ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

எலி, காட்டுப்பன்றிகளால் கால்வாய் கரை உடைந்தது! அமைச்சர் பதிலால் எழுந்த சிரிப்பு

எலி, காட்டுப்பன்றிகளால் கால்வாய் கரை உடைந்தது! அமைச்சர் பதிலால் எழுந்த சிரிப்பு

ஆர்.பி.உதயகுமார்

ஆர்.பி.உதயகுமார்

  • News18
  • 2 minute read
  • Last Updated :

எலி, காட்டுப்பன்றிகள் துளையிட்டதாலேயே கால்வாய் கரைகள் உடைந்துள்ளன என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தது நகைச்சுவையை ஏற்படுத்தியுள்ளது. 

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ளது வைகை அணை. 70 அடி உயரம் உள்ள இந்த அணையை நம்பி மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் பாசன தேவையை பூர்த்தி செய்கிறது. இந்த வைகை அணையில் இருந்து மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதி மற்றும் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகாவிற்கு உட்பட பகுதியில் உள்ள 58 கிராமங்களைச் சேர்ந்த கண்மாய் மற்றும் நீர் நிலைகளுக்கு வைகை அணையில் இருந்து தண்ணீர் கொண்டு செல்லும் திட்டமே 58 கிராம பாசனக் கால்வாய் திட்டம். இதில் உசிலம்பட்டி சுற்றுவட்டார கிராமங்களுக்காவே 58-ம் கால்வாய் கட்டப்பட்டது. சுமார் 18 வருடங்களுக்கு மேலாக நீடித்த கட்டுமானப்பணியானது, கடந்த ஆண்டு பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு, கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டு சோதனை ஓட்டமும் நடந்தது.

33 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த கால்வாயில் கரைகள் பெரும்பாலும் மண்ணாலே அமைக்கப்பட்டுள்ளது.

கால்வாயில் தண்ணீர் திறக்க வேண்டுமென பாசன விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்ததை தொடர்ந்து கடந்த 5-ம் தேதி வினாடிக்கு 100 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. தண்ணீர் திறக்கப்பட்டு ஒரு நாள் கூட முழுமை பெறாத நிலையில் நேற்று காலை டி.புதூர் கிராமம் வழியாக செல்லக்கூடிய பகுதியில் கால்வாயின் கரை உடைந்து தண்ணீர் அனைத்தும் விளை நிலங்களுக்குள் புகுந்து இதில் பல ஏக்கர் பருத்தி சாகுபடி சேதமடைந்தது. கடந்த ஆண்டும் இதே இடத்தில்தான் உடைப்பு ஏற்பட்டது. இவ்வாண்டு 20 அடி நீளத்திற்கு சேதமடைந்த கரையை செப்பனிடும் பணியை பொதுப்பணித் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் சேதமடைந்த கரைகளை செப்பனிடும் பணிகளை பார்வையிடுவதற்காக வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று மாலை வைகை அணைக்கு வந்தார். வைகை அணைக்கு வந்து 58 கால்வாய் மதகு பகுதிகளை பார்வையிட்டு பின்னர் டி.புதூர் கிராமத்தில் உடைப்பு ஏற்பட்ட கால்வாயின் கரைகளை சரிசெய்யும் பணிகளையும் பார்வையிட்டார். இதில் மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் தேனி மாவட்ட ஆட்சியர் 58-ம் பாசன விவசாயிகள் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ஆய்விற்கு பின்னர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது கரை உடைந்ததற்கான முக்கிய காரணம் ஒன்று உள்ளது எனக் கூறினார். பொதுப்பணித்துறை அதிகாரிகள் விவசாயிகள் என்ன சொல்லப் போகிறாரோ என அனைவரும் உன்னிப்பாக அமைச்சரின் பேச்சை கேட்கத் தொடங்கினர். கால்வாய் செல்லக்கூடிய பகுதிகளில் எலி, காட்டுப்பன்றிகள் அதிகம் இருக்கிறது. எனவே எலி மற்றும் காட்டுப் பன்றி துளையிட்டதாலே கரை சேதமடைந்துள்ளது என்று கூறியது மட்டுமல்லாமல் இனிமேல் கரை உடையாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்றும் கூறிவிட்டு அங்கிருந்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் புறப்பட்டு விட்டார். அமைச்சரின் பேச்சைக் கேட்ட விவசாயிகள் அதிகாரிகள் என அனைவரும் சிரித்துக்கொண்டே சென்றனர். அன்று வைகை அணை தண்ணீர் நீர் ஆவியாவதை தடுப்பதற்கு அமைச்சர் செல்லூர் ராஜூ தெர்மகோலைப் பயன்படுத்தியது நகைச்சுவையானது. இன்று கால்வாயை எலி குடைந்தாலே உடைப்பு ஏற்பட்டுள்ளது என்று ஆர்பி உதயகுமார் கூறியிருக்கிறார்.

Also see:

First published:

Tags: R.B.Udhayakumar