நீட் மசோதா- நிராகரிப்பா? நிறுத்திவைப்பா? சட்டப்பேரவையில் காரசார விவாதம்

அமைச்சர் ஏட்டிக்கு போட்டியாக பேசுவதால் மக்கள் நலன் பாதிக்கப்படுவதாகக் ஸ்டாலின் கூறினார். இதைத்தொடர்ந்து திமுக உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

நீட் மசோதா- நிராகரிப்பா? நிறுத்திவைப்பா? சட்டப்பேரவையில் காரசார விவாதம்
மு.க.ஸ்டாலின்
  • News18
  • Last Updated: July 10, 2019, 4:11 PM IST
  • Share this:
நீட் மசோதா தொடர்பாக சட்டப்பேரவையில் அமைச்சர் தவறானத் தகவல்களை வெளியிடுவதாக எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டியுள்ளார்.

சட்டப்பேரவையில் நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக தி.மு.க கொண்டுவந்த சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் மீது பேசிய மு.க.ஸ்டாலின், நீட் தேர்வுக்கு விலக்கு கேட்டு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை குடியரசுத் தலைவர் திருப்பி அனுப்பி விட்டதாகக் கூறினார்.

இந்த தகவலை தமிழக அரசு 19 மாதங்களாக மறைத்து மக்களை ஏமாற்றிவிட்டதாகவும், சட்டப்பேரவையில் உண்மையான தகவலைக் கூறாமல் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் மறைத்துவிட்டதாகவும் குற்றம்சாட்டினார்.


மக்களுக்கு செய்த இந்த பச்சை துரோகத்திற்கு பொறுப்பேற்று அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தினார்.

இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம், நீட் தேர்வுக்கு விலக்கு கோரிய மசோதாக்களை நிறுத்தி வைத்திருப்பதாக மத்திய அரசு கடிதம் அனுப்பியதாகவும், இதற்கு விளக்கம் கேட்டு குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய கடிதத்திற்கு இதுவரை பதில் வரவில்லை என்றும் மத்திய அரசு கூறியதாக கூறினார்.

மத்திய அரசு பதில் அளிக்கும்பட்சத்தில், 6 மாத கால அவகாசம் இருப்பதாகவும் தெரிவித்தார். மசோதாக்களை நிராகரித்துவிட்டதாக உயர் நீதிமன்றத்தில் தான் மத்திய அரசு தெரிவித்திருப்பதாகவும், அதுகுறித்து தமிழக அரசிடம் எதுவும் தெரிவிக்கவில்லை என்றும் கூறினார்.நீட் தேர்வுக்கு விலக்கு கோரிய மசோதாக்களை நிராகரித்துவிட்டதாக மத்திய அரசு கடிதம் அனுப்பியதை நிரூபித்தால் பதவி விலகத் தயாராக இருப்பதாகவும், இல்லாவிட்டால் நீங்கள் பதவி விலகத் தயாரா என்றும் மு.க.ஸ்டாலினுக்கு சவால் விடுத்தார்

அப்போது பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், நீட் தேர்வு விவகாரத்தில் அரசு தெளிவாக இருப்பதாக விளக்கமளித்தார்.

இதைத்தொடர்ந்து பேசிய மு.க.ஸ்டாலின், நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் இரண்டு மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டு 6 மாதங்கள் கடந்துவிட்டதால் மீண்டும் தீர்மானம் போட முடியாது என்றார்.

அமைச்சர் ஏட்டிக்கு போட்டியாக பேசுவதால் மக்கள் நலன் பாதிக்கப்படுவதாகக் கூறினார். இதைத்தொடர்ந்து தி.மு.க உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

Also see...

First published: July 10, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்