Home /News /tamil-nadu /

கல்வியை சிறுமைப்படுத்தும் பேச்சை காதில் போட வேண்டாம்: கல்லூரிக் கனவு திட்டத்தை தொடங்கிவைத்து முதல்வர் ஸ்டாலின் பேச்சு

கல்வியை சிறுமைப்படுத்தும் பேச்சை காதில் போட வேண்டாம்: கல்லூரிக் கனவு திட்டத்தை தொடங்கிவைத்து முதல்வர் ஸ்டாலின் பேச்சு

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

அனைவரும் படிக்க வேண்டும் என்பதற்காக உருவான இயக்கம்தான் நம்முடைய திராவிட இயக்கம் என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது. அதற்கான வாசற்படிதான் சமூகநீதி என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

    இந்தியாவிலேயே சிறந்த கல்விக் கொள்கை தமிழகத்தில் உள்ளது என்று பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கல்வியை சிறுமைப்படுத்தும் பேச்சை மாணவர்கள் காதில் போட்டுக்கொள்ள கூடாது என்றும் கேட்டுகொண்டார்.

    12ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கான உயர்கல்விக்கு வழிகாட்டும் “கல்லூரி கனவு” நிகழ்ச்சியை முதலமைச்சர் முக ஸ்டாலின் சென்னையில் இன்று தொடங்கிவைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின்,
    “கடந்த ஐந்தாறு நாட்களாக எனக்கு காய்ச்சல் ஏற்பட்டு, அதனால் உடல் சோர்வான நிலையில் இருந்த எனக்கு இந்த நிகழ்ச்சி அந்த சோர்வுகள் எல்லாம் நீங்கி, ஒரு புத்துணர்ச்சியையும் உற்சாகத்தையும் பெறக்கூடிய நிலையில் உங்கள் முன்னால் நின்று கொண்டிருக்கிறேன்.

    கள்ளம் கபடம் இல்லாத உங்கள் முகங்களில் இருக்கும் இந்த இயல்பான அழகுதான் இனிமையான அனுபவத்தைத் தருகிறது!
    இந்த மாநிலத்தின் முதலமைச்சராக மட்டும் நான் இந்த நிகழ்ச்சிக்கு வந்துவிடவில்லை; உங்களையெல்லாம் என்னுடைய சொந்தப் பிள்ளைகள் என்று கருதி அந்த உணர்வோடு உங்களை நான் வாழ்த்த வந்திருக்கிறேன்.

    மேற்படிப்புகள் என்னென்ன உள்ளன என்பது பற்றியெல்லாம் நீங்கள் இணையத்தைப் பார்த்து அறிந்துகொள்ளக்கூடிய சூழ்நிலை இப்போது வந்திருக்கிறது. இருந்தாலும், உங்கள் மதிப்பெண் அடிப்படையில் எந்தப் படிப்புகளைத் தேர்ந்தெடுக்கலாம், எதிர்கால வேலை வாய்ப்புகள் எப்படி இருக்கின்றன இதையெல்லாம் எடுத்துக் கூறி நாங்களும் உங்களுக்கு வழிகாட்டுவதற்கான வாய்ப்புதான், இந்த நிகழ்ச்சி. நாங்கள் ஏற்படுத்தியுள்ள இந்த வாய்ப்பை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதனை உங்களுக்கு உற்சாகம் ஊட்டக்கூடிய நிகழ்ச்சியாகவும்தான் நாங்கள் ஏற்பாடு செய்துள்ளோம்.
    இதையும் படிங்க: வாவ் சொல்ல வைக்கும் தமிழக அரசு வெளியிட்ட புதிய ரேஷன் கடைகளின் கட்டிட வடிவமைப்பு

    நீங்கள் உங்கள் வாழ்க்கையில், பள்ளிக் கல்வி என்ற ஒரு படியைத் தாண்டி, கல்லூரிக் கல்வியில் அடியெடுத்து வைக்கப் போகிறீர்கள். மாணவர்களாகிய நீங்கள்தான் இந்த மாநிலத்தின் அறிவுச் சொத்துக்கள்! உங்களை வளர்த்தெடுக்க வேண்டிய கடமை எங்களுக்கு இருக்கிறது. தமிழ்நாட்டு மக்களுக்கு நான் முதல்வராக இருக்கலாம். ஆனால் நீங்கள் அனைவரும் ஒவ்வொரு துறையிலும் முதல்வனாக விளங்க வேண்டும் என்ற பரந்த உள்ளத்தோடு, பரந்த எண்ணத்தோடு தொடங்கப்பட்ட திட்டம்தான், ‘நான் முதல்வன்’ என்கிற இந்தத் திட்டம்! அதன் ஓர் அங்கமாகத்தான் இந்த ‘கல்லூரிக் கனவு’ நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

    பன்னிரண்டாம் வகுப்பை முடித்தோம் - கல்லூரியில் சேர்ந்தோம் -
    பட்டம் வாங்கினோம் - வேலையில் சேர்ந்தோம் - கைநிறைய சம்பளம் வாங்கினோம் - என்பதோடு உங்கள் கடமை முடிந்துவிடுவது இல்லை. எத்தகைய ஆற்றல் படைத்தவர்களாக நீங்கள் உயர்ந்தீர்கள், அத்தகைய ஆற்றலை வைத்து இந்தச் சமூகத்தை எப்படி மேம்படுத்த முயன்றீர்கள் என்பதுதான் முக்கியம்.  இதுதான், 'நான் முதல்வன்' திட்டத்தின் உண்மையான நோக்கம்!
    மேலும் படிக்க: இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஆய்வு செய்யப்படும்... அமைச்சர் பொன்முடி

    பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்றேன் -மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் பெற்றேன் -மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்றேன் - என்று பெயர் எடுப்பது மட்டுமல்ல
    கல்வித் திறனில் முதல்வன் -அறிவாற்றலில் முதல்வன் -படைப்புத் திறனில் முதல்வன் -பன்முக ஆற்றலில் முதல்வன் -ஒருவரை மதிக்கத் தெரிந்தவன் -சமத்துவமாக நடக்கத் தெரிந்தவன் –
    அனைவரும் பின்பற்றும் பண்பாட்டு அடையாளம் கொண்டவன் -
    அனைவரையும் வழிநடத்தும் தலைமைத் திறன் பெற்றவன் –
    என்று தமிழ்நாட்டு இளைஞர்களை, மாணவர்களை உயர்த்தும் திட்டம்தான் இந்த நான் முதல்வன் என்கிற திட்டம்! அந்த இலக்கை அடையவே இந்தக் கல்லூரிக் கனவு நிகழ்ச்சியை நாம் இங்கே நடத்திக் கொண்டிருக்கிறோம்.

    கல்லூரிக் கனவு திட்டம்


    அரசுப் பள்ளியில் படித்து, பல துறைகளில் மிகச் சிறந்த ஆளுமைகளாக உருவாகியவர்கள் பெயரை, என்னால் இங்கு பட்டியலிட முடியும்.  அரசுப் பள்ளியில் படித்து, ஒவ்வொரு நாளும் செய்தித்தாளை விநியோகம் செய்தவர், இந்த நாட்டின் மிகச் சிறந்த குடியரசுத் தலைவர்களுள் ஒருவராக உருவானவர் தான் மிகச் சிறந்த விஞ்ஞானியாக இருந்த, ஏவுகணைத் தொழில்நுட்பம் முதல், பிரதமரின் அறிவியல் ஆலோசகர் உட்பட பலவற்றிலும் சிறப்பாகச் செயல்பட்டு, இறுதியாக மக்கள் குடியரசுத் தலைவர் என்று போற்றப்பட்ட, அப்துல் கலாம் அரசுப் பள்ளியில் படித்தவர்தான்.
    சந்திராயன் புகழ் மயில்சாமி அண்ணாதுரை அரசுப் பள்ளியில் படித்தவர்;

    இஸ்ரோ தலைவராக இருந்த சிவன் அரசுப் பள்ளியில் படித்தவர்!
    ஏன்! இந்த மேடையை அமர்ந்திருக்கக்கூடிய, வரவேற்புரை ஆற்றிய நம்முடைய தலைமைச் செயலாளர் அரசுப் பள்ளியில் படித்தவர். காவல்துறை தலைமை இயக்குநர் அரசுப் பள்ளியில் படித்தவர்தான்.
    அரசுப் பள்ளியில், அரசு உதவி பெறும் பள்ளியில் படித்து, அவரவர் துறையில் கோலோச்சிக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே அரசுப் பள்ளியில், தமிழ்வழியில் படித்தாலும், நிச்சயம் முன்னேற முடியும் என்பதற்கு, நம் கண்முன்னாலேயே மிகச் சிறந்த எடுத்துக்காட்டுகள் இருக்கிறார்கள்.

    அனைவரும் படிக்க வேண்டும் என்பதற்காக உருவான இயக்கம்தான் நம்முடைய திராவிட இயக்கம் என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது. அதற்கான வாசற்படிதான் சமூகநீதி!  அந்தச் சமூகநீதியை, இடஒதுக்கீட்டு உரிமையை சட்டமாக்கி வித்திட்டது, திராவிட இயக்கத்தின் தலைமகனான நீதிக்கட்சி!
    'எப்படியாவது படித்துவிடு -எங்காவது போய் முன்னேறி விடு' என்று தந்தை பெரியார் நம்முடைய கல்வி உரிமையை வென்றெடுக்க இந்தச் சமுதாயத்துக்கு எழுச்சியூட்டினார்.

    அவரால் ‘பச்சைத் தமிழர்’ என்று போற்றப்பட்ட பெருந்தலைவர் காமராசர் அவர்கள் தமிழகம் முழுவதும் பள்ளிகளைத் திறந்தார்.
    முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள், தமிழ்நாடு முழுவதும் கல்லூரிகளை, பல்கலைக்கழகங்களை உருவாக்கினார்.
    இன்று நாங்கள் உயர்கல்வியை, ஆராய்ச்சிக் கல்வியை ஊக்கப்படுத்தி வருகிறோம்.
    இதை படிக்க: புதிய ரேஷன் கார்டு வாங்க எங்கும் அலைய வேண்டாம்... இதை செய்தால் போதும், வீடு தேடி வரும்

    பள்ளிக் கல்வியாக இருந்தாலும், உயர்கல்வியாக இருந்தாலும், திறமை மற்றும் அறிவுசார் கல்வியாக அதனை மாற்றிக் காட்டி வருகிறது நம்முடைய தமிழ்நாடு அரசு. இந்தியாவில் மற்ற மாநிலங்களைவிட தமிழகம் உயர, இதுதான் காரணமாக அமைந்திருக்கிறது.  மிக அதிகளவு எழுத்தறிவு பெற்ற மாநிலமாக தமிழ்நாடு விளங்கிக் கொண்டிருக்கிறது.

    கல்வி அறிவு விகிதம் என்பது தேசிய சராசரியை விட அதிகம்!
    கல்வித் தரம் என்பதும் மற்ற மாநிலங்களை விட அதிகம்!
    கல்வியில் உயர்ந்த தமிழ்நாடாகத் தற்போது விளங்குகிறது!
    உலகமெங்கும் தமிழர்கள், உயர்ந்த பதவிகளில் அமர்ந்திருக்கிறார்கள். இதனை மேலும் மேலும் உயர்த்திக் கொண்டே போகவேண்டும். அதற்கான கல்விக் கொள்கையைத்தான் நாம் இதுநாள் வரை கடைப்பிடித்து வருகிறோம்.

    இந்திய துணைக் கண்டத்தில் உள்ள மாநிலங்களில்,  தமிழ்நாட்டுக்கு இணையான கல்விக் கொள்கை எந்த மாநிலத்திலும் இல்லையென்றே சொல்லலாம்! இதனை இன்னும் செம்மைப்படுத்தி, கல்வியில் சிறந்த தமிழ்நாடாக ஆக்குவதற்காகத் தீட்டப்பட்ட திட்டம்தான் ‘நான் முதல்வன் திட்டம்’. அந்தத் திட்டத்தின்படிதான் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    பன்னிரண்டாம் வகுப்பை முடித்திருக்கும் நீங்கள், அடுத்தக்கட்டத்துக்கு உயரப் போகிறீர்கள். பள்ளியில் இருந்து கல்லூரிக்கு உயரப் போகிறீர்கள்.

    கல்லூரியையும் – படிப்பையும், கவனமாகத் தேர்ந்தெடுப்பது எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியம், கல்லூரிக் காலத்தில், கவனத்தைச் சிதறவிடாமல் இருப்பதுதான் மிக முக்கியம். அந்த வகையில், நீங்கள் படிக்கும் ஒவ்வொரு நாளும், படிப்பில் கவனம் செலுத்துவது மட்டுமல்ல, நீங்கள் கல்லூரியில் அடியெடுத்து வைப்பதற்குக் காரணமான, உங்கள் பெற்றோரின் கனவையும் உழைப்பையும், நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

    பொறியியல், மருத்துவம் என்பது மிகச் சிறந்த படிப்புகள்தான். ஆனால், அந்த இரண்டு கனவுகளோடு மட்டும் நின்றுவிட வேண்டாம். இன்று வாய்ப்புகள் எல்லாத் துறைகளிலும் ஏராளமாகக் கொட்டிக் கிடக்கின்றன. ஒவ்வொரு துறையிலும் படித்து முன்னேறி, உழைப்பைக் கொடுத்து வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக இருக்கின்றன. ஆகவே, கிடைக்கின்ற வாய்ப்புகளைப் பயன்படுத்தி, அந்தந்தத் துறையில் மிகச்சிறந்த வல்லுநர்கள் ஆவதற்கு, கல்வி நிறுவனங்கள் அளிக்கும் பாடப்பிரிவுகள் குறித்தான ஒரு வழிகாட்டி நிகழ்ச்சிதான் இது. பல திறன்கள், தனித்திறன்கள் கொண்டிருக்கக்கூடிய சமுதாயத்தை உருவாக்குவதே நம் நோக்கம்.

    இந்த ‘நான் முதல்வன் - கல்லூரிக் கனவு’ நிகழ்ச்சியானது, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஜூன் 29, 30 மற்றும் ஜூலை 1, 2 ஆகிய நாட்களில் நடக்கப் போகிறது. தமிழகத்தில் ஏராளமான கல்வி நிலையங்கள் உள்ளன. இந்தியாவில் தலைசிறந்த கல்லூரிகளாக 100 கல்லூரிகளைத் தேர்வு செய்தால், அதில் 30 கல்லூரிகள் தமிழ்நாட்டில் தான் இருக்கிறது என்று நான் இங்கு பெருமையோடு பதிவு செய்ய விரும்புகிறேன். எனவே கல்லூரிப் பட்டம் என்பதை எளிதாக அனைவரும் பெறுவதற்கான வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன. ஆனால், அந்தப் பட்டத்தைத் தாண்டிய தனித்திறமை இருந்தால்தான் நீங்கள் தனித்து ஜொலிக்க முடியும், பிரகாசிக்க முடியும்.  அதற்கு தன்னம்பிக்கை வேண்டும். நம்மால் முடியும் என்ற தைரியம் வேண்டும். நல்ல மொழியாற்றல் வேண்டும்.
    தமிழ் மொழியாக இருக்கக்கூடிய நம்முடைய தாய்மொழியான தமிழிலும் உலக மொழியாக இருக்கக்கூடிய ஆங்கிலத்திலும் எழுத, பேச, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். அதே நேரத்தில் அது பகுத்தறிவாக இருக்கவேண்டும் என்பது தான் மிக மிக முக்கியம், அதை மறந்துவிடக் கூடாது.

    .
    உங்கள் வாழ்க்கைக்கு ஒளியேற்றுவதற்கான ஒரு வாய்ப்பை நான் பெற்றமைக்காக உள்ளபடியே பெருமைப்படுகிறேன், மகிழ்ச்சி அடைகிறேன், புலங்காகித உணர்வோடு உங்கள் முன்னால் கம்பீரமாக நான் நின்று கொண்டிருக்கிறேன்.
    கல்லூரிச் சாலைக்குள் நீங்கள் செல்கிறீர்கள். கலையில், அறிவியலில், மருத்துவத்தில், பொறியியலில், சட்டத்தில் என உங்களது அறிவு மேம்பாடு அடையட்டும். உங்களின் வளர்ச்சியைப் பார்த்து ரசிக்கக்கூடிய, பெருமைப்படும் ஒரு தந்தையாக, நிச்சயம் நான் உங்களில் ஒருவனாக இருப்பேன் என்று உறுதியோடு கூறுகிறேன்.

    2026-ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தின் 2 மில்லியன் இளைஞர்களின் திறன் மேம்பாடு அடைய வேண்டும் என்று நான் அடிக்கடி சொல்லி வருகிறேன். அதில் நீங்களும் இடம்பெற்றுள்ளீர்கள்.
    அதேபோல, 2030-ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தில் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை வளர்க்க வேண்டும் என்று சொல்லி வருகிறேன். அதில் உங்கள் பங்கும் இருக்க வேண்டும்.
    ஒரு மனிதனின் மாபெரும் சொத்து என்பது அவனது கல்விதான்.

    அதனால்தான் அதனை யாராலும் திருட முடியாத சொத்து என்று நான் திரும்ப திரும்பச் சொல்லி வருகிறேன்!  வாய்ப்புக் கிடைக்கும் இடங்களில் எல்லாம், கல்வியின் அவசியத்தை நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.  கல்வி உரிமை நாம் போராடிப் பெற்றிருக்கிறோம், தயவு செய்து அதை யாரும் மறந்துவிடக் கூடாது.
    கல்வியை சிறுமைப்படுத்தி பேசக்கூடிய யாருடைய பேச்சையும் நீங்கள் காதில் வாங்காதீர்கள்!

    சாதி- மதம்- பணம்- அதிகாரம்- வயது- அனுபவம்- குடும்பம்- பதவி- நாடுகள்- வளர்ச்சி- ஆகிய அனைத்தின் தன்மையும், ஆளுக்கு ஆள், நேரத்துக்கு நேரம், நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது.  ஆனால் அறிவு மட்டும்தான் அனைத்தையும் கடந்து ஒரே அளவுகோலோடு அளவிடப்படுகிறது. இங்குப் பிறந்த திருவள்ளுவர் உலக ஞானியாக போற்றப்படுவதும் - ஜெர்மனியில் பிறந்த காரல் மார்க்ஸ் உலகச் சிந்தனைவாதியாக மதிக்கப்படுவதும்தான் - அறிவுலகத்தின் ஆற்றல்.  கல்வியால் அடையும் புகழ்தான் நிலையானது’ என பேசினார்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: CM MK Stalin, Education

    அடுத்த செய்தி