கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக தலைவரும் கொளத்தூர் திமுக வேட்பாளருமான ஸ்டாலின் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அயனாவரம் காசி விஸ்வநாதர் ஆலயத்தில் இருந்து பிரச்சாரத்தை துவங்கிய ஸ்டாலின், அன்னை சத்யா நகர் ஆண்டர்சன் சாலை, அயனாவரம் பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வாகனத்தில் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.
பங்காரு தெரு பகுதியில் தொகுதி மக்களிடையே பேசிய மு.க.ஸ்டாலின். "ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானாக வளரும் என்கிற பழமொழிப்படி தமிழகம் முழுவதும் பிற தொகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டு விட்டு நம்ம தொகுதிக்கு தேர்தல் பிரசாரத்திற்கு வந்திருக்கிறேன்.
கொளத்தூர் தொகுதிக்கு தாமதமாக வருவதற்காக என் மீது கோபித்துக்கொள்ள வேண்டாம். சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது புயல், மழை, வெள்ளம், இயற்கை பேரிடர் என எது வந்தாலும் கொளத்தூர் தொகுதிக்கு வந்து நிற்பேன்.
எந்த தொகுதிக்கும் கிடைக்காத சிறப்பு கொளத்துருக்கு உண்டு, முதலமைச்சர் வேட்பாளர் தொகுதி என்ற சிறப்பை பெற்றுள்ளது.எதிர்கட்சி தலைவராக இருந்ததை விட முதலமைச்சராக இருக்கும் போது இந்த தொகுதிக்கு நல்ல் திட்டங்கள் வரும். 234 தொகுதிகளில் மாடல் தொகுதியாக கொளத்தூர் சட்டமன்ற தொகுதியை மாற்றுவேன்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு முதல் முறையாக தன் சொந்த தொகுதியில் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.