ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நான்கு நாள் பயணமாக டெல்லி செல்கிறார்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நான்கு நாள் பயணமாக டெல்லி செல்கிறார்

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

MK Stalin : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நான்கு நாள் பயணமாக இன்று இரவு டெல்லி செல்கிறார். பிரதமர் நரேந்திர மோடியை நாளை சந்தித்து, தமிழகத்தின் நலன் சார்ந்த விவகாரங்கள் தொடர்பாக மனு அளிக்கிறார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நான்கு நாள் பயணமாக இன்றிரவு டெல்லி செல்கிறார்.

தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், ஐக்கிய அரபு அமீரகத்தில் நான்கு நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அதிகாலை சென்னை வந்தடைந்தார். இந்நிலையில், டெல்லியில் கட்டப்பட்டுள்ள திமுகவின் தலைமையகமான அண்ணா - கலைஞர் அறிவாலய கட்டடத்தின் திறப்பு விழா வரும் 2-ம் தேதி நடைபெற உள்ளது.

இதில் பங்கேற்பதற்காக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு டெல்லி புறப்படுகிறார். நள்ளிரவு 12 மணியளவில் டெல்லி சென்றடையும் அவர், நாளை பிற்பகல் ஒரு மணியளவில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசுகிறார். அப்போது, தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களுக்கு மத்திய அரசின் நிதியை ஒதுக்க வலியுறுத்த உள்ளார்.

மேலும், தமிழகத்தின் நலன் சார்ந்த விவகாரங்கள் குறித்து மனு அளிக்க உள்ளார். அப்போது, திமுக அலுவலக திறப்பு விழாவில் பங்கேற்கவும் பிரதமருக்கு அழைப்பு விடுக்க உள்ளார். அதைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க உள்ள முதலமைச்சர் ஸ்டாலின், ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி ஆகியோரையும் சந்திக்க உள்ளார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை நாளை மறுதினம் ஒன்றாக சந்தித்து பேசும் மு.க.ஸ்டாலின், அண்ணா - கலைஞர் அறிவாலய அலுவலக கட்டட திறப்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுவிக்க உள்ளார்.

தொடர்ந்து, ஏப்ரல் 2ஆம் தேதி மாலை 5 மணிக்கு டெல்லி தீன தயாள் உபாத்யாயா சாலையில் கட்டப்பட்டுள்ள, அண்ணா - கலைஞர் அறிவாலயத்தை, கட்சிக் கொடி ஏற்றி மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். இந்த விழாவில் பங்கேற்க பல்வேறு கட்சிகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Must Read : மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் அமைச்சர் துரைமுருகன்

விழாவை முடித்துக் கொண்டு, ஏப்ரல் 2ஆம் தேதி இரவு டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்ப உள்ளார். ஆரம்பத்தில் ஒரு நாளாக திட்டமிடப்பட்டு இருந்த முதலமைச்சரின் பயணம் நான்கு நாட்களாக மாற்றப்பட்டு இருப்பது, தேசிய அளவில் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

First published:

Tags: CM delhi visit, DMK, MK Stalin