’எனது முதல் கையெழுத்து கூட்டுறவு விவசாய கடனைத் தள்ளுபடி செய்வதே..’ - மு.க ஸ்டாலின் உறுதி..

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

உழவர்களுக்கான திருநாளில் உழவர் சந்தோஷமாக இருக்க வேண்டும். இன்னும் நான்கு மாதங்கள் பொறுங்கள் என்றும் பேசியுள்ளார் மு.க ஸ்டாலின்.

 • Share this:
  எனது முதல் கையெழுத்து கூட்டுறவு விவசாய கடன் தள்ளுபடி செய்வதே என பொங்கல் திருநாளில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் மக்களிடம் உறுதியளித்தார். ஆவடி கோனாம்பேடு கிராமத்தில் சாதிமத வேறுபாடின்றி சமத்துவ பொங்கல் விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்துகொண்டு பொங்கல் வைத்தும் பசு வழிபாடும் செய்தார்.

  பொங்கல் விழாவிற்கு வருகை தந்த ஸ்டாலினுக்கு, அயப்பாக்கம் கிராமத்தில் தமிழ் கலாச்சார முறையில் வானவெடி வெடிக்க கண்களைக் கவரும் வகையில் பிரம்மாண்ட செட் அமைத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழ் கலாச்சார முறையில் மயிலாட்டம், ஒயிலாட்டம்,கரகாட்டம் தப்பாட்டம், பொய்க்கால் குதிரை மற்றும் பேண்டுவாத்தியம் முழங்க சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் வில்லிவாக்கம் ஒன்றிய செயலாளர் துரை வீரமணி மற்றும் திமுக மகளிர் அணியினர் சுமார் 2000 பேர் கைகளில் வரவேற்பு பதாகைகளுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனையடுத்து தி.மு.க. திருவள்ளூர் மத்திய மாவட்ட நிர்வாகிகள் சார்பில் ஆவடி, கோணாம்பேடு பகுதியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இதில் 1000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

  இதில் தி‌.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பசு பூஜை செய்து, மாலை அணிவித்து வணங்கினார். பின்னர் சமத்துவத்தை எடுத்துக்காட்டும் விதமாக மதவேறுபாடின்றி ஸ்டாலின் புதுப்பானையில் பொங்கலிட்டார். தொடர்ந்து அங்கு நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளை மேடையில் அமர்ந்தபடி பார்த்து மகிழ்ந்தார் விழா முடிவில் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு வெள்ளியினால் ஆனா செங்கோலினை துரை வீரமணி அவர்கள் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு வழங்கி கௌரவித்தார்.

  இதனை தொடர்ந்து மேடையில் பேசிய மு.க.ஸ்டாலின், ‘தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவை கொண்டாடுவற்கு மட்டுமல்ல, உங்களின் வாழ்த்துக்களை பெறுவதற்காகவே வந்திருக்கிறேன்’ என கூறினார். தைப் பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். நமக்கு இன்னும் 4 மாதங்களில் வழி பிறக்கும். பிறந்தே தீரும் எனவும் அதற்காகத்தான் இங்கே குழுமி இருக்கிறோம் என அவர் தெரிவித்தார்.

  ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதே அண்ணாவின் வழி. அவர் வழியில் நடப்போம் என கூறினார். கலைஞர் 7,000 கோடி ரூபாய் விவசாய கடனை தள்ளுபடி செய்வதாக அறிவித்த போது கேலி செய்தார்கள். ஆனால் ஆட்சி பொறுப்பை ஏற்றவுடன் விவசாய கடன் தள்ளுபடி செய்தார். அப்போது அ.தி.மு.க.வினரே அதிக பயன் பெற்றனர். ஆனால் கலைஞர் அனைவரையும் விவசாய பெருங்குடி மக்களாக பார்த்தார்.

  அதுபோல் திமுக. ஆட்சிக்கு வந்தால் எனது முதல் கையெழுத்தே விவசாய கடனை தள்ளூபடி செய்வதுதே ஆகும்.
  உழவர்களுக்கான திருநாளில் உழவர் சந்தோஷமாக இருக்க வேண்டும். இன்னும் நான்கு மாதங்கள் பொறுங்கள் என்றும் பேசியுள்ளார்.
  Published by:Gunavathy
  First published: