செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே ஸ்தலசயன பெருமாள் கோயில் அமைந்துள்ளது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக இந்த கோவில் உள்ளது. தமிழக அரசின் அன்னதானத் திட்டத்தின்கீழ் நாள்தோறும் 100 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த கோவிலில் நடைபெற்ற அன்னதான பந்தியில் உணவு சாப்பிடக் கூடாது என்று சிலர் திருப்பி அனுப்புனர் என்று புகார் தெரிவித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. அந்த வீடியோவில் நாங்களும் மனிதர்கள் தான் நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் புறக்கணிக்கார்கள் என்று வேதனை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு மேற்கண்ட கோயிலில் இன்று கும்பாபிஷேகப் பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார். பின்னர், சமூக வலைதளத்தில் குற்றச்சாட்டு தெரிவித்திருந்த நரிக்குறவப் பெண் உட்படப் பொதுமக்களுடன் கோயில் வளாகத்தில் அமர்ந்து, அன்னதானத் திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட மதிய உணவை சாப்பிட்டார்.
இதன்பின் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்தார். அதில், நரிக்குறவ சமுதாயத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் சமூக வலைதளத்தில் ஸ்தலசயன பெருமாள் கோயிலில் முதல் பந்தியில் அன்னதானம் வழங்கவில்லை எனத் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக, முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. எனவே, அந்தப் பெண் உட்பட அனைவருடனும் கோயில் வளாகத்தில் அமர்ந்து உணவு சாப்பிட்டேன் என்றார்.
Also Read : ரஜினிகாந்திற்கு வழங்கப்பட்ட சிகிச்சை என்ன? மருத்துவமனை அறிக்கை
மேலும் பெருமாள் கோவில் திருப்பணிகளுக்காக 64 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வருவாய் இல்லாத கோயில்களை, நிதி ஆதாரம் உள்ள கோயில்களுடன் உபகோயில்களாக இணைக்க முயற்சித்து வருகிறோம். இதன்மூலம், அனைத்துக் கோயில்களிலும் சிறப்பு சுவாமி தரிசனம், அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பணிகளை அறநிலையத் துறை மேற்கொண்டுள்ளது என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.