திராவிட களஞ்சியம்- சங்கத் தமிழ் நூல்களில் பெயரை மாற்றும் முயற்சியா? அமைச்சர் விளக்கம்!

தங்கம் தென்னரசு

சிந்து சமவெளி நாகரீகத்துக்கும் நமக்குள் இருக்கக்கூடிய மொழி தொடர்புகள் வரலாற்று இணைப்புகள் எல்லாம் விளக்கக் கூடிய வகையிலே ஒரு தொகுப்பாக திராவிட களஞ்சியம் இருக்கும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

 • Share this:
  திராவிட களஞ்சியம் தொடர்பாக தேவையற்ற சர்ச்சை கிளப்பப்படுவதாகவும் இந்த விவகாரத்தில் குட்டையை குழப்பி மீன்  பிடிக்க முயற்சி செய்ய வேண்டாம் என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

  தமிழக சட்டப்பேரவையில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் அறிவிப்பு வெளியிட்ட  துறையின் அமைச்சர் தங்கம் தென்னரசு, “சங்க இலக்கியங்களைச் சந்தி பிரித்து எளிமைப் பதிப்புகளாகவும், திராவிடக் களஞ்சியம் என்ற தொகுப்பு நூலையும் தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் கூட்டு வெளியீடுகளாகக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கெனத் தொடராச் செலவீனமாக ரூபாய் 10 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்” என்ற அறிவிப்பையும் வெளியிட்டார்.

  இதனிடையே, சங்க இலக்கியங்களை  தொகுத்து அவற்றுக்கு திராவிட இலக்கியம் என தமிழக அரசு பெயர் சூட்ட முயற்சிப்பதாக இந்த அறிவிப்பு தவறாக பரப்பப்பட்டத். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன் உள்ளிட்டோர் அரசின் அறிவிப்புக்கு கண்டனம் தெரிவிப்பதாக கூறினர்.

  இந்நிலையில், அரசின் அறிவிப்பு தொடர்பாக தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அமைச்சர் நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். அதில்,  திராவிட களஞ்சியம் தேவையற்ற சர்ச்சை என்றும்  என்ன அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறோம் என்று முறையாக படிக்க வேண்டும், படித்துவிட்டு கருத்துக்களை கூற வேண்டும் என்றும் தெரிவித்தார்.  திராவிட களஞ்சியம் என்பது 150 ஆண்டுகளாக திராவிட இயக்கம், திராவிட உணவாளர்கள், திராவிட மொழிகள் சார்ந்து அவர்கள் தொடர்ச்சியாக நாம் சமுதாயத்தில் எடுத்து வைத்துள்ள மொழிக்கொள்கை, மாநில சுயாட்சி, இட ஒதுக்கீடு, சமூக நீதி  ஆகியவை.  இதையெல்லாம் குறித்து இந்தத் தளங்களில் பல ஆய்வுக் கட்டுரைகள், தலையங்கங்கள், கருத்துக்கள், கவிதைகள் எல்லாம் ஒன்று சேர்த்து தற்காலத்தில் இருப்பவர்கள் வரை சிந்து சமவெளி நாகரீகத்துக்கும் நமக்குள் இருக்கக்கூடிய மொழி தொடர்புகள் வரலாற்று இணைப்புகள் எல்லாம் விளக்கக் கூடிய வகையிலே ஒரு தொகுப்பாக திராவிட களஞ்சியம் என்ற பெயரிலே ஒரு தொகுப்பாக
  வருகிறது என்று கூறினார்.  சங்கத் தமிழ் நூல்களுக்கு திராவிட களஞ்சியம் என்ற பெயரை சூட்ட தமிழ்நாடு அரசு முயற்சிக்கிறது என்ற கூற்று அடிப்படை அற்றது, உண்மை அற்றது என்று விளக்கமளித்த அவர்,  செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் சார்பில் தொல்காப்பியத்திலிருந்து வரக்கூடிய செவ்வியல் இலக்கியங்களை எல்லாம் தொகுத்து அவர்கள் வெளியிடுகிறார்கள். அதற்கு தமிழ்நாடு அரசு 10 லட்சம் தன்னுடைய பங்களிப்பை வழங்கி இருக்கிறது. இவை ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை தனியானவை தனித்துவமானவை, எனவே இவற்றை எல்லாம் ஒன்றாக போட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம். குழப்புவதற்கான முயற்சியிலும் ஈடுபட வேண்டாம், அப்படி குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கவும் முயல வேண்டாம் என்று தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

  இதையும் படிங்க: சமூகநீதி இட ஒதுக்கீடு போராட்டத்தில் பலியான 21 பேருக்கு மணிமண்டபம்: தமிழக அரசு அறிவிப்பு!


  இதேபோல், தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ் வளர்ச்சித் துறையின் அறிவிப்பில் உள்ள 10 ஆவது அறிவிப்பு இரண்டு அம்சங்களைக் கொண்டது முதலாவது, இளைய தலைமுறையினருக்குச் சங்க இலக்கியச் செல்வத்தை கொண்டு சேர்க்கும் வகையில் சந்தி பிரிக்கப்பட்டு எளிமையான பதிப்புகள் வெளியிடப்படும்.

  இரண்டாவது அம்சம் கால்டுவெல் தொடங்கி எமனோ, பர்ரோ, அஸ்கோ பார்போலா, ஐராவதம் மகாதேவன், ஆர்.பாலகிருஷ்ணன் போன்ற திராவிடவியல் அறிஞர்களின் ஆய்வுகள், திராவிட இயக்கம், சுயமரியாதை, சமூக-நீதி, இட ஒதுக்கீடு, இரு மொழிக் கொள்கை, மாநில சுயாட்சி போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்துக் கடந்த 150 ஆண்டுகளில் தமிழக, இந்திய மற்றும் வெளிநாட்டு அறிஞர்கள் எழுதிய தலையங்கங்கள், கதைகள், கவிதைகள், கட்டுரைகள் மற்றும் ஆராய்ச்சிக் கட்டுரைகளைத் தொகுத்துத் திராவிடக் களஞ்சியம் என்ற தனி நூலாக வெளியிடப்படும் என்பதாகும்” என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Murugesh M
  First published: