ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.. மே மாதத்தில் திறந்தது இதுவே முதல் முறை

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.. மே மாதத்தில் திறந்தது இதுவே முதல் முறை

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார் முதலமைச்சர்

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார் முதலமைச்சர்

Salem : மேட்டூர் அணையில் இருந்து நடப்பாண்டில் முன்னதாகவே தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், சுமார் 4 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது . இதனால் மேட்டூர் அணை கிடுகிடுவென உயர்ந்தது. இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 117 அடியாக உயர்ந்தது . இன்று காலை அணைக்கு 10 ஆயிரத்து 508 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் நீர் இருப்பு 89.94 டிஎம்சி ஆகும். குடிநீர் தேவைக்காக தற்போது வினாடிக்கு 1500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது.

மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டும் சூழல் ஏற்பட்டதால் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்க ஏற்பாடு செய்யப் பட்டது. இதனையடுத்து இன்று காலை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேட்டூர் அணை பகுதிக்கு வந்து, மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து வைத்தார். பின்னர் அணையின் மேல் பகுதியிலிருந்து மலர் தூவினார். அத்துடன், முதலமைச்சர் அணைப்பகுதியில் இருந்த விவசாயிகளை சந்தித்து அவர்களிடம் மனுக்களையும் பெற்று குறைகளையும் கேட்டறிந்தார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, மாவட்ட ஆட்சியர் கார்மேகம் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். தற்போது முதற்கட்டமாக மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு இருக்கிறது. இந்த நீர் மேட்டூர் அணையில் இருந்து வலது கரையில் உள்ள எட்டு கண் மதகு மூலம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது .

இதன் பிறகு சுரங்க மின்நிலையம் வழியே தண்ணீர் வெளியேற்றப்படும். மேட்டூர் அணை தற்போது 89 ஆவது முறையாக திறக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணை மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, கரூர், பெரம்பலூர், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உட்பட 12 காவிரி டெல்டா மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.

குறுவை, சம்பா, தாளடி ஆகிய முப்போக விளைச்சலுக்கு தண்ணீர் திறக்க உரிய தேதி ஜூன் 12.  ஜனவரி 28 ஆம் தேதி வரை 230 நாட்களுக்கு 330 டி.எம்.சி தண்ணீர் குறுவை, சம்பா, தாளடி பயிர்களுக்கு தேவைப்படும். பாசனப்பகுதிகளில் மழை பெய்தால் நீர்த் தேவை குறையும்.

மேட்டூர் அணை திறக்கப்பட்ட 88 ஆண்டு கால வரலாற்றில் உரிய நாளான ஜூன் 12 ஆம் தேதி 18 ஆண்டுகள் மட்டுமே பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. காலதாமதமாக 60 ஆண்டுகள் திறக்கப்பட்டது.  கடைசியாக 2020 மற்றும் 2021  இல் ஜூன் 12 ஆம் தேதி திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. நடப்பாண்டு உரிய தேதிக்கு முன்பாக  தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

அணையின் நீர் இருப்பும், வரத்தும் திருப்திகரமாக இருந்ததால் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ஜூன் 12-க்கு முன்பாக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. ஜூன் 12-க்குப் பிறகு 60 ஆண்டுகள் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாத காரணத்தால் தாமதமாகவே தண்ணீர் திறக்கப்பட்டது. கடந்த 2011 இல் அணையின் நீர் இருப்பும், வரத்தும் திருப்திகரமாக இருந்த காரணத்தால் விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று ஜூன் 12-க்கு முன்பாகவே தண்ணீர் திறக்கப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அணையின் நீர் இருப்பு திருப்திகரமாக இருப்பதால் நடப்பு நீர்பாசன ஆண்டில் மேட்டூர் அணையின் வரலாற்றில் 11 ஆவது ஆண்டாக முன்கூட்டியே காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. சுதந்திரத்திற்கு பிறகு மே மாதத்தில் திறந்தது இதுவே முதல் முறை.

உரிய நாளான ஜூன் 12 க்கு முன்பே இன்று குறுவை சாகுபடிக்கு நடப்பாண்டில் தண்ணீர் திறக்கப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். குறுவை பாசனம் மூலம் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மூன்று மாவட்டங்களில் 4,91,600 ஏக்கர் நிலமும், கடலூர் மாவட்டத்தில் 30,800 ஏக்கர் நிலமும் பாசன வசதி பெறும்.

Must Read : குரங்கு வைரஸ்.. அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் மருத்துவத்துறை செயலாளர் கடிதம்

மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்ததால், அணை மின்நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையம் மூலம் 250 மெகாவாட் மின்சாரமும், 7 கதவணைகள் மூலம் 300 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது, அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதன் மூலம் அணை மற்றும் சுரங்க மின் நிலையம் மூலம் 100 மெகாவாட் மின்சாரமும், 7 கதவணைகள் மூலம் 70 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்த நீர் மூன்று நாளில் கல்லணை சென்றடையும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by:Suresh V
First published:

Tags: Delta Farmers, Mettur Dam, MK Stalin, Salem