ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ரூ.100 செலவு செய்தால் ரூ.325 வருவாய்.... பரந்தூரில் விமான நிலையம் அமைப்பது குறித்து அமைச்சர் விளக்கம்

ரூ.100 செலவு செய்தால் ரூ.325 வருவாய்.... பரந்தூரில் விமான நிலையம் அமைப்பது குறித்து அமைச்சர் விளக்கம்

பரந்தூர்

பரந்தூர்

விமான நிலையத்தை அமைக்கும் விகாரத்தில் 100 ரூபாய் செலவு செய்தால், 325 ரூபாய் வருவாய் கிடைக்கும். புதிய விமான நிலையம் அமைக்கப்பட்டால் சென்னை நகரத்தோடு பல புதிய வழித்தடங்கள் உருவாகும்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பரந்தூர் அருகே புதிய விமான நிலையத்தை அமைக்கும் விகாரத்தில் 100 ரூபாய் செலவு செய்தால், 325 ரூபாய் வருவாய் கிடைக்கும் என அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்துள்ளார்.  மேலும்,  புதிய விமான நிலையம் அமைப்பது காலத்தின் தேவை என்றும், விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்காத அளவிற்கு உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் பரந்தூர் விமான நிலைய விவகாரம் தொடர்பாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி உறுப்பினர் வேல்முருகன் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இதில் பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள் கருத்துக்களை எடுத்து வைத்தனர்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சி உறுப்பினர் வேல்முருகன் பேசியபோது, "பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதால் விவசாயிகளுக்கு கடுமையான பாதிப்பு ஏற்படும். 700 ஆண்டுகளாக, 300 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த விவசாய நிலங்களை இழக்க நேரிடுகிறது. 2,666 ஏக்கர் நிலங்கள் விளைநிலங்களாக இருக்கின்றன.

கலைஞர் ஆட்சி காலத்தில் புதிய விமான நிலையம் குறித்த கருத்து வந்த போது , வீடுகள் இல்லாத, விளைநிலங்கள் பாதிக்காத அளவிற்கு நடவடிக்கை எடுத்தார். அது போன்று விவசாயிகளை பாதிக்காத அளவிற்கு வேறு இடத்தில் விமான நிலையத்தை அமைப்பதற்கோ, அல்லது இத்திட்டத்தை கைவிடுவதற்கோ தமிழக அரசு முன்வர வேண்டும்", என்று வலியுறுத்தினார்.

மேலும், தொடர்ந்து பேசிய வேல்முருகன், "நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்திற்கு நிலங்களை கொடுத்தவர்கள் இன்று வரை போராடிக் கொண்டிருக்கிறோம். மத்திய அரசு நிரந்தர வேலை வாய்ப்புகளையும் வழங்கவில்லை, உரிய இழப்புகளையும் தரவில்லை. அதுபோன்ற நிலை இங்கேயும் ஏற்பட்டு விடக்கூடாது. எனவே தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்", என்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் ராமச்சந்திரன் பேசிய போது, "பரந்தூர் விமான நிலைய திட்டம் விவசாயிகளை கடுமையாக பாதிக்கிறது", என்று தெரிவித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் நாகை மாலி பேசுகையில், "இந்த திட்டத்தால் விவசாயிகளுக்கு கடும் பாதிப்பு ஏற்படும். இது தொடர்பாக மக்களிடையே தொடர்ந்து தமிழ்நாடு அரசு பேச வேண்டும். அவர்களுடைய அனுமதியோடு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாதிக்கப்படும் மக்களுக்கு உரிய இழப்பீடுகளை தர வேண்டும்", என்றார்.

இதையும் படிங்க: ரூ.1,500 கோடியில் கூடுதலாக 7200 வகுப்பறைகள்.. 110 விதியின் கீழ் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர்

பாமக உறுப்பினர் ஜிகே மணி பேசியபோது, "புதிய விமான நிலையம் அவசியம் தேவை. திட்டத்திற்கு நாங்கள் முட்டுக்கட்டையாக இருக்கவில்லை. அதே நேரத்தில் மக்கள் தங்களுக்கு மிகப்பெரும் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக கருத்து கேட்பு கூட்டங்களின் போது தெரிவித்திருக்கிறார்கள். எனவே இந்த விவகாரத்தில் அரசு கவனம் செலுத்தி மக்களின் கருத்துக்களை உள்வாங்கிக் கொண்டு செயல்பட வேண்டும்", என்று வலியுறுத்தினார்.

காங்கிரஸ் கட்சி உறுப்பினர் செல்வப்பெருந்தகை பேசுகையில், "பரந்தூர் விமான நிலைய திட்ட விவகாரத்தில் சில சக்திகளும், சில தீய இயக்கங்களும் மக்களிடையே விஷ விதைகளை தூவி வருகின்றனர். தமிழ்நாடு மக்களை இமைக்காப்பது போல் முதலமைச்சர் பாதுகாத்து வருகிறார். தொகுதி சட்டமன்ற உறுப்பினர் என்ற வகையில் மக்கள் தன்னை நம்புகிறார்கள். நான் முதலமைச்சரை நம்புகிறேன். மக்கள் பாதிக்காத அளவிற்கு இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும்", என்று வலியுறுத்தினார்.

சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மான விவாதங்களுக்கு பதில் அளித்து பேசிய தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, "சென்னையில் பசுமை வளாக விமான நிலையம் ஏன் தேவை என்பதை விளக்க விரும்புகிறேன். தற்போதுள்ள விமான நிலையம் 2.2 கோடி பயணிகளை கையாளும் திறன் பெற்றதாக இருக்கிறது.

2028 ஆம் ஆண்டு 3.5 கோடி பயணிகளை கையாளக்கூடிய நிலை ஏற்படும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

2009 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை 9 விழுக்காடு வளர்ச்சியை சென்னை விமான நிலையம் பெற்றிருக்கிறது. 2008 ஆம் ஆண்டில் பயணிகளை கையாள்வதில் மூன்றாவது இடத்தில் சென்னை விமான நிலையம் இருந்தது. ஐந்தாவது இடத்திலிருந்து பெங்களூரு விமான நிலையம் மூன்றாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது.

மேலும் படிக்க: தூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரம்; குற்றவாளியை கூண்டில் ஏற்றுக - வைகோ ஆவேசம்

ஐதராபாத் விமான நிலையம் 14 விழுக்காடு வளர்ச்சியையும், பெங்களூரு 12 விழுக்காடு வளர்ச்சியையும் பெற்றிருந்த நிலையில், சென்னை விமான நிலையத்தின் வளர்ச்சி 9 விழுக்காடாக இருக்கிறது.

சரக்குகளை கையாள்வதில் சென்னை விமான நிலையம், நான்கு விழுக்காடு வளர்ச்சியையும், பெங்களூரு மற்றும் ஹைதராபாத் விமான நிலையங்கள் இரண்டு மடங்கு கூடுதல் வளர்ச்சியை பெற்றுள்ளது.

மேலும், சரக்குகளை கையாள்வதில் சென்னை விமான நிலையத்திற்கு பல சிக்கல்கள் இருக்கிறது. இரவு நேரத்தில் மட்டுமே சரக்குகளை கையாள முடிகிறது. இதில் மிகப்பெரிய ஒரு பொருளாதார பின்னடைவை சென்னை விமான நிலையம் சந்திக்கிறது.

இதன் காரணமாகவே பசுமை வளாக புதிய விமான நிலையம் தேவையாக இருக்கிறது . இது காலத்தின் தேவை. இத்தகைய புதிய விமான நிலையம் அடுத்த 35 ஆண்டுகளின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மதிப்பீடு செய்யப்பட்டு அமைக்கப்படுகிறது.

இதனை அமைத்து முடிக்கவே எட்டு ஆண்டுகள் பிடிக்கும். பத்து கோடி பயணிகளை கையாளக்கூடிய வகையில் இவை இருக்கும். தற்போதுள்ள விமான நிலையமும் தொடர்ந்து செயல்படும். புதிய விமான நிலையமும் தொடர்ந்து செயல்படும்.

பழைய விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதில் சிக்கல்கள் இருக்கின்றன. இதற்கு 306 ஏக்கர் நிலங்கள் தேவைப்படும். இதற்காக பத்தாயிரத்து ஐநூறு கோடி ரூபாய் தேவைப்படும்.

விமான நிலையத்தை அமைக்கும் விகாரத்தில் 100 ரூபாய் செலவு செய்தால், 325 ரூபாய் வருவாய் கிடைக்கும். புதிய விமான நிலையம் அமைக்கப்பட்டால் சென்னை நகரத்தோடு பல புதிய வழித்தடங்கள் உருவாகும். இதனால் பொருளாதார வளர்ச்சி ஏற்படும். சரக்குகளை கையாள்வதில் மாபெரும் வளர்ச்சி கிடைக்கும்.

புதிய விமான நிலையத்தை அமைப்பதில் மக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.  இது தொடர்பாக மக்களோடு பொதுப்பணித்துறை அமைச்சர் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் பலமுறை சந்தித்து பேசியுள்ளனர்.

11 இடங்களில் புதிய விமான நிலையம் அமைப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆனால் மற்ற இடங்களில் விமான நிலையம் அமைப்பதில் பல்வேறு சிக்கல்கள் இருக்கின்றன என்பதால் , இறுதியில் பரந்தூர் தேர்வு செய்யப்பட்டது. விவசாயிகள் பாதிக்காத அளவிற்கு, அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத அளவிற்கு, அனைத்து கட்சி உறுப்பினர்களின் கருத்துக்களை உள்வாங்கி முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார்", என்றார்.

Published by:Murugesh M
First published:

Tags: Airport, Chennai Airport