COVID19| கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

COVID19| கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

அதிகாரிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளி கடைப்பிடித்து, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நோய்ப்பரவலைத் தடுத்திட உதவ வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

  • Share this:
    கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலாளர், சுகாதாரதுறைச் செயலாளர் உள்ளிட்ட பிற அதிகாரிகளுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.

    தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களிலும், அதிமுக கூட்டணி 75 இடங்களையும் கைப்பற்றியுள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க உள்ளது. இதனிடையே, தமிழகத்தில் ஆட்சி அமைக்கபோகும் திமுகவுக்கு பெரும் சவாலாக, நாட்டையே உலுக்கி வரும் கொரோனா இரண்டாம் அலை இருக்கிறது. தமிழகத்திலும் தினசரி கொரோனா பாதிப்பானது 20ஆயிரத்தை கடந்துள்ளது. சென்னையில் மட்டும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தினசரி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இன்று மாலை அரசு அதிகாரிகளுடன் மு.க.ஸ்டாலின் அவரது இல்லத்தில் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை தொடர்பாக மு.க.ஸ்டாலின் அவரது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, தமிழகத்தில் கொரோனா தொற்று அதிக அளவில் பரவி வரும் இச்சூழலில் இத்தொற்று மேலும் பரவாமல் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் குறித்து, தலைமைச் செயலாளர், சுகாதாரதுறைச் செயலாளர், வருவாய்துறைச் செயலாளர், பேரிடர் மேலாண்மை ஆணையர் மற்றும் பிற சுகாதாரத்துறை அலுவலர்களோடு இன்று எனது இல்லத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

    இக்கூட்டத்தின் போது, கொரோனா தடுப்பு மற்றும் மருத்துவச் சிகிச்சைகளை மேம்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் அனைத்தும் எந்தவிதமான தொய்வுமின்றி முழு முனைப்புடன் மேற்கொள்ளப்பட வேண்டும் என அறிவுறுத்தினேன்.

    அதிகாரிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை


    தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளில் அதிக பாதிப்பு உள்ளவர்களுக்கு சென்னையில் ரெம்டெசிவர் போன்ற மருந்துகள் அரசால் வழங்கப்படுவது போன்று, தமிழகத்தின் பிற முக்கிய நகரங்ககளிலும் வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொண்டேன்.

    நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மருத்துவச் சிகிச்சைகளுக்குத் தேவையான படுக்கை வசதிகள் ஆக்சிஜன் மற்றும் மருந்து பொருட்கள் அனைத்தும் தங்குதடையின்றி கிடைப்பை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தினேன் என்று தெரிவித்துள்ளார்.

    மேலும், மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளி கடைப்பிடித்து, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நோய்ப்பரவலைத் தடுத்திட உதவ வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
    Published by:Esakki Raja
    First published: