Home /News /tamil-nadu /

திராவிட மாடல் அரசு ஓராண்டாக செய்தது என்ன? பட்டியலிட்ட முதல்வர் ஸ்டாலின்

திராவிட மாடல் அரசு ஓராண்டாக செய்தது என்ன? பட்டியலிட்ட முதல்வர் ஸ்டாலின்

முதலமைச்சர் ஸ்டாலின்

முதலமைச்சர் ஸ்டாலின்

கடந்த ஓர் ஆண்டு காலமாக திராவிட மாடல் அரசு கடந்த என்னவெல்லாம் செய்தது என்பதை பட்டியலிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    சுதந்திர  தினத்தை முன்னிட்டு முதல்வர் .ஸ்டாலின் அவர்கள் இன்று  சென்னை, தலைமைச் செயலகக் கோட்டை முகப்பில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து ஆற்றிய போது பல அறிவிப்புகளை வெளியிட்டார்

    அப்போது கடந்த ஓராண்டு காலத்தில் தமிழ்நாடு அடைந்த வளர்ச்சியை நீங்கள் பார்த்தால், அது ஒரே ஒரு துறை வளர்ச்சியாக இல்லாமல் பல்துறை வளர்ச்சியாக அமைந்திருக்கும் என தெரிவித்து திராவிட மாடல் அரசு கடந்த ஓர் ஆண்டு காலமாக என்னவெல்லாம் செய்தது என்பதை பட்டியலிட்டார்.
    பெண்கள் அனைவர்க்கும் கட்டணமில்லாப் பேருந்து வசதி தரப்பட்டுள்ளதன் மூலமாக பெண்களின் சமூகப் பங்களிப்பும், பொருளாதார விடுதலையும் தமிழ்நாட்டில் அதிகமாகி இருக்கிறது.
    ஓராண்டு காலத்தில் 153 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருக்கிறது. சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் ஏராளமாகத் தொடங்கப்பட்டுள்ளதன் மூலமாகத் தமிழகத்தின் தொழில் வளர்ச்சி பெருகி இருக்கிறது. ஏற்றுமதி, இறக்குமதி அதிகமாகி இருக்கிறது. பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக தமிழ்நாடு உயர்ந்துள்ளது.
    வேளாண்மைத் துறைக்காக தனி நிதிநிலை அறிக்கையைத் தந்தோம். வேளாண்மைக்கு கொடுத்த முக்கியத்துவத்தின் மூலமாக பாசனப் பரப்பு அதிகமாகி உள்ளது. இதன் மூலமாக விளைச்சல் அதிகமாகி உள்ளது. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் பெருகி வரும் மழையும் நமது நல்லாட்சிக்கு நற்றுணையாக இருக்கிறது.
    இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின் மூலமாக இலட்சக்கணக்கான குழந்தைகள் மீண்டும் கல்வி நிலையங்களை நோக்கி வரக்கூடிய கல்விப் புரட்சியை நிகழ்த்திக் காட்டி இருக்கிறோம்.
    மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் மூலமாக ஏழை எளிய கிராமப்புற மக்களுக்கு அவர்களது வீட்டைத் தேடிச் சென்று உயர்தர மருத்துவத்தை வழங்கி வருகிறோம். இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48 திட்டமானது மரணத்தைத் தொடும் மக்களைக் காப்பாற்றும் மகத்தான திட்டமாக அமைந்திருக்கிறது.
    எனது கனவுத் திட்டங்களில் ஒன்றுதான் நான் முதல்வன் திட்டம்! தமிழ்நாட்டு இளைஞர்கள் அனைவரையும் கல்வியால், அறிவால், ஆற்றலால், தனித்திறமையால் 'நான் முதல்வன்' என்று ஒவ்வொருவரையும் தலை நிமிர்ந்து செல்ல வைக்கும் திட்டம் ஆகும். கல்லூரிக் கனவு திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு விழாவை உலகமே வியக்கும் வகையில் நடத்திக் காட்டி இருக்கிறோம்.
    இதேபோன்ற விளையாட்டுப் போட்டிகளில் உலக அளவில் பங்குபெறும் வீரர்களையும், வீராங்கனைகளையும் தமிழகத்தில் தயாரித்து வருகிறோம். அதற்காக ஒலிம்பிக் வேட்டை நடந்து வருகிறது.
    புத்தக எழுத்தாளர்கள், அறிஞர்கள், பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள் மகிழ்ச்சி அடையும் வண்ணம் அறிவின் துறையானது செழிப்படைந்து வருகிறது.
    ஆலயங்களில் அன்னைத் தமிழ் மட்டுமல்ல, தகுதியுள்ளவர் அனைவரும் அர்ச்சகராகும் சமூகநீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. 2500 கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் சொத்துக்களை இந்த ஓர் ஆண்டில் மீட்டுள்ளோம்.
    சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக அனைத்துத் தொகுதிக்கும் சென்று பெற்ற மனுக்களில் நடைமுறைக்கு சாத்தியமான மனுக்களில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றிக் கொடுத்துள்ளோம். உங்கள் தொகுதியில் முதலமைச்சர், முதலமைச்சரின் முகவரி திட்டத்தின் மூலமாக சாதாரண, சாமானிய மக்கள் அனைவரின் கோரிக்கையும், என்னை வந்தடைய வழிவகை செய்யப்பட்டுள்ளது. அந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற தனித்துறை உருவாக்கப்பட்டுள்ளது.
    Published by:Raj Kumar
    First published:

    Tags: CM MK Stalin, Independence day

    அடுத்த செய்தி