கள்ளக்குறிச்சி மாவட்டம் உருந்தூர்பேட்டையில் அ.தி.மு.க சார்பில் மொழிப்போரில் உயிர் நீத்த தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், ‘தமிழ் மொழிக்கோ, தமிழகத்திற்கோ பாதிப்பு ஏற்படும் போது அதை மீட்டெடுக்கும் அரசு அ.தி.மு.க அரசு. தமிழ் வளர்த்த சான்றோர்கள் பெயரில் விருதுகள் வழங்கப்படுகின்றன. கீழடியில் அகழ்வாராய்ச்சியின் மூலம் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் ரூ 12 கோடி செலவில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.
மு.க.ஸ்டாலின் மக்கள் கிராம சபை கூட்டம் நடத்தி மனுக்களை பெற்றீர்களே மனுக்கள் என்னவாயிற்று மக்கள் கேட்கிறார்கள். 2019 -ம் ஆண்டில் மு.க.ஸ்டாலின் நடத்திய கிராமசபை கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்களை எங்களிடம் கொடுத்திருந்தால் நான் பிரச்சினையை தீர்த்து வைத்திருப்பேன். ஏற்கனவே ஏமாந்தது போல் மீண்டும் இப்போது ஏமாற மாட்டார்கள்.
தி.மு.க சுடுகாட்டை கூட பட்டா போட்டுவிடுவார்கள். இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்டது தி.மு.க ஆட்சிதான்.
மு.க.ஸ்டாலின் இன்னும் 3 மாதத்தில் ஆட்சிக்கு வருவோம் என கூறுகிறார். நாங்கள் எங்கே இருப்போம் என எங்களுக்கு தெரியும். முன்னால் தி.மு.க மூத்த அமைச்சர்களின் வழக்கை விரைந்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று அனைத்து துறைகளிலும் தமிழகம் முன்னிலையில் உள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் வேறு சட்டமன்றத் தேர்தல் வேறு. தமிழக மக்கள் யார் வரவேண்டும் என நினைத்து வாக்களித்தார்கள். மக்கள் பிரித்து பார்த்து வாக்களிக்கிறார்கள். தி.மு.க கட்சியல்ல. கார்பரேட் கம்பெனி. மு.க.ஸ்டாலின் சேர்மன், உதயநிதி, கனிமொழி, தயாநிதிமாறன் ஆகியோர் இயக்குனர்கள். தி.முக அராஜக, ரவுடி கட்சி. அதனால் தான் மக்கள் 10 ஆண்டு அவர்களை நிராகரித்தார்கள்.
விவசாய பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இந்தியாவிலேயே அதிக இழப்பீடு வாங்கி கொடுத்தது அதிமுக அரசு தான். கவர்ச்சியாக பேசி கவர்ச்சியான வாக்குறுதிகளை அள்ளி வீசி ஆட்சியை பிடிக்கத் துடிக்கிறார் மு.க.ஸ்டாலின். நான் ஏற்கனவே செய்ப நினைத்த திட்டத்தின் தகவல் கசிந்து அதனை காப்பியடித்து தான் மு.க.ஸ்டாலின் மக்களிடம் புகார் மனுக்களை பெற்று வருகிறார்’ என்று தெரிவித்துள்ளார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்