டெல்லியில் அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர்
மு.க.ஸ்டாலின், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்து பேசினார். அங்கு செயல்படும் அரசுப் பள்ளியை பார்வையிட்ட
ஸ்டாலின், அதன் நிர்வாக முறைகளை கேட்டறிந்தார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மூன்று நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். டெல்லி விமான நிலையத்தில் மேளதாள வாத்தியங்களுடன் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதை தொடர்ந்து நேற்று பிற்பகல் 1 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடியை நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் அறையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். இதன் பின்னர் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிதின் கட்காரி ஆகியோரையும் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பு தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமைச்சர்கள் உடனான சந்திப்பு மனநிறைவுடையதாக அமைந்தது. நான் கூறிய கோரிக்கைகளை பொறுமையுடன் பிரதமர் கேட்டறிந்தார். இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. எனவே, இலங்கை தமிழர்களுக்கு தமிழக அரசு சார்பில் உதவி செய்ய அனுமதி வழங்க வேண்டும். தமிழக மீனவர்களின் மீன்பிடி உரிமை, கட்சத்தீவு மீட்பது குறித்து கோரிக்கை வைத்துள்ளேன்.
உக்ரைனில் மருத்துவம் படித்த மாணவர்கள் இந்தியாவில் பயில்வது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்தேன். காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணையைக் கட்ட அனுமதி அளிக்கக்கூடாது. ஜிஎஸ்டி இழப்பை தொடர்ந்து வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வைத்தேன் என தெரிவித்தார்.
முக்கியமாக, நீட் பிரச்சனை தொடர்பாக பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரிடம் அழுத்தமாக வலியுறுத்தியதாகவும் ட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் ஆளுநர் காலதாமதம் செய்து வருகிறார் என்பதை தெரிவித்ததாகவும் மு.க.ஸ்டாலின் கூறினார்.
தனது 2வது நாள் அரசு முறை பயணத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு, தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், தலைமை செயலர் இறையன்பு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
இதைத் தொடர்ந்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்து பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், டெல்லி அரசுப் பள்ளியையும் பார்வையிட்டு அதன் நிர்வாக முறைகளை கேட்டறிந்தார். மேலும் டெல்லி அரசால் நடத்தப்படும் மொஹல்லா கிளினிக்கையும் முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார்.
இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா உள்ளிட்டோரும் அரசு உயர் அதிகாரிகளும் உடன் இருந்தனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.