இந்தியாவிலேயே முதல்முறையாக மாநில அரசு சார்பில் சென்னையில், உருமாறிய கொரோனா வைரஸ் எந்த வகையை சேர்ந்தது என்பதை ஆராய்ந்து கண்டறிவதற்காக அமைக்கப்பட்டுள்ள, மரபணு பரிசோதனை ஆய்வகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.
உருமாறிய கொரோனா வைரஸ் எந்த வகையை சேர்ந்தது என்பதை கண்டறியும் ஆய்வகங்கள் தமிழ்நாட்டில் இல்லாததால், அதனை கண்டறிய ஹைதராபாத் அல்லது புனேவில் உள்ள ஆய்வகங்களுக்கு கொரோனா பாதித்தவர்களின் மாதிரிகள் அனுப்பப்பட்டு வருகிறது. இதனால், சோதனை முடிவுகளை பெறுவதில் காலதாமதம் நிலவுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் உருமாற்றம் அடைந்த வைரஸை கண்டறியும் மரபணு பரிசோதனை ஆய்வகத்தை அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
அதன்அடிப்படையில் மருத்துவத்துறை சார்பில் 4 கோடி ரூபாய் செலவில் ஆய்வகம் அமைக்க சென்னை தேனாம்பேட்டை பொது சுகாதாரத்துறை இயக்குநர் வளாகத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டது. மேலும், அமெரிக்கா மற்றும் சிங்கப்பூரில் இருந்து தேவையான கருவிகள் கொண்டு வரப்பட்டு சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து மரபணு பரிசோதனை ஆய்வகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (செவ்வாய்க்கிழமை) திறந்து வைக்கிறார்.
இந்த ஆய்வகத்தில் ஒரு நேரத்தில் 1000 மாதிரிகளை பரிசோதனை செய்வதற்கான திறன் உள்ளது. இதன் முடிவுகள் ஒரு வாரத்துக்குள் கிடைத்து விடும். பல்வேறு கருவிகளை உள்ளடக்கிய இந்த யூனிட்டை இயக்குவதற்காக மாநில பொது சுகாதாரத்துறை ஆய்வகத்தின் சார்பில் 6 பேர் கொண்ட குழுவினர் பெங்களூருவில் பிரத்யேக பயிற்சியை முடித்து தயார் நிலையில் உள்ளனர். இவர்களுடன் பணிபுரிவதற்காக மேலும் 4 பேர் என மொத்தம் 10 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதனால், ஒவ்வொரு மாவட்டத்திலும் எந்த மாதிரியான உருமாறிய வைரஸ் உள்ளது? அதன் தன்மை என்ன? திடீரென ஒரே இடத்தில் கொத்துக் கொத்தாக பலருக்கு பரவும் தொற்று எந்த வகையை சேர்ந்தது என உடனுக்குடன் கண்டறிந்து அதற்கேற்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், சிகிச்சை முறைகளையும் கூட மாற்றியமைக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு மட்டுமல்லாமல், அண்டை மாநிலங்களில் இருந்து வரும் மாதிரிகளையும் பரிசோதிக்க முடியும். கொரோனா வைரஸ் மாதிரிகள் மட்டுமின்றி, டெங்கு, சிக்கன் குனியா குறித்தும், அதன் வீரியம் எவ்வாறு உள்ளது என்பது குறித்தும் இந்த மையத்தில் ஆய்வு செய்ய முடியும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
Must Read : தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளை பார்த்து வியந்த மகாராஷ்டிரா சுகாதாரத்துறை அமைச்சர்!
நாடு முழுவதும் கொரோனா வைரஸின் உருமாற்றத்தை கண்டறியும் 10 ஆய்வகங்கள் செயல்பட்டில் உள்ளன. இந்த ஆய்வகங்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், முதல்முறையாக தமிழ்நாட்டில், மாநில அரசு சார்பில் மரபணு பரிசோதனை ஆய்வகம் திறக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CoronaVirus, Covid-19, MK Stalin