ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதில் முறைகேடு இல்லை- ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் குற்றச்சாட்டை மறுக்கும் அமைச்சர் சக்கரபாணி

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதில் முறைகேடு இல்லை- ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் குற்றச்சாட்டை மறுக்கும் அமைச்சர் சக்கரபாணி

பொங்கல் பரிசு தொகுப்பு

பொங்கல் பரிசு தொகுப்பு

Pongal Gifts | பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதில் முறைகேடு நடைபெறவில்லை என்று அமைச்சர் சக்கரபாணி விளக்கம் அளித்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி கூறிய குற்றச்சாட்டை உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி மறுத்துள்ளார்.

நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகுப்பில் உள்ள பொருட்கள் தரமானதாக இல்லை என சிலர் விஷமத்தனமான கருத்துகளை பரப்பி வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறிய தகவலை குறிப்பிட்டு அறிக்கை ஒன்றை ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ளார். அதில், பொங்கல் பரிசுப் பொருட்கள் எடைகுறைவாக இருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளதை முதலமைச்சர் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்று சொல்லும் திமுக அரசு பொங்கல் பரிசுக்கான பொருட்களை வடமாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்தது ஏன் என கேள்வி எழுப்பியுள்ள ஓ.பன்னீர் செல்வம், அந்த பொட்டலங்களில் இந்தி எழுத்துக்கள் இடம்பெற்றிருப்பதன் மூலம் அரசு இந்தியை திணிக்க முயற்சிக்கிறதா என்றும் வினவியுள்ளார். எனவே, இந்த முறைகேடுகள், குளறுபடிகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டுள்ளார்.

பொங்கல் பரிசுக்கு ரேஷனில் பயோமெட்ரிக் ...கொரோனா பரவும் என பொதுமக்கள் அச்சம்

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளார் எடப்பாடி பழனிசாமியும் இதே குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். சேலம் மாவட்டம் ஓமலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொங்கல் பரிசுத் தொகுப்பில் தரமற்ற வெல்லம் வழங்கப்படுவதாக வீடியோ ஒன்றை காட்டி குற்றம்சாட்டினார். நாட்டிற்கு வழிகாட்டியாக திமுக அரசு செயல்படுவதாகக் கூறி வரும் முதலமைச்சர், பொங்கல் பரிசுத் தொகுப்பை கூட தரமற்றதாக கொடுத்து வருவதாகக் காட்டமாக சாடினார். இலவச வேட்டி, சேலை கூட வழங்கப்படவில்லை என்றும் அவர் ஆதங்கம் தெரிவித்தார்.

இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சக்கரபாணி, பொங்கல் பரிசு பொருட்கள் விநியோகத்தில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்று விளக்கமளித்தார். மேலும், வெளிப்படையான முறையில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், ஏழை, எளிய மக்களுக்கு இலவச வேஷ்டி, சேலை வழங்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் சக்கரபாணி திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

விவசாயிகளிடம் இருந்து 33 ரூபாய் விலை கொடுத்து பொங்கலுக்கான கரும்புகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறிய அமைச்சர், 10 லாரிகளில் தரமற்ற பொங்கல் பரிசு பொருட்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். எதிர்காலத்தில் மக்களின் தேவைக்கு ஏற்ப நிவாரணம் வழங்குவது குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார் என்றும் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.

First published:

Tags: Pongal Gift