தமிழ் மாணவர்களுக்கு இந்தியில் கேள்விகளா? மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவதை நிறுத்தவேண்டும் - மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்

மு.க.ஸ்டாலின்

தமிழக மாணவர்களுக்கு இந்தியில் கேள்விகள் கொடுக்கப்படுகிறது. ஆனால் தமிழ்மொழியில் கேள்வித்தாள் இல்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அண்ணல் மகாத்மா காந்தியடிகளின் 150-வது பிறந்த நாளை முன்னிட்டு - தமிழகத்தில் உள்ள 3 முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு இந்தியில் இணைய வழி “புதிர் போட்டி” நடத்துவது கண்டனத்திற்குரியது.

  “மகாத்மா காந்தியடிகளின் வாழ்க்கை வரலாறு", “அவருடைய மக்கள் பணிகள்", “வாழ்க்கையோடு இணைந்த அவருடைய கருத்துருக்கள்” ஆகியவற்றில் நடைபெறும் போட்டிக்கு – தமிழக மாணவர்களுக்கு இந்தியில் கேள்விகள் கொடுக்கப்படுகிறது. ஆனால் தமிழ்மொழியில் கேள்வித்தாள் இல்லை. ஏற்கனவே மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இந்தி வார்த்தைகள் அடங்கிய புத்தகத்தைத் தமிழக சட்டமன்றத்தில் அடாவடியாக வைத்தார்.

  “இருமொழிக் கொள்கையில் உறுதியாக இருப்போம்” என்று அறிவித்துவிட்டு - முதலமைச்சர் ஏன் இந்தியை இவ்வளவு வேகமாகத் தமிழ்நாட்டில் திணித்துக் கொண்டிருக்கிறார்? அணையப் போகின்ற தீபம் ஆட்டம் போடுவது போல், மொழிக் கொள்கையிலும் முதலமைச்சர் பழனிசாமி போடும் இரட்டை வேடம் - மீண்டுமொரு இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தைத் தமிழகம் சந்திக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தி விடும். எச்சரிக்கை. புதிய தேசிய கல்விக் கொள்கை முதல் 5 வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்குத் தாய்மொழிக் கல்வியை உறுதி செய்கிறது என்று பிரதமரும், மத்திய கல்வித்துறை அமைச்சரும் அளித்த உறுதி என்னவாயிற்று? அந்த வாக்குறுதிகள் எல்லாம் தமிழகத்தை ஏமாற்றவா? தமிழகம் போன்று இந்தி பேசாத பிற மாநிலங்களை ஏமாற்றவா?


  மத்திய பா.ஜ.க. அரசின் எடுபிடியாக - அடிவருடியாக இருந்து, பழனிசாமி தலைமையிலான அரசு, தமிழ்மொழிக்குத் துரோகம் செய்து “இந்தியில் கேள்வி கொடுப்பதும்” “இந்தியில் பெயர் சூட்டுவதும்” கடும் கண்டனத்திற்குரியது. இருமொழிக் கொள்கையிலிருந்து பின்வாங்கி - பதவி சுகத்தை அனுபவிக்கும் எஞ்சிய நாட்களில், இந்தியைத் தமிழகத்தில் புகுத்தி - மும்மொழித் திட்டத்திற்கு சிவப்புக் கம்பளம் விரிப்பதை முதலமைச்சர் பழனிசாமி நிறுத்திக் கொள்ள வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
  Published by:Karthick S
  First published: