திஷா ரவி கைது செய்யப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது - மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்

திஷா ரவி கைது செய்யப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது - மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்

மு.க.ஸ்டாலின், திஷா ரவி

பெங்களூரு கல்லூரி மாணவி திஷா ரவி கைது செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சீர்திருத்த சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாக டெல்லி எல்லைகளில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

  இந்த போராட்டங்களுக்கு பல்வேறு தரப்பினர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பர்க் தனது ட்விட்டர் பக்கத்தில் டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவான கருத்துகளை வெளியிட்டிருந்தார். இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர், பெங்களூருவை சேர்ந்த திஷா ரவி என்ற மாணவி, கிரெட்டா தன்பெர்க்கின் வாசகங்களை ஒரு போராட்ட குழு சார்பில் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தார். இதையடுத்து, பெங்களூரு வந்த டெல்லி காவல்துறையினர் அவரை கைது செய்தனர். இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், திஷா ரவி பெங்களூருவில் உள்ள பிரபல கல்லூரியில் படித்து வருவது தெரியவந்தது. மேலும், பகுதி நேரமாக தனியார் நிறுவனம் ஒன்றில் அவர் வேலை பார்த்து வந்துள்ளார்.

  அத்துடன், ‘பிரைடே பார் பியூச்சர்’ என்ற பெயரில் செயல்படும் போராட்ட குழுவில் உறுப்பினராகவும் இருந்துள்ளார். திஷா ரவி கைது செய்யப்பட்டற்கு முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், கர்நாடக சங்கீத பாடகர் டி.எம்.கிருஷ்ணா உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்தநிலையில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினும் திஷா ரவியின் கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘சிறிய வழக்குக்காக திஷா ரவி கைது செய்யப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது. அதிகாரத்தின் மூலம் அரசுக்கு எதிரான விமர்சனங்களை ஒடுக்க நினைப்பது என்பது சட்டத்தின் ஆட்சி அல்ல. எதிர்ப்பு தெரிவிக்கும் இளைஞர்களின் குரல்களைக் கேட்பதற்கு பதிலாக அவர்கள் மீது தண்டிப்பதை பா.ஜ.க அரசு தவிர்க்கவேண்டும் என்று வலியுறுத்திக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published:

  சிறந்த கதைகள்