கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்பவர்களுக்கு இதுவரை 10 சதவீதம் பங்குத்தொகை வழங்கப்பட்டு வந்த நிலையில், இதனை 60 சதவீதமாக உயர்த்துவதாக சட்டப்பேரவையில் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் நேற்று பதில் அளித்து உரையாற்றிய அமைச்சர் சேகர்பாபு, கிட்டத்தட்ட 2,566 ரூபாய் இன்றைக்கு இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை தனது சொத்துகளை மீட்டு இருக்கிறது. இந்த சொத்துகள் வேட்டை என்பது இதோடு நின்றுவிடாது. அது நிச்சயம் தொடரும். இந்த ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 150 திருக்கோயில்களுக்கு குடமுழக்கு பணி நடந்து இருக்கிறது.
503 திருக்கோயில்களில் 110.85 கோடி ரூபாய் ஒதுக்கியிருக்கின்றோம். பொங்கல் திருநாள் அன்று அர்ச்சகர் மற்றும் பணியாளர்களுக்கு புத்தாடைகள் வழங்கியிருக்கின்றோம். ஒரே உத்தரவில் 108 வாகனங்களை திருக்கோயில் பணியாளர்களுக்கு வாங்கி தந்திருக்கின்றோம்.
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயிலில் தற்போது வழங்கப்பட்டு வரும் அன்னதானத் திட்டத்தினை விரிவுபடுத்தி முக்கியத் திருவிழா நாட்களில் நாள் ஒன்றுக்கு 500 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். பழநி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு தைப்பூசம் மற்றும் பங்குனி உத்திரத்திற்கு பாதயாத்திரையாக வருகைதரும் பக்தர்களுக்கு வழித்தடங்களில் திருக்கோயில் சார்பில் 20 நாட்களுக்கு, நாளொன்றுக்கு 10,000 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.
இதையும் படிங்க: தற்கொலையை தடுத்த தமிழக அரசின் இலவச பேருந்து திட்டம்.. அமைச்சர் சொன்ன தகவல்
அனைத்துக் கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை. அன்னைத் தமிழில் இறை வணக்கம், திருக்கோயில் எங்கும் தமிழ் மணக்கும். அந்த அன்னைத் தமிழில் அர்ச்சனை செய்கின்றவர்களுக்கு பங்குத் தொகையாக இதுவரையில் 10 சதவிகிதம்தான் வழங்கப்பட்டு வந்தது. தமிழை ஊக்குவிக்கின்ற வகையில், இன்றிலிருந்து 60 சதவிகிதமாக அன்னைத் தமிழ் மொழியில் அர்ச்சனை செய்கின்ற அர்ச்சகர்களுக்கு வழங்கப்படும்.
மேலும் படிக்க: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்பாக கணபதி ஹோமம்.. மத்திய அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியில் சர்ச்சை
“அன்னைத் தமிழில் அர்ச்சனை“ செய்யும் அர்ச்சகர்களை ஊக்குவிக்கும் விதமாக சிறப்பு கட்டணச்சீட்டுகள் அறிமுகப்படுத்தப்படும். இதற்கான அர்ச்சனைக் கட்டணத்தில் 60 சதவீதம் அர்ச்சகருக்கு பங்குத் தொகையாக வழங்கப்படும்.
இராமேஸ்வரத்தில் பக்தர்கள் தங்கும் விடுதியிலிருந்து அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயிலுக்குச் சென்றுவர சிற்றுந்துகள் ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் வாங்கப்படும் என தெரிவித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.