காவல்துறையினரின் நடவடிக்கைகளில் அமைச்சர்கள் தலையிடக் கூடாது - முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை

முக ஸ்டாலின்

காவல்நிலையங்களுக்கு நேரில் செல்லவோ, செல்போனில் பேசவோ கூடாது என்றும், காவல்துறையினர் தவறு செய்தால் தன்னிடம் தெரிவிக்கும்படியும் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

  • Share this:
    காவல்துறையினரின் நடவடிக்கைகளில் அமைச்சர்கள் தலையிடக் கூடாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

    தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற நிலையில், முதல் அமைச்சரவைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அமைச்சர்களுக்கு சில அறிவுறுத்தல்களை முதலமைச்சர் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகின. அதன்படி, அமைச்சர்கள் தங்களது உதவியாளர்கள் நியமனத்தில் கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். தேவையில்லாத சர்ச்சைகளை தவிர்க்க வேண்டும், காவல்துறையினரின் செயல்பாடுகளில் எக்காரணம் கொண்டு தலையிடக் கூடாது என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

    காவல்நிலையங்களுக்கு நேரில் செல்லவோ, செல்போனில் பேசவோ கூடாது என்றும், காவல்துறையினர் தவறு செய்தால் தன்னிடம் தெரிவிக்கும்படியும் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். அதிகாரிகள் நியமனங்கள், பணிமாறுதல்களில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ள ஸ்டாலின், தவறு செய்தால் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுப்பேன் என்றும் பதவி நீக்கம் செய்யவும் தயங்க மாட்டேன் என்றும் கண்டிப்புடன் கூறியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    காவல்துறையினரின் நடவடிக்கையில் அமைச்சர்கள் தலையிடுவதை தடுப்பது முதலமைச்சரின் கடமை என்றும், இதனை செயல்படுத்தினால் வரவேற்கத்தக்கது என்றும் பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்திருக்கிறார்.

    திமுக ஆட்சியில் காவல்துறை செயல்பாடுகளில் கட்சியினரின் தலையீடு இருக்கும் என்ற குற்றச்சாட்டு எழக் கூடாது என்பதில் மு.க.ஸ்டாலின் தெளிவாக இருப்பதகாவும் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் கூறியுள்ளார்.

    10 ஆண்டுகளுக்கு பின் திமுக ஆட்சிக்கு வந்திருக்கும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய பாதையில் செயல்படத் தொடங்கியிருப்பதாகவும் பத்திரிகையாளர்கள் தெரிவித்துள்ளனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Esakki Raja
    First published: