Home /News /tamil-nadu /

மு.க.ஸ்டாலினும், ஆ.ராசாவும் நாகரிகத்துடன் பேசவேண்டும் - டி.டி.வி.தினகரன் ஆவேசம்

மு.க.ஸ்டாலினும், ஆ.ராசாவும் நாகரிகத்துடன் பேசவேண்டும் - டி.டி.வி.தினகரன் ஆவேசம்

டிடிவி தினகரன்

டிடிவி தினகரன்

மு.க.ஸ்டாலினும், ஆ.ராசாவும் நாகரிகத்துடன் பேசவேண்டும் என்று டிடிவி தினகரன் கடுமையாக சாடியுள்ளார்.

  தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், அ.தி.மு.கவின் முன்னாள் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா குறித்து ஆ.ராசா சமீபத்தில் மிகக் கடுமையாக விமர்சனம் செய்தார். இதுகுறித்து  டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாகரிக அரசியலுக்கும் தி.மு.கவுக்கும் எந்தக் காலத்திலும் சம்பந்தம் இருந்ததில்லை என்பதை மு.க.ஸ்டாலினும், ஆ.ராசாவும் கடந்த சில நாட்களாக மீண்டும் நிரூபித்து வருகிறார்கள். தமிழ்நாட்டின் நிர்வாகத்தைச் சீர்குலைத்த பல ஊழல்களின் ஊற்றுக்கண்ணான, ஊழலின் பிதாமகரான கருணாநிதியின் வாரிசுகள், அவர்களைப் பற்றி உலகமே அறிந்த சங்கதிகளை வீராவேசமாக பேசுவதால் மட்டுமே மறைத்துவிட முடியும் என நினைக்கிறார்கள்.

  அவர்களுடைய கட்சிக்காரர்களுக்கு மட்டுமின்றி உலகம் முழுக்க வாழ்கிற ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் 2ஜி ஊழல் மூலம் பெரும் தலைகுனிவை, அவமானத்தை ஏற்படுத்திய இந்த விஞ்ஞான ஊழல்வாதிகள், தங்கள் சுயலாபத்திற்காக தமிழகத்திற்குச் செய்த தீமைகள் கொஞ்ச, நஞ்சமா? ஒவ்வொரு காலத்திலும் தாங்கள் புரிந்த ஊழல்களில் இருந்து தங்களைத் தற்காத்துக்கொள்ள தமிழகத்தின் உரிமைகளை, தமிழ்நாட்டு மக்களின் நலன்களைக் காவு கொடுத்தது இந்த கருணாநிதி கூட்டம்தானே?

  சர்க்காரியாவில் இருந்து தப்பிக்க கச்சத்தீவை தாரை வார்த்து கொடுத்தது யார்? 2 ஜி-யில் இருந்து தப்பிக்க லட்சோப லட்சம் தமிழ் சொந்தங்களை இலங்கையில் கொன்றழிக்க துணை நின்றது யார்? இப்படி ஊழல், நயவஞ்சகம் இவற்றின் மொத்த வடிவங்களான இவர்களுக்கு, தமிழக மக்களுக்காக தவ வாழ்க்கை வாழ்ந்து, இன்றும் அவர்களின் உள்ளங்களில் நிறைந்திருக்கிற ஜெயலலிதாவைப் பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது?

  Also read: மத்திய அரசு கைவிட்ட போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் திட்டத்தை மாநில அரசு தொடரவேண்டும்... திருமாவளவன் வலியுறுத்தல்

  தேர்தல் ஜூரம் ஆரம்பித்துவிட்டதால் மு.க.ஸ்டாலின், இனி கைத்தடிகளைத் தூண்டிவிட்டு இப்படியெல்லாம் பேச வைப்பார். ஜெயலலிதாவைக் கொச்சைப்படுத்தும் இந்த உலக மகா யோக்கிய சிகாமணிகள், அவர்களின் மரணத்தைப் பற்றியும் வழக்கம் போல 'ரொம்பவும் அக்கறை உள்ளவர்கள்' போன்று அவதூறு பரப்பி குளிர்காய நினைப்பார்கள். இவர்களின் மலிவான பிதற்றல்களைப் பார்த்து தமிழ்நாட்டு மக்கள் ஏமாற மாட்டார்கள்.

  இதுபோன்று வரம்பு மீறி, வாய்க்கு வந்ததை எல்லாம் பேசுவதாலும், அதிகாரத்தில் இருக்கும்போது போட்ட ஆட்டங்களாலும்தான் கடந்த 10 ஆண்டுகளாக இந்த தீயசக்திகளை தமிழ்நாட்டு மக்கள் ஓரங்கட்டி வைத்திருக்கிறார்கள். வரவிருக்கிற சட்டமன்றத் தேர்தலிலும் அதுதான் நடக்கப்போகிறது. ஜெயலலிதா இல்லை என்பதால் இப்போதே ஆட்சியைப் பிடித்துவிட்டதாக நினைத்து கற்பனை ராஜ்ஜியத்தில் மிதக்கும் இவர்களின் கனவு ஒரு நாளும் பலிக்கப் போவதில்லை.

  அதிர்ஷ்டத்தால் அதிகாரத்தில் ஒட்டிக்கொண்டு, நாளைக்கு அடையாளமில்லாமல் போகப் போகிறவர்கள் வேண்டுமானால் இவர்களின் எகத்தாளத்தையும், இழிச்சொற்களையும் கண்டும் காணாமலும் இருக்கலாம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Rizwan
  First published:

  Tags: A Raja, Dmk leader mk stalin, TTV Dinakaran

  அடுத்த செய்தி