கரூரில் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணியை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர். அதற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கரூர் லைட் ஹவுஸ் கார்னரில் சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் நிறுவப்பட்ட காந்தி சிலையை மாவட்ட நிர்வகம் அகற்றிவிட்டு, அதே இடத்தில் புதிதாக காந்தி சிலை வைத்துள்ளது. காங்கிரஸ் கட்சி சார்பில் வைக்கப்பட்ட வரலாற்று பின்னணி உள்ள சிலையை மாவட்ட நிர்வாகம் அகற்றி விட்டு, முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைப்பதற்காகவே அவசரகதியில் தரமற்ற சிலை அமைத்துள்ளதாக கூறி காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அனுமதியின்றி போராட்டம் நடத்திய ஜோதிமணியை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று கைது செய்தனர்.
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த ஜோதிமணி முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைக்கவுள்ள இந்த சிலையை நிறுவுவதில் பல்வேறு ஊழல்கள் நடைபெற்றுள்ளதாக குற்றம்சாட்டினார். இந்தநிலையில், எம்.பி ஜோதிமணி வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டதற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தமிழகத் தலைவர் கே.எஸ்.அழகிரி ஆகியோர் உள்ளிட்டவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார். அதேபோல, தி.மு.க எம்.பி கனிமொழி, தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்த மு.க.ஸ்டாலின் கண்டன அறிக்கையில், ‘ஆட்சியின் கடைசி நேரக் கொள்ளைக்காக கரூர் ரவுண்டானா பகுதியில் 70 ஆண்டுகால வரலாறு கொண்ட மகாத்மா காந்தி சிலையை அகற்றி, முதலமைச்சர் திறக்கும் புது சிலை என்ற பெயரில் உருவாக்கப்பட்ட தரமற்ற கட்டுமானத்தைத் தட்டிக் கேட்ட மக்களவை உறுப்பினர் ஜோதிமணியை பழனிசாமி அரசின் ஏவல்துறையான காவல்துறை கைது செய்ததும் - அதற்காகக் கையாளப்பட்ட முறையும் கடும் கண்டனத்திற்குரியவை. தமிழக மக்களின் அகிம்சை புரட்சி விரைவில் இதற்கான தீர்ப்பளிக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
கடைசி நேரக் கொள்ளைக்காக கரூரில் 70 ஆண்டுகால மகாத்மா காந்தி சிலையை அகற்றி, புதுச் சிலை என்னும் தரமற்ற கட்டுமானத்தைத் தட்டிக் கேட்ட மக்களவை உறுப்பினர் @jothims-ஐ @CMOTamilNadu காவல்துறை பெண் என்றும் பாராது தவறான முறையில் கைது செய்திருக்கிறது.
ஜோதிமணி கைது செய்யப்பட்டது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, ‘கரூர் எம்.பி.ஜோதிமணி காவல் துறையால் தாக்கபட்டுள்ளார். கைகாலை பிடித்து ஜோதிமணியை போலீஸார் தூக்கி எறிந்துள்ளனர். நகராட்சி ஆணையரிடம் காந்தி சிலை அகற்றம் குறித்த கேட்டதற்கு முறையான பதில் தரவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர் கைது என்பது ஜனநாயகத்திற்கு எதிரான செயல்’ என்று தெரிவித்துள்ளார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Karthick S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.