Home /News /tamil-nadu /

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் - முதல்வர் ஸ்டாலின்!

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் - முதல்வர் ஸ்டாலின்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த டிசம்பர் 18ஆம் தேதி கடலுக்குச் சென்ற 43 மீனவர்களை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

  • News18
  • Last Updated :
    இலங்கை சிறையில் உள்ள தமிழ்நாட்டு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு, மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இந்த நிலையில், தமிழ்நாட்டு மீனவர்களின் வலைகள், செல்போன்கள் உள்ளிட்ட பொருட்களை இலங்கை மீனவர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த டிசம்பர் 18ஆம் தேதி கடலுக்குச் சென்ற 43 மீனவர்களை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கை மீண்டும் விசாரித்த ஊர்காவல்துறை நீதிமன்ற நீதிபதி கஜநிதிபாலன், மீனவர்கள் மீது தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில், இலங்கை கடற்பரப்பில் மீன் பிடித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளதால், யாழ்ப்பாணம் நில அளவு மதிப்பீட்டுத்துறை சான்றிதழை வழங்க உத்தரவிட்டார். அத்துடன் மீனவர்களுக்கு மூன்றாவது முறையாக சிறை தண்டனை நீட்டிக்கப்பட்டு, வரும் 27ஆம் தேதி வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கவும் உத்தரவிட்டார்.

    மீனவர்களின் காவல் நீட்டிப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 43 பேரையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வெளியுறவுத்தறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு ட்விட்டரில் வலியுறுத்தியுள்ளார்.

    இந்நிலையில், இந்திய எல்லைக்கு உட்பட்ட கச்சத்தீவு பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் மீண்டும் கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும், கட்டைகளை வீசி தாக்குதல் நடத்தியதோடு, விசைப்படகுகளில் ஏறி, வலைகளை அறுத்து சேதப்படுத்தியதாகவும் மீனவர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

    Also read... ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களுக்கு சம்பளம், பொங்கல் போனஸ் வழங்கவில்லை - மடியேந்தி பிச்சை எடுத்து போராட்டம்!

    இதனிடையே, நாகை மாவட்டம் வேதாரண்யத்தைச் சேர்ந்த மீனவர்களிடம், இலங்கை மீனவர்கள் கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புஷ்பவனம் கிராமத்தைச் சேர்ந்த 4 பேர் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்து தாக்குதல் நடத்திய 10க்கும் மேற்பட்ட இலங்கை மீனவர்கள், படகில் ஏறி வலைகள், செல்போன்கள் மற்றும் ஐஸ் பெட்டிகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். ஏமாற்றத்துடன் கரை திரும்பிய மீனவர்கள், கடலோர காவல்படையிடம் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Fishermen, MK Stalin

    அடுத்த செய்தி