• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • குயின்ஸ்லேண்ட் நிலத்தை மீட்க, வருவாய் துறையுடன் இணைந்து நடவடிக்கை - அமைச்சர் சேகர்பாபு

குயின்ஸ்லேண்ட் நிலத்தை மீட்க, வருவாய் துறையுடன் இணைந்து நடவடிக்கை - அமைச்சர் சேகர்பாபு

அமைச்சர் சேகர்பாபு

அமைச்சர் சேகர்பாபு

வருவாய் குறைவாக உள்ள கோவில்கள், வருவாய் அதிகம் உள்ள கோவில்களோடு இணைத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் கேர்பாபு கூறினார்.

  • Share this:
    பூந்தமல்லி அருகே காசி விசுவநாதர் கோவிலுக்கு சொந்தாமான நிலத்தை ஆக்கிரமித்து வைத்துள்ள குயின்ஸ்லேன்ட் இடம் சட்டப்பூர்வமாக மீட்கப்படும் என்றும், நிலத்தை மீட்க, வருவாய் துறையுடன் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

    பூந்தமல்லியை அடுத்த பாப்பான்சத்திரத்தில் உள்ள காசி விஸ்வநாதர் கோயில் மற்றும் வேணுகோபால் சாமி கோயிலுக்குச் சொந்தமான 177 ஏக்கர் நிலத்தை குயின்ஸ் லேண்ட் பொழுதுபோக்குப் பூங்கா நிர்வாகம் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக ஏற்கெனவே புகார் எழுந்தது. 2013ஆம் ஆண்டு குயின்ஸ் லேண்ட் நிர்வாகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தது.

    அதில், தங்களுடைய பூங்கா அமைந்துள்ள இடத்தில், 21 ஏக்கர் கோயில் நிலம் என்று கூறி, ஆக்கிரமித்த இடத்துக்கான குத்தகைத் தொகையை வழங்க வேண்டும் என, ஸ்ரீபெரும்புதூர் தாசில்தார் அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. நீண்ட ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இந்த வழக்கு, அக்டோபர் 7ஆம் தேதி நீதிபதி எம்.சுந்தர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

    அப்போது, அரசுத் தரப்பில், கடந்த 1995ஆம் ஆண்டில், சம்பந்தப்பட்ட நிலங்கள் முதலில் செல்வராஜ் என்பவருக்குக் குத்தகைக்கு விட்டதாகவும், அதைத் தொடர்ந்து வருவாய்த் துறையினர், கோயில் பெயரில் இருந்த பட்டாவை ரத்து செய்ததால், இதைப் பயன்படுத்திக்கொண்டு, குயின்ஸ் லேண்ட் நிறுவனம் சட்டவிரோதமாக இந்த நிலங்களை ஆக்கிரமித்துக் கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. அவற்றின் குத்தகைக் காலம் 1998ஆம் ஆண்டே முடிவடைந்துவிட்ட நிலையில், குயின்ஸ் லேண்ட் தொடர்ந்து நிலத்தை அத்துமீறி ஆக்கிரமித்திருந்ததாகவும் வாதிடப்பட்டது.

    மேலும், வருவாய்த் துறையினருக்கும், இந்து அறநிலையத் துறைக்குமிடையே உள்ள பிரச்சினையை, தங்களுக்குச் சாதகமாக குயின்ஸ் லேண்ட் நிறுவனம் பயன்படுத்திக் கொண்டதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், குயின்ஸ் லேண்ட் நிறுவனம் ஆக்கிரமித்துள்ள கோயில் நிலங்களை 4 வாரங்களில் மீட்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

    மேலும், அந்த நிறுவனம் வருவாய்த்துறைக்கு 1 கோடியே 8 லட்சத்து 69 ஆயிரத்து 423 ரூபாயையும், அதேபோல் கோயிலுக்கு 9.5 கோடி ரூபாயையும் இழப்பீடாகச் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். இந்நிலையில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, ஆணையர் குமரகுருபரன் மற்றும் அதிகாரிகள், காசி விசுவநாதர் கோயில் மற்றும் வேணுகோபால சுவாமி கோவில் மற்றும் குளங்கள், கோவிலுக்கு சொந்தமான இடங்களை ஆய்வு செய்தனர்.

    பின்னர் அமைச்சர் சேகர்பாபு அளித்த பேட்டியில், ஜமீன்தார்களாக வாழ்ந்தவர்கள் இந்த கோவில்களுக்கு பூஜைகள், முறைகள் செய்ய 177 ஏக்கர் இடத்தை 1884ஆம் ஆண்டு உயில் எழுதி வைத்துள்ளனர். அதனை நானும் இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் குமரகுருபரன் ஆய்வு செய்தோம். இந்த இடத்தை மீட்டெடுக்க இந்து சமய அறநிலையத்துறை வருவாய் துறையுடன் இணைந்து மீட்பு பணிகள் நடந்து வருகிறது.

    கோவில்களில் சாமி தரிசனம் செய்தால் மனம் இலகுவாகும். ஆனால் இந்த கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்த பின்பு மனம் கனமாக மாறி உள்ளது. இந்த கோவில் புனரனைப்பு பணிகள் மற்றும்  கும்பாபிஷேகம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இரண்டு குளங்கள் ஊராட்சி வசம் உள்ளது. அதனை மீட்டு சீரமைக்கப்படும். இரண்டு சத்திரம் உள்ளன. அதனை சீரமைக்கும் பணியில் இன்றே அறநிலையத்துறை இறங்கும்.

    வருவாய் குறைவாக உள்ள கோவில்கள், வருவாய் அதிகம் உள்ள கோவில்களோடு இணைத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இறைப்பணிக்காக தங்களது வாழ்வை அர்ப்பணித்துள்ள அர்ச்சகர்கள் வாழ்வில் முதல்வர் ஒளி ஏற்றுவார். இந்த கோவிலுக்குரிய மீட்கப்பட்ட இடம் அதோடு ஒட்டி உள்ள இடம் 177 ஏக்கர் முதல் கட்டமாக வழக்கு இருந்தாலும் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடம் என மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளோம்.

    Must Read : விஜயபாஸ்கர் தொடர்புடைய 4 இடங்களில் லஞ்ச ஒழிப்புதுறை சோதனை

    குயின்ஸ்லேண்ட் நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பபட்டு அவர்கள் தரப்பில் இருந்தும் விளக்கம் தந்துள்ளனர். மேலும் நேரில் ஆஜராகுமாறு அறிவுறுத்தி உள்ளோம். அந்த நிலத்தை தமிழக அரசு மீட்கும் பணியை மேற்கொள்ளும், இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின் போது மண்டல இணை ஆணையர் ஜெயராமன், உதவி ஆணையர் ஜெயா, செயல் அலுவலர் சரவணன், மேலாளர் பாலாஜி, ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி வின்சென்ட், கிராம நிர்வாக அலுவலர் பெருமாள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    செய்தியாளர் - சோமசுந்தரம், பூந்தமல்லி.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: