கோவையில் வன்முறையை ஏற்படுத்தவே அமைச்சர் செந்தில் பாலாஜியை நியமித்துள்ளனர் என எதிர்கட்சித் தலைவரும்,
அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான
எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
கோவை மாவட்டத்தில் இருக்கும் கரூரைச் சேர்ந்த திமுகவினரை வெளியேற்ற வேண்டும், தேர்தலுக்கு துணை இராணுவத்தினரை ஈடுபடுத்த வேண்டும் என வலியுறுத்தி இன்று காலை அதிமுக எம்எல்ஏக்கள் மாவட் ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனர். ஆட்சியர் இல்லாத நிலையில் அலுவலக வாசலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். காலை 10:30 மணிக்கு தொடங்கிய போராட்டம் பிற்பகல் 2.30 மணி 4 மணி நேரத்துக்கும் மேலாக வரை நீடித்தது.
போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் எஸ். பி.வேலுமணி மற்றும் எம்.எல்.ஏ.க்களிடம மாவட்ட ஆட்சியர் சமீரன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் எந்த உடன்பாடும் ஏற்பட வில்லை. இதனைத் தொடர்ந்து தேர்தல் அதிகாரிகள் மற்றும் துணை ஆணையர் ஜெயச்சந்திரன் ஆகியோர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவரிடம் காவல் துறையினர் உறுதியளித்தனர்.
தமிழ்நாட்டிற்கு '4.0' திட்டம் : இளைஞர்களை மையப்படுத்தி புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறது தமிழக அரசு
ஆனால், பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில் போராட்டத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் காவல் துறையினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டால் கைது செய்யப்படுவார்கள் என காவல்துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் எச்சரிக்கையையும் மீறி தொடர்ச்சியாக அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் அனைவரையும் கைது செய்ய உத்தரவிடப்பட்டது.
இதனையடுத்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி,அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தாமோதரன், அமல்கந்தசாமி, ஜெயராம், பி.ஆர்.ஜி.அருண்குமார், பொள்ளாச்சி ஜெயராமன், செல்வராஜ், சூலூர் கந்தசாமி ஆகியோரை குண்டுகட்டாக காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்நிலையில், கோவையில் வன்முறையை ஏற்படுத்தவே அமைச்சர் செந்தில் பாலாஜியை நியமித்துள்ளனர் என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
கோவை மாநகராட்சி தேர்தலில் வன்முறையை ஏற்படுத்தி, மக்களை அச்சுறுத்தி ஜனநாயக முறைப்படி வாக்களிக்காமல் தடுப்பதற்காக திமுக தலைவர்,தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ஸ்டாலின், அமைச்சர் திரு.செந்தில் பாலாஜியை நியமித்து அவர் இந்த பணியில் ஈடுபட்டிருக்கின்றார் இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
குண்டர்களையும்,ரவுடிகளையும் வெளியேற்ற வலியுறுத்தி முன்னாள் அமைச்சர், சட்டமன்ற கொறடா எஸ்.பி.வேலுமணி அவர்கள் தலைமையில் அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் காவல்துறை ஆணையர் இடத்திலும் புகார் அளித்தார்கள் அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மாநில தேர்தல் ஆணையம் திமுகவின் கைப்பாவையாகவும், மாவட்ட காவல்துறை ஏவல் துறையாகவும் செயல்படுவதை கண்டிப்பதுடன், தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெற வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.