ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படும் - அமைச்சர் செந்தில் பாலாஜி

விவசாயிகள்

உள்ளாட்சி தேர்தல் நடக்கும் மாவட்டங்களில், தேர்தல் முடிந்த பின்னர் மின் இணைப்பு வழங்கப்படும்.

 • Share this:
  விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்குவது குறித்த ஆய்வுக் கூட்டம், மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின்னர், அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

  இது குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி கூறுகையில், தமிழகத்தில் விவசாய மின் இணைப்புக்காக பதிவு செய்து 4.52 லட்சம் விவசாயிகள் காத்திருக்கின்றனர். அடுத்தாண்டு மார்ச் மாதத்திற்குள் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட உள்ளது. இவற்றில், இலவச மின் இணைப்பு, அரசு திட்டம், சுய நிதி திட்டம், தட்கல் திட்டம் போன்றவை அடங்கும். பதிவு செய்து காத்திருப்போருக்கு, மின் வாரியத்தில் இருந்து கடிதம் அனுப்பப்படும்.

  அதற்காக 30 நாட்களுக்குள் இசைவு தெரிவிக்க வேண்டும். உள்ளாட்சி தேர்தல் நடக்கும் மாவட்டங்களில், தேர்தல் முடிந்த பின்னர் மின் இணைப்பு வழங்கப்படும். கடும் நிதி நெருக்கடியிலும், விவசாயிகள் நலன் காக்கப்பட வேண்டும் என்பதற்காக, இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. புதிய மின் உற்பத்தி திட்டங்கள், மின் வினியோக கட்டமைப்பு பணிகளும் விரைவில் துவக்கப்படும்.

  தமிழகத்திற்கு தினமும் 16 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தேவை. நம் சொந்த உற்பத்தி 25 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது. தனியாரிடமிருந்து 40 சதவீதம் வாங்குகிறோம். மத்திய அரசின் மின் தொகுப்பில் இருந்து மீத மின்சாரம் பெறப்படுகிறது. இந்த ஆண்டு 4,000 மெகாவாட் சூரிய மின் உற்பத்தியும், 3,000 மெகாவாட் நீர் மின் உற்பத்தியும் 2,000 மெகாவாட் எரிவாயு மின் உற்பத்தி திட்டங்களையும் செயல்படுத்த உள்ளோம்.

  Must Read : பொறுத்துப் பொறுத்துப் பார்த்துவிட்டு மக்கள் கோட்டையை நோக்கி புறப்பட்டு விடுகிறார்கள் - தலைமைச் செயலாளர்

  மாதாந்திர மின் கணக்கெடுப்பு நடத்த, கணக்கெடுப்பு பணியாளர்கள் எண்ணிக்கை இரு மடங்கு தேவை. ஏற்கனவே மின்சார வாரியத்தில் 56 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே, வரும் காலத்தில் மாதாந்திர கணக்கெடுப்பு வாக்குறுதி நிறைவேற்றப்படும் இவ்வாறு செந்தில் பாலாஜி கூறினார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Suresh V
  First published: