உங்கள் பரந்த உள்ளம் பஞ்சாப் மக்களுக்கு நன்மை பயப்பதாக அமையட்டும்... பன்வாரிலால் புரோகித்துக்கு ஸ்டாலின் வாழ்த்து

மு.க.ஸ்டாலின் - பன்வாரிலால் புரோகித்

தமிழ்நாட்டில் இருந்து விடைபெற்று பஞ்சாப் மாநில ஆளுநராகப் பொறுப்பேற்க இருக்கிறார் பன்வாரிலால் புரோகித்.

 • Share this:
  பன்வாரிலால் புரோகித் தமிழ்நாட்டில் இருந்து விடைபெறுகிறார். அவர், பஞ்சாப் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என். ரவி நியமித்து குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், அவருக்கும் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

  தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு, பஞ்சாப் மாநில ஆளுநராகவும், சண்டிகர் யூனியன் பிரதேசத்தின் நிர்வாகியாகவும் கூடுதல் பொறுப்பு வழங்கி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து பன்வாரிலால் புரோகித் தலைநகர் டெல்லி சென்று, அங்கு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரை சந்தித்துப் பேசினார்.

  அதன் தொடர்ச்சியாக, கடந்த 8ஆம் தேதி டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, தமிழ்நாடு, சண்டிகர், பஞ்சாப் ஆகிய மாநிலங்களின் நிலவும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து ஆளுநர் ஆலோசனை நடத்தியதாக கூறப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என். ரவி நியமித்து குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார்.

  இந்நிலையில், மு.க.ஸ்டாலின் ட்விட்டரில், “தமிழ்நாட்டில் இருந்து விடைபெற்று பஞ்சாப் மாநில ஆளுநராகப் பொறுப்பேற்க இருக்கும் மாண்புமிகு பன்வாரிலால் புரோகித் அவர்களை அன்புடனும் மரியாதையுடனும் வழியனுப்பி வைக்கிறோம்!. எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோதும் - முதலமைச்சராக ஆனபோதும் தனிப்பட்ட முறையில் என் மீது அன்புடன் பழகியவர் புரோகித் அவர்கள். குறுகிய காலம் பழகி இருந்தாலும் இனிமையான மறக்க முடியாததாக உங்கள் நட்பு அமைந்திருந்தது. உங்களது பரந்த உள்ளம் பஞ்சாப் மக்களுக்கு நன்மை பயப்பதாக அமையட்டும். தமிழ்நாடு தங்களை வாழ்த்தி வழியனுப்புகிறது!” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

     மேலும், தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.என்.ரவிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெவித்துள்ளார். அதில், “தமிழ்நாட்டின் ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கும் மாண்புமிகு ஆர்.என். ரவி அவர்களுக்கு எனது வணக்கமும் வாழ்த்தும்!தங்களது வருகை தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் வளத்துக்கும் ஊக்கமளிப்பதாக இருக்கட்டும்! தங்களை தமிழ்நாடு வரவேற்கிறது! என்று குறிப்பிட்டுள்ளார்.

     தமிழக ஆளுநராக செயல்பட்டு வரும் பன்வாரிலால் புரோகித் நாளை முதல் பஞ்சாப் கவர்னராக பொறுப்பேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Suresh V
  First published: