வெளிநாட்டு நாற்று வகைகளால் கால்நடைகளுக்கு கருச்சிதைவு - நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை

விவசாயிகள்

ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. தமிழக வேளாண்மைதுறை மூலமாக அறிமுகப்படுதப்பட்டுள்ள நாற்றுகளால் எவ்வித பாதிப்பும் இல்லை

  • Share this:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் வெளிநாட்டு நாற்று பயிர்களால் கால்நடைகளுக்கு கருச்சிதைவு மற்றும் சினைப்பிடிப்பதில் பிரச்சினை உருவாகி உள்ளதாக கால்நடை வளர்ப்பவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தமிழகம் முழுவதும் இதே பிரச்சினை நிலவி வருவதால் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகளும், கால்நடை வளர்ப்பவர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக விவசாயிகள் கால்நடைவளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றன. ஆடு, மாடுகள் அதிகளவில் வளர்க்கப்பட்டு வருகின்றன. விவசாய தோட்டங்களில் கால்நடைகளுக்கு தேவையான தீவனங்களை வளர்த்து, அதனை கால்நடைகளுக்கு போட்டு வந்தனர்.

தாங்கள் வளர்க்கும் மாடுகளுக்கு விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டு இருந்த சோளம், கம்பு வகைகள் அறுவடைக்கு பின்னர் அந்த தட்டைகளை சேமித்து வைத்து உணவாக போட்டு வந்தனர். அது மட்டுமின்றி புண்ணாக்கு,பருத்திக்கொட்டை, தவிடு போன்ற தீவனங்களையும் மாடுகளுக்கு போட்டு வருகின்றனர்.

மேலும், மாடுகளுக்கு பச்சை தீவனங்களுக்காக என்று நாற்று வகைகளையும் விவசாயிகள் தீவனத்திற்காக பயிரிட்டு வருகின்றனர். அதிலும் தமிழக வேளாண்மை துறை மூலமாக பரிந்துரை செய்த கோயபஸ் 29, 31, கோ-3, கோ-4 உள்ளிட்ட நாற்றுகளை பயிரிட்டு கால்நடைகளுக்கு உணவிற்காக போட்டு வந்தனர்.

இந்நிலையில், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட வறட்சி காரணமாக விவசாயிகள் நாற்றுகளை பயிரிட முடியாத நிலை ஏற்பட்டது. ஏனெனில் நாற்றுகளுக்கு தண்ணீர் அவசியம் என்பதால் அதனை பயிரிட முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் புண்ணாக்கு, பருத்திக்கொட்டை, தவிடு போன்றவற்றின் விலையும் அதிகரித்த காரணத்தினால் கால்நடை வளர்ப்பவர்களும், விவசாயிகளும் வறட்சி தாங்க கூடிய வெளிநாட்டு வகை நாற்றுகளை பயிரிட தொடங்கினர்.

ஆஸ்திரேலியா, தாய்லாந்து நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சூப்பர் நேப்பியர், ரெட் நேப்பியர், குட்டை நேப்பியர் போன்ற நாற்று வகைகளை பயிரிட்டனர். நமது நாட்டு ரகங்களை விட வெளிநாட்டு ரகங்கள் வறட்சி தாங்கியது மட்டுமின்றி அதிக விளைச்சல் கொடுத்த காரணத்தினால் தமிழகத்தில் அதிகளவில் பயிரிடப்பட்டு வருகிறது.தமிழக அரசின் வேளாண்மை துறையினால் பரிந்துரைக்கப்பட்ட நாற்று பயிர்களில் ஆண்டுக்கு ஒரு ஏக்கருக்கு 80 டன் விளைச்சல் இருந்தால் வெளிநாட்டு நாற்று பயிர்கள் மூலமாக 200 டன் விளைச்சல் கிடைத்த காரணத்தினால், கால்நடைகளுக்கு தீவன தட்டுபாடு ஏற்படாது என்று கருதி விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். மேலும், வெளிநாட்டு நாற்றுகளை அறுவடை செய்யும் போது அதிக சுனை இருக்காது என்பதால் அதனை எளிதில் அறுக்க முடிந்தது.

மேலும், வெளிநாட்டு நாற்றுகள் கரும்பு பயரிடுவது போல பயிரிட்டதால் ஒரு கருணையை நட்டு வைத்தால் அதில் இருந்து முன்று கருணையாக வளர்வது மட்டுமின்றி 12 முதல் 16 அடி உயரம் வரை தன்மை கொண்டதாக உள்ளது. கால்நடை தீவனம் விலை உயர்வு, வறட்சி ஆகிய காரணங்களினால் வெளிநாட்டு நாற்றுகளை விவசாயிகள் பயிரிட்டு வந்த நிலையில் அதுவே தற்போது பிரச்சினைக்குள்ளாகி உள்ளது.

வெளிநாட்டு நாற்று பயிர்களில் ஆக்சலிக் அமிலம் அதிகமாக இருப்பதால் அதனை உண்ணும் மாடு, ஆடுகளுக்கு சினைப்பிடிப்பதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது மட்டுமின்றி கருச்சிதைவு ஏற்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் நாட்டு கால்நடை இனங்கள் அழியும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

கால்நடைகளுக்கு ஆரம்பகாலகட்டத்தில் சோளம், கம்பு தட்டைகள் மற்றும் நாற்று தான் உணவாக போட்டு வந்தோம், வறட்சி மற்றும் தீவன பற்றாக்குறையை போக்க வேண்டும் என்பதால் வெளிநாட்டு வகைகளான சூப்பர் நேப்பியர், ரெட் நேப்பியர், குட்டை நேப்பியர் போன்ற பயிர்வகைகளை பயிரிட்டுள்ளதாகவும், தமிழக வேளாண்மை துறை பரிந்துரை செய்துள்ள நாற்று பயிர்களை விட, வெளிநாட்டு பயிர்கள் அதிக விளைச்சல் இருந்த காரணத்தினால் தான் இதனை பயிரிட்டு வந்ததாகவும், இதில் அதிக ரசாயனம் இருப்பதால், இதனை தவிர்க்க வேளாண்மை துறை தவிர்க்க கூறி வருகின்றனர்.

“கால்சியம் அதிக அளவில் சாணம், கோமியம் மூலமாக  வெளியேறுவதால் மாடுகளுக்கு ரத்த சோகை ஏற்பட்டு, பால் குறைவு ஏற்படுவதாகவும், இனி வரும் காலங்களில் தமிழக அரசு பரிந்துரை செய்த நாற்று பயிர்களை பயிரிட உள்ளதாக” கூறுகிறார் நெட்நேப்பியர் பயிரிட்டுள்ள விவசாயி கருப்பசாமி.

கடந்த 4 ஆண்டுகளில் வறட்சி மற்றும் கால்நடை தீவனங்கள் விலை உயர்வு காரணமாக வெளிநாட்டு நாற்றுபயிர்களை விவசாயிகள் தமிழகம் முழுதுவம் பயிரிட்டு வருகின்றனர். இந்த பயிர்களில் ஆக்சாலிக் அமிலம் 2.8 சதவீதம் தான் இருக்க வேண்டும் என்று அரசு அனுமதித்துள்ளது. ஆனால் வெளிநாட்டு பயிர்களில் ஆக்சாலிக் அமிலம் அதிகமாக இருப்பதால் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் சினைப்பிடிப்பது தடைபட்டுள்ளது மட்டுமின்றி, சினைப்பிடித்துள்ள கால்நடைகளுக்கு கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது.”எவ்வித ஆய்வு செய்யமால் வெளிநாட்டு பயிர்கள் எப்படி அனுமதிக்கப்பட்டன என்று தெரியவில்லை. தமிழகம் முழுவதும் விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். இதனை அகற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், மானியம் கொடுத்து உள்ளநாட்டு நாற்றுகளை பயிரிட ஊக்குவிக்க வேண்டும் என்கிறார்” தேசிய விவசாயிகள் சங்கத்தினை தலைவர் ரெங்கநாயகலு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

இது குறித்து, வேளாண்மை துறை மற்றும் கால்நடைத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, “வெளிநாட்டு நாற்றுகள் குறித்த குற்றச்சாட்டு குறித்து ஆய்வுகள் நடைபெற்று வருவதாகவும், தமிழக வேளாண்மைதுறை மூலமாக அறிமுகப்படுதப்பட்டுள்ள நாற்றுகள் எவ்வித பாதிப்பும் இல்லை என்றும், அதனை பயன்படுத்து வேண்டும் என்று விவசாயிகளிடம், கால்நடை வளர்ப்பவர்களிடமும் அறிவுறுத்தி வருவதாக” கூறுகின்றனர்.

Must Read : மூன்றே நாட்களில் 2700 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் - அமைச்சர் மா.சுப்ரமணியன்

வறட்சி மற்றும் கால்நடை தீவனங்கள் விலை உயர்வு காரணமாக மாற்று பயிர் என்று விவசாயிகள் பயிரிட்ட வெளிநாட்டு நாற்றுகள் தற்பொழுது கால்நடைகளுக்கு பிரச்சினையாக உருவாகி உள்ளதால் அதனை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மட்டுமின்றி உள் நாட்டு நாற்றுகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி அதனை பயிரிட ஊக்குவிக்க வேண்டும் என்பது அனைவரின் விருப்பமாக உள்ளது.
Published by:Suresh V
First published: