கரூர் அடுத்த வெண்ணைமலையில், சாமானிய மக்களையும் அங்கீகரிக்கும் வகையில் ஆற்றல் விருதுகள் என்ற பெயரில் விருது வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, இயக்குனரும் நடிகருமான பார்த்திபன், எழுத்தாளர் இமையம் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்குபெற்றனர். சாமானிய மக்களை அங்கீகரிக்கும் வகையில் தூய்மைப் பணியாளர், தச்சர், தையல் கலைஞர் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபாட்டுடன் சிறப்பாக செய்துவரும் 60க்கும் மேற்பட்ட நபர்களுக்கு விருது வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, முதலமைச்சர் என்று சொன்னால் உழைப்பு, உழைப்பு உழைப்பு என்ற ஆற்றல். அந்த ஆற்றலின் மூலமாக தமிழக மக்களின் ஒட்டுமொத்தமான அன்பை பெற்றுள்ளார். அந்த அன்பின் மூலமாக இந்தியாவில் உள்ள முதல்வருக்கெல்லாம் முதல்வராக தமிழகத்தில் நல்லாட்சி நடத்தி வருகிறார்.
கலைத்துறையில் நடிப்பாக இருந்தாலும், வசனமாக இருந்தாலும் மக்களுக்கு தேவையான அனைத்து தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய முதல் நபராக நின்று உதவக்கூடியவர் பார்த்திபன். அவர் புதிய பாதையில் பயணிப்பவர்.திரை உலகம் மட்டுமல்ல தமிழ் உலகத்தையும் அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல வேண்டும் என்ற உயரிய சிந்தனை உடையவர்.
இரண்டாயிரம் கோடிகளுக்கு மேலான நிதிகளை தந்து கரூர் மாவட்டத்திற்கு பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தமிழக முதல்வர் தந்துள்ளார். முதல் ஆண்டில் 2,000 கோடி, அடுத்த ஆண்டில் இன்னும் பல சாதனைகளை சாதனை திட்டங்களை முதல்வர் வழங்க இருக்கின்றார். என்னை உயர்ந்த நிலைக்கு கொண்டு வந்துள்ள என் மண்ணின் மக்களான கரூர் மக்களின் பாதங்களை தொட்டு என் வாழ்நாளை சமர்ப்பிக்கிறேன். என்னை இந்த உயர்ந்த நிலைக்கு கொண்டுவந்து என் பெற்றோரைப் போல கவனித்துக் கொண்டிருக்கின்ற அனைவருக்கும் நன்றி என்று பேசினார்.
Also Read : நோய் ஏற்படுத்தும் பிரதான வைரஸாக வேகம் எடுக்கும் ஒமைக்ரான்...!
இதையடுத்து பேசிய நடிகர் பார்த்திபன், இந்த ஊரில் உள்ள அனைத்து மக்களும் கருணையோடு இருப்பதால் கரூருக்கு கருணை ஊர் என்று பெயர் வைக்கலாம்.அமைச்சர் தில் பாலாஜி அவர்கள். நான் வாய் தவறி பேசவில்லை. அவர் தில் பாலாஜி அதாவது செந்தில் என்றால் செழுமையான தில் மிகுந்தவர் என்று அர்த்தம். அதனால் அவரை தில் பாலாஜி என்று பாராட்டினேன். தாயம் ஆடும்போது காய்களை வெட்டுவது உண்டு. களமும் அதுதான் - அரசியலும் அதுதான். சென்டிமென்ட்டை விட இங்கு சாமர்த்தியமும் சாதுர்யமும் அவசியம்.
மக்களுக்கு சேவை செய்ய வந்துவிட்டால் சாதுரியம் வேண்டும். கலைஞர் இடத்தில் அது தான் இருந்தது. அதையே அமைச்சரிடமும் பார்த்தேன். காய்களை நகர்த்தும் போது எப்படி பதம் பார்ப்பது என்று அமைச்சர் தெரிந்து வைத்துள்ளார். அவர் அமைச்சராக இருப்பதால் தான் கரூர் மக்களுக்கு இவ்வளவு நன்மைகளை அவரால் செய்ய முடிகிறது. மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றுள்ள அவர் மின் துறை அமைச்சர் மட்டுமல்ல! நன்துறை அமைச்சர் என்று பேசினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.