுக்க வில்லை.
அதிமுக ஆட்சியில் சாத்தான்குளத்தில், தந்தை மகனை இந்த அரசு அடித்துக் கொலை செய்தது. ஆனால் முதலமைச்சர் பழனிசாமி காவல்துறையினர் தாக்கியதில் அவர்கள் உயிரிழக்கவில்லை அவர்களுக்கு ஏற்கனவே உடல்நலக்குறைவு இருந்தது என்று தெரிவித்தார்.
கடம்பூர் ராஜு கோவில்பட்டியை போன்று புதிதாக ஒரு ஊரை உருவாக்கும் அளவிற்கு பணத்தை கொள்ளையடித்து வைத்துள்ளார்.
Must Read : ‘தமிழ்நாட்டில் மோடி மஸ்தான் வேலைகள் எடுபடாது’ - மு.க.ஸ்டாலின்
தேசிய மீனவர் ஆணையம் அமைத்திட திமுக நடவடிக்கை எடுக்கும். தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களின் பணி நிரந்தரம் செய்யப்படும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.