முகப்பு /செய்தி /தமிழ்நாடு / போக்குவரத்துதுறை ஊழியர்களின் பேட்டா, வாரிசுதாரர்களுக்கு வேலை கோரிக்கை ஏற்பு - அமைச்சர் விளக்கம்

போக்குவரத்துதுறை ஊழியர்களின் பேட்டா, வாரிசுதாரர்களுக்கு வேலை கோரிக்கை ஏற்பு - அமைச்சர் விளக்கம்

அமைச்சர் சிவசங்கர்

அமைச்சர் சிவசங்கர்

தொழிலாளர்களின் பேட்டா, வாரிசுதாரர்களுக்கு வேலை, பணி உயர்வு, புதிய பணி நியமனம் உள்ளிட்ட கோரிக்கைகள் ஏற்கப்பட்டதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

  • Last Updated :

போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கான 14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை சென்னை குரோம்பேட்டை மாநகர போக்குவரத்து கழக பயிற்சி மையத்தில் நடைபெற்றது. போக்குவரத்துதுறையின் அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 66  சங்கத்தினர் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை அமைச்சரிடம் எடுத்துரைத்தனர்.

மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை நிறைவேற்றப்படும் ஊதிய ஒப்பந்தம் கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் நிறைவேற்றப்படாமல் இருந்த நிலையில் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் இடைக்கால நிவாரணமாக மாதம்தோறும் 1000 வழங்கப்பட்டு வருகின்றது.

பேச்சுவார்த்தை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவசங்கர், ‘பணியில் இறந்தவர்களின் வாரிசுகள் 10 ஆண்டுக்கு மேலாக வேலை பெற காத்திருக்கின்றனர். வரும் 14 ம் தேதி முதலமைச்சர் அவர்களுக்கு பணி நியமன ஆணையை  வழங்குகிறார். கொரோனா பணிக்கால பேட்டா 300 ரூபாய் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றுள்ளோம். மகளிர் இலவச பேருந்து ஓட்டுநர், நடத்துநருக்கு பயணியர் எண்ணிக்கைக்கு ஏற்ப பேட்டா வழங்கும் கோரிக்கையை ஏற்றுள்ளோம்.

நீண்ட காலமாக பதவி உயர்வு இல்லாமல் இருப்போர் தொடர்பாக கணக்கெடுப்பு நடத்தி தீர்வு காணப்படும். ஓய்வு பெற்றோருக்கு மருத்துவ காப்பீடு வழங்குவதற்கு புதிய ஒப்பந்தம் கோரப்பட உள்ளது.

ஊதிய உயர்வு தொடர்பாக, 1.9.19 முதல் 31.12.21 வரை 2 சதவீதமும் 1.1.22 முதல் இதுநாள் வரை 3 சதவீதம் என உயர்த்தி போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 5 சதவீதம் ஊதிய உயர்வு வழங்க உறுதியளித்துள்ளோம்.

பெரும்பாலான கோரிக்கைகள் ஏற்கப்பட்டன. பிற கோரிக்கைகள் முதல்வர் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். 40 லிருந்து 61 சதவீதமாக பெண்களின் பேருந்து பயணம் அதிகரித்துள்ளது. எனவே பயணியர் நிறுத்தங்களில் பலர் காத்திருக்கின்றனர். ஆனால் வெள்ளைப் பலகை பேருந்துகளின் எண்ணிக்கை குறைக்கப்படவில்லை. போக்குவரத்து கழக ஊழியர்களின் ஊதிய விகித பிரச்சனையை தீர்க்க குழு அமைக்கப்பட உள்ளது.

போக்குவரத்து துறையில் புதிய பணி நியமனம் தொடர்பாக நிதித்துறைக்கு கோப்புகள் அனுப்பப்பட்டு உள்ளன. விரைவில் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவித்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த  கமலக்கண்ணன், ‘பேச்சுவார்த்தை கிட்டதட்ட 3 மணி நேரமாக நடந்தது. எடப்பாடியார் வழங்கியது போல நல்ல ஊதியத்தை தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும் என்பதே எங்களது எதிர்பார்ப்பு. எங்கள் கோரிக்கை மலைக்கும் மடுவுக்குமாக இருக்கிறது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 5 சதவீத ஊதிய உயர்வு என்பது அதிமுக கொடுத்த இடைக்கால நிவாரணத்தை தொழிலாளர்களிடமிருந்து  திரும்ப பெற்றிடும்  வகையில் இருக்கிறது.

அதிமுக ஆட்சியில் 25 சதவீத உயர்வுக்கு கடிதம் கொடுத்தவர்கள், இன்று 8 சதவீதம் போதும் என்று பேச்சுவார்த்தையின் தொடக்கத்திலேயே கூறிவிட்டனர். போக்குவரத்து துறை 48 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் இருப்பதாக அமைச்சர் கூறுகிறார். அதிமுக ஆட்சியின் போதே நாங்கள் முன்வைத்த 53 கோரிக்கையில் முதல் கோரிக்கை போக்குவரத்து தொழிலாளர்களை அரசு ஊழியர்களாக்க வேண்டும் என்பதுதான். 15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடைபெற உள்ள நிலையில் ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் என எதிர்பார்த்தோம்.

டெல்டா மாவட்டத்தில் விவசாயத்தைப் பாதிக்கும் ஆலையை தமிழக அரசு அமைக்காது - முதல்வர் மு.க.ஸ்டாலின்

மன உளைச்சல் இன்றி பணியாற்றும் வகையில் ஊதிய உயர்வு அமைய வேண்டும். ஊதிய விகிதாச்சாரத்தை சரிசெய்ய அமைச்சர் 3 வாரம் இடைவெளி கேட்டிருக்கிறார். ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமியிடம் ஆலோசித்து எங்களது முடிவை அறிவிப்போம்.

17,500 ரூபாய் ஊதியம் பெறுபவருக்கு 5 சதவீத ஊதிய உயர்வு என்றால் 800 ரூபாய்க்குள்தான் வரும். பேச்சுவார்த்தையின் இடையே நாங்கள் இடைக்கால நிவாரணமே 1000 ரூபாய் கொடுத்தோம். இப்போது அதை திரும்ப பெற்றுவிடும் வகையில்தான் இந்த அறிவிப்பு உள்ளது.

25 சதவீதம் உயர்வு கேட்டவர்கள் அரசின் நிதி நெருக்கடி யை காரணம் காட்டி 8 சதவீதத்தில் பேச்சுவார்த்தை யை தொடங்குவது எப்படி சரியாகும். வெள்ளை பலகை பேருந்து தொழிலாளர்கள் பேட்டா இல்லாமல் கைக்காசில் டீ அருந்தும் நிலை உள்ளது. அவர்களுக்கு 100 ரூபாய் நிரந்தர பேட்டா கேட்டோம். ஆனால் சிஐடியூ சங்கத்தினர் வெள்ளைப் பலகை பேருந்துகளுக்காக அரசு 1,200 கோடி ரூபாயை போக்குவரத்து துறைக்கு கொடுப்பதால் அதன் அடிப்படையில் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.இன்றைய ஆலோசனையை காலதாமதமாக்கும் முயற்சியாகவே பார்க்கிறோம்’ என்று தெரிவித்தார்.

இந்தப் பேச்சுவார்த்தை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சிஐடியு மாநிலத் தலைவர் சௌந்தர்ராஜன், ‘கோரிக்கைகளை அமைச்சர் முழுமையாக கேட்டார். 8 சதவீதம் என கோரிக்கை விடுத்தோம்.

ஊதியம் தொடர்பாக அதிமுக ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தத்தை சீர்படுத்த கோரிக்கை விடுத்தோம். அமைச்சர் அவகாசம் கேட்டுள்ளார். அந்த ஒப்பந்தத்தை சீர் செய்த பிறகு ஊதிய உயர்வு தொடர்பாக இறுதி முடுவு எடுப்போம் என்று கூறினோம்.

மகளிர் பேருந்து தொழிலாளர்களுக்கான பேட்டாவை உயர்த்த வேண்டும் எனும் கோரிக்கையை கொள்கை அளவில் அமைச்சர் ஏற்றுள்ளார். மற்ற பேருந்துகளுக்கான பேட்டா அதிமுக ஆட்சியில் 80:20 விகிதத்தில் போடப்பட்டதையும் சீர் செய்ய வலியுறுத்தினோம்.

ஒட்டுமொத்தமாக ஒப்பந்தம் குறித்த எங்களது முடிவை, எங்கள் குழுவினருடன் ஆலோசித்து அறிவிப்போம்.

top videos

    அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட ஊதிய  ஒப்பந்தம்  ஜூனியர்களுக்கு சற்று அதிகம் கொடுத்து சீனியர்களை ஏமாற்றும் வகையில் அமைந்த்து. போக்குவரத்து தொழிலாளர்களை அரசு ஊழியர்களாக்குவது என்பது அரசின் கொள்கை முடிவு. பறப்பதை பார்த்து இருப்பதை இழக்க விரும்பவில்லை. அரசியலுக்காக இது குறித்து பேச முடியாது’ என்று தெரிவித்தார்.

    First published:

    Tags: Minister Sivasankar, Transport workers