இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 105 மீன்பிடி படகுகளை இலங்கை அரசின் மீன்பிடி மற்றும் நீரியல் வளத்துறை வருகின்ற பிப்ரவரி 7ஆம் தேதி முதல் 15ம் தேதி வரை ஏலத்தில் விடுவதற்கு முயற்சி செய்வதாக வந்த செய்தி அறிந்து கவலையையும் வேதனையும் அடைந்ததாக பிரதமர் நரேந்திர
மோடிக்கு முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
அந்த கடிதத்தில், நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் தாலுகா, புஷ்பவனம் கிராமத்தைச் சேர்ந்த 3 தமிழக மீனவர்கள், கடந்த 23ஆம் தேதி அன்று வேதாரண்யம் கடற்கரையிலிருந்து 16 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கையைச் சேர்ந்த அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டனர்.
அவர்களிடமிருந்து 300 கிலோ எடைகொண்ட மீன்பிடி வலை, தொலைத்தொடர்பு சாதனங்கள் மற்றும் 30 லிட்டர் டீசல் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. தாக்குதலுக்குள்ளான மீனவர்கள் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவ்வாறு அப்பாவி மீனவர்கள் மீது தொடர்ச்சியான தாக்குதல்கள் நடத்துவதன்மூலம், தமிழக மீனவர்களை, அவர்களது பாரம்பரிய பாக் வளைகுடா மீன்பிடி கடல் பகுதிகளுக்கு வரவிடாமல் தடுப்பதை இலக்காகக் கொண்டு இலங்கை செயல்படுவதை காண முடிகிறது. இதுபோன்ற தாக்குதல் சம்பவங்கள், நமது மீனவ மக்களின் வாழ்வாதாரத்திற்கு கடுமையான அச்சுறுத்தல்களை ஏற்படுத்தியுள்ளன. இந்த விவகாரத்தில் இந்திய அரசு வாய்மூடி மௌனமாக இருத்தல் கூடாது.
அதேபோன்று இலங்கை அரசின் கட்டுப்பாட்டிலுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 105 மீன்பிடிப் படகுகளை இலங்கை அரசின் மீன்பிடி மற்றும் நீரியல் வளத்துறை வரும் பிப்ரவரி 7 முதல் பிப்ரவரி 11 வரை ஏலத்தில் விடுவதற்கு முயற்சி செய்து வருகிறது.
Read More : இந்தி படிப்பதை யாரும் தடுக்கவில்லை - உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்!
இந்திய-இலங்கை கூட்டுப் பணிக்குழுவானது மீன்பிடித்தல் தொடர்பான பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கவிருக்கும் சூழ்நிலையில், இந்த ஏலம் விடுவதற்கான அறிவிப்பு நீண்டகாலமாக நிலுவையில் உள்ள இப்பிரச்னைக்கு சுமுகமான தீர்வு காண முன்வந்துள்ள தமிழக மீனவர்களுக்கு அதிர்ச்சியையும், அவநம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.
Must Read : தமிழக அரசு ஊழியர்களுக்கு 14% சதவீத அகவிலைப்படி உயர்வு; அரசாணை வெளியீடு
தமிழக மீனவர்கள் மீது இதுபோன்று தாக்குதல் நடத்தப்படுவதும், அவர்களது உடைமைகளை கொள்ளையடிக்கும் அல்லது சேதப்படுத்தும் இதுபோன்ற செயல்கள் எதிர்காலத்தில் நடைபெறாத வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள இலங்கை அரசுக்கு இந்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.