வட மாநில தொழிலாளர்கள் யாரவது அச்சுறுத்தல் ஏற்படுத்தினால் காவல் துறையின் உதவி எண்கள் அழைத்து புகார் தெரிவிக்காலம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
புலம் பெயர் தொழிலாளர்கள் குறித்து வெளியான பொய்யான தகவலை அடுத்து அறிக்கை வெளியிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கொரோனா இரண்டாவது அலையின் போது சொந்த மாநிலங்களுக்குத் திரும்பச் செல்ல விரும்பிய வடமாநிலத் தொழிலாளர்களுக்கு உதவி செய்யும் வகையில், மாவட்டம் தோறும் கட்டுப்பாட்டு அறைகள் உருவாக்கப்பட்டன. சென்னை, கோவை, திருப்பூர், மதுரை, நெல்லை, சேலம் ஆகிய மாவட்டங்களில் உள்ள இரயில் நிலையங்களில் உதவி மையங்கள் உருவாக்கப்பட்டன என்றார்.
சென்னைப் பெருநகர மாநகராட்சி, உள்ளாட்சி அமைப்புகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் இணைந்து அந்த தொழிலாளர்களுக்குத் தேவையான உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டு, போக்குவரத்து வசதிகளும் செய்து தரப்பட்டன. இவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்த முகாமுக்கு நானே சென்று பார்த்து, அவர்களுக்கு உரிய வசதிகள் செய்து தரப்பட்டதை உறுதி செய்தேன். அதேபோல், குடும்ப அட்டை இல்லாத, வேலைகளை இழந்த 1 இலட்சத்து 29 ஆயிரத்து 440 புலம்பெயர் தொழிலாளர்களுக்கு 15 கிலோ அரிசி, 1 கிலோ துவரம்பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணெய் வழங்கப்பட்டது என குறிப்பிட்டார்.
அனைத்து மாநிலத் தொழிலாளர்களுக்கு, பணிக்காலத்தில் ஏற்படும் விபத்து இழப்பீடாக 1.4.2021 முதல் இதுவரை ரூபாய் 6.27 கோடி வழங்கப்பட்டுள்ளது. கட்டுமானத் தொழிலில் அவர்கள் பணிபுரியும் போது, பாதுகாப்பாகப் பணிபுரியவும், விபத்துக்களைத் தவிர்க்கவும் அவர்களுக்கு உரிய விழிப்புணர்வு பயிற்சி முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இதுவரை 456 பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. அதன்மூலம், 43 ஆயிரம் தொழிலாளர்கள் பயிற்சி பெற்றுள்ளார்கள். தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து புலம்பெயர் தொழிலாளர்களும் தங்களது பெயர்களை பதிவு செய்ய வலைத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
இப்படி வெளிமாநிலத் தொழிலாளர்கள் அனைவரையும் கனிவோடு நாங்கள் கவனித்து வருகிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.
வடமாநிலத் தொழிலாளர் தோழர்கள் எவ்வித அச்சமும் அடைய வேண்டாம். அப்படி யாராவது உங்களை அச்சுறுத்தினால் காவல் துறையின் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் தகவல் தாருங்கள் எனக் கேட்டுக் கொள்கிறேன்.இங்குள்ள அனைத்து மாநிலத் தொழிலாளர்களுக்கும் அரணாக இந்த அரசும், தமிழ்நாட்டு மக்களும் இருப்பார்கள் என்பதை இங்குள்ள தொழிலாளர் சகோதரர்களுக்கு அன்புடன் தெரிவித்துக் கொள்வதோடு, தவறான செய்திகளின் அடிப்படையில் நீங்கள் எவரும் எவ்வித அச்சமும் கொள்ள வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறேன்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வட மாநில தொழிலாளர்களிடையே ஏற்பட்டுள்ள அச்ச உணர்வை போக்கும் வகையில் (0421-2203313, 9498101300, 9498101320) போலீசார் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பாதுகாப்பு இல்லாததுபோல் உணர்ந்தால் 8883920500 எண்ணை அழைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CM MK Stalin, Migrant Workers