• HOME
 • »
 • NEWS
 • »
 • tamil-nadu
 • »
 • நீட் தேர்வு நடத்துவது குறித்து மறு பரிசீலனை செய்யுங்கள் - பிரதமரிடம் மு.க. ஸ்டாலின் கோரிக்கை

நீட் தேர்வு நடத்துவது குறித்து மறு பரிசீலனை செய்யுங்கள் - பிரதமரிடம் மு.க. ஸ்டாலின் கோரிக்கை

நரேந்திர மோடி - மு.க.ஸ்டாலின்

நரேந்திர மோடி - மு.க.ஸ்டாலின்

கொரோனாவை எதிர்த்து போராட ரூ .23,000 கோடி அவசரகால நிதி தொகுப்பை இந்திய அரசு அறிவித்துள்ளது.

 • Share this:
  கொரோனா பரவல் நிலவரம் தொடர்பாக தமிழகம் உள்ளிட்ட 6 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அந்த கூட்டத்தில், தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசிகள் வேண்டும் என்றும் நீட் தேர்வு நடத்துவது குறித்து மறு பரிசீலனை செய்யுங்கள்  எனவும்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.

  பிரமர் நரேந்திர மோடியுடனான 6 மாநில முதலமைச்சர்கள் நடத்திய கூட்டத்தில். தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, ஒடிசா, மகாராஷ்டிரா மற்றும் கேரளா ஆகிய மாநில முதலமைச்சர்கள் பங்கேற்று, கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடல் நடத்தினர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  அந்த கூடத்ததில் பிரதமர் மோடி பேசுகையில், கடந்த சில நாட்களாக 6 மாநிலங்களில் மட்டும் 80 சதவீத கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. உருமாற்றம் அடைந்து வரும் வைரஸ்களின் அபாயம் அதிகமாக இருக்கும். நோய் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் கூடுதலாக கவனம் செலுத்தப்பட வேண்டும். கொரோனா 3ஆவது அலை ஏற்படாதவாறு செயல்பட வேண்டும். ‘டெஸ்ட்-ட்ராக்-ட்ரீட்-தடுப்பூசி’ அணுகுமுறையை மையமாகக் கொண்டு நாம் முன்னேற வேண்டும்.

  கொரோனாவை எதிர்த்து போராட ரூ .23,000 கோடி அவசரகால நிதி தொகுப்பை இந்திய அரசு அறிவித்துள்ளது. சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்த இந்த தொகுப்பில் இருந்து வரும் நிதியை மாநிலங்கள் பயன்படுத்த வேண்டும். உள்கட்டமைப்பு இடைவெளிகளை நிரப்ப வேண்டும். கிராமப்புறங்களிலும் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் உள்ளது” என்றார்.

  இந்த கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து பங்கேற்றார். அப்போது பிரதமரிடம் பேசிய ஸ்டாலின், தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசிகள் வேண்டும் என்றும், கொரோனா பரவல் அச்சம் இருக்கும் இந்த சூழ்நிலையில், நீட் தேர்வு நடத்த வேண்டாம் என்றும், நீட் தேர்வு நடத்துவது குறித்து மறு பரிசீலனை செய்யுமாறும் கேட்டுக் கொண்டார்.

  கூட்டத்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆற்றிய உரையின் முழு விவரம் :

  மாண்புமிகு பிரதமர் அவர்களே, பிற ஒன்றிய அமைச்சர் பெருமக்களே, மாண்புமிகு மாநில முதலமைச்சர்களே, ஒன்றிய, மாநில அரசுகளின் மூத்த அலுவலர்களே, வணக்கம்!

  கொரோனா தடுப்புப் பணிகளில் இருந்து தாங்கள் பெற்ற மேலான அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதற்காக உங்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கொரோனா பெருந்தொற்றைச் சமாளிக்கும் கடினமான பணியைப், புதிதாகப் பொறுப்பேற்ற ஓர் அரசு எதிர்கொள்ள வேண்டிய நிலை இருந்த ஒரே பெரிய மாநிலம் தமிழ்நாடுதான். எனது அரசு இந்த சவாலை எதிர்கொண்டு, உயிரிழப்புகளைக் குறைத்து, நோய்த்தொற்றைக் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளது.

  தமிழ்நாட்டுக்கான ஆக்சிஜன் மற்றும் ரெம்டெசிவர் ஒதுக்கீட்டை உயர்த்தி வழங்கியமைக்காக இந்திய அரசுக்கு முதற்கண் எனது நன்றியைத் தெரிவிக்க விரும்புகிறேன். மாண்புமிகு பிரதமர் அவர்களே, தங்களது நேரடித் தலையீட்டைக் கோரும் சில முக்கியமான விவகாரங்களை உங்கள் கனிவான கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன்.

  தடுப்பூசிகள் வீணடிக்கப்படுவதை, எமது அரசு 6 விழுக்காட்டில் இருந்து முழுமையாகக் தவிர்த்துள்ளதுடன், தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வையும் பெரிய அளவில் வெற்றிகரமாக ஏற்படுத்தியுள்ளது. இதனால், தற்போது தமிழ்நாட்டில் தடுப்பூசிக்கான தேவை மிகவும் அதிகரித்துள்ளது. எனினும், பிற மாநிலங்களை ஒப்பிடுகையில், எங்கள் மாநிலத்துக்கான ஒதுக்கீடு மிகவும் குறைவாகவே உள்ளது. இந்த நெருக்கடியைச் சமாளிக்க, சிறப்பு ஒதுக்கீடாக ஒரு கோடி தடுப்பூசிகளை வழங்கக் கோரியிருக்கிறேன். இந்த முக்கியமான பிரச்சினையில், நான் உங்கள் ஆதரவை எதிர்நோக்குகிறேன்.

  இரண்டு கோடி குடும்பங்களுக்கு, இரு தவணைகளில் 4 ஆயிரம் ரூபாயை கொரோனா நிவாரணத் தொகையாக கொடுத்துள்ளோம். மேலும், 14 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பையும் இந்தக் குடும்பங்களுக்கு வழங்கியுள்ளோம். ஒன்றிய அரசு முன்னுரிமை அட்டைதாரர்களுக்கு வழங்கும் கூடுதல் அரிசியை அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் தமிழ்நாடு அரசு விரிவுபடுத்தியுள்ளது. இதைப்போன்று, தகுதியுடைய அனைத்து அட்டைதாரர்களுக்கும் இத்திட்டத்தை ஒன்றிய அரசு விரிவுபடுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

  Must Read : தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது... 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் திங்கட் கிழமை வெளியாகிறதா?

  அடுத்ததாக, தற்போது நிலவும் சூழலைக் கருத்தில் கொண்டு, கொரோனா தொடர்பான அனைத்துப் பொருட்களுக்கும் சரக்கு மற்றும் சேவை வரியில் இருந்து விலக்கு அளிக்கவேண்டும் என்றும் ஒன்றிய அரசைக் கேட்டுக்கொண்டிருந்தேன். அதனைக் கனிவுடன் பரிசீலிக்கவும். மூன்றாம் அலை வரும் எனக் கூறப்படுகிற நிலையில், அதனைச் சமாளிப்பதற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். அதனை எதிர்கொள்வதற்கு ஏதுவாக, மாநிலங்களுக்கு மேலும் பல உதவிகளை ஒன்றிய அரசு வழங்கிட வேண்டும்.

  பள்ளி - கல்லூரிகள் மூடப்பட்டு இருக்கும் தற்போதைய சூழலில், நீட் போன்ற தேசிய அளவிலான தேர்வுகளை நடத்துவது தொற்றுப்பரவலுக்கு வழி வகுத்துவிடலாம். எனவே, மாண்புமிகு பிரதமர் அவர்கள் இம்முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும். இப்பெருந்தொற்றைக் கையாள்வதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் என உறுதியளிக்கிறேன். இதில் இருந்து மீள, உங்களோடும் அனைத்து மாநிலங்களோடும் நாங்கள் துணை நிற்போம்.  நன்றி, வணக்கம்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Suresh V
  First published: