மோடி என்ற வீரன் கையில் நாடு இருப்பதால் தான் இந்தியா இந்தியாவாக உள்ளது - ராஜேந்திர பாலாஜி அதிரடி

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

 • Share this:
  மோடி என்ற வீரன் கையில் நாடு உள்ளதால்தான் இந்தியா இந்தியாவாக உள்ளது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

  சிவகாசி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அனுப்பன்குளம், பேராபட்டி, மீனம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

  பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர், “மோடி என்ற வீரன் கையில் நாடு உள்ளதால்தான் இந்தியா இந்தியாவாக உள்ளது. மோடி போன்ற இரும்பு மனிதர் இல்லையென்றால் வன்முறையால் இந்தியா துண்டாடப்பட்டிருக்கும். மோடியின் தலைமை இந்தியாவிற்கும் எடப்பாடி பழனிசாமியின் தலைமை தமிழகத்திற்கும் தேவை.

  அ.தி.மு.க ஆதரிக்கும் அனைத்து திட்டங்களையும் தி.மு.க எதிர்ப்பதையும்  அதற்கு ஒரு காரணத்தை தெரிவிப்பதையும் வழக்கமாகக் கொண்டுள்ளது. நல்ல திட்டங்களை ஆதரிக்கும் எண்ணம் மு.க.ஸ்டாலினுக்கு கிடையாது.

  நாட்டு மக்கள் அமைதியாக வாழவேண்டும் என்ற எண்ணம் தி.மு.கவிற்கு சிறிதளவும் கிடையாது. அந்தக்காலம் முதல் மாணவர்களைத் தூண்டிவிட்டு அரசியல் செய்வதுதான் தி.மு.கவின் வழக்கமான செயல். அதைத்தான் தற்போது குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக தி.மு.க செய்து வருகிறது.
  காலப்போக்கில் தி.மு.க காணாமல் போய்விடும். படிக்கும் மாணவர்களை போராட்டத்தில் ஈடுபடுத்துவதை தி.மு.க தவிர்க்க வேண்டும். நாட்டுப்பற்றுள்ள யாரும் இதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

  மோடி தற்பொழுது நாட்டை வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு சென்றிருக்கிறார். அண்ணாப் பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பது தொடர்பாக முதல்வர் தனி குழு அமைத்துள்ளார். அந்த குழுதான் முடிவு செய்யும். முதல்வர் ஒருபோதும் தமிழக உரிமையை விட்டுக்கொடுக்க மாட்டார், தமிழ் உணர்வு உள்ளவர் முதல்வர். தமிழையும், தமிழர்களையும் அடகு வைத்து அரசியல் செய்யும் ஈனத்தனமான செயலை அ.தி.மு.கவும், தமிழக முதல்வரும் ஒருபோதும் செய்யமாட்டார்” என்றார்.

  குடியுரிமை திருத்தச் சட்ட விவகாரத்தில் முதல்வர் இரட்டை நாக்கோடு பேசுகிறார் என தமிமுன் அன்சாரி விமர்சனம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், “தமிமுன் அன்சாரி ஒரு மதத்திற்காக பேசக்கூடிய மத வெறியர். அ.தி.மு.க அனைத்து மதத்திற்காகவும் போராடும். தமிமுன் அன்சாரிக்கு அ.தி.மு.கவும் இந்துக்களும் வாக்களிக்கவில்லை என்றால் வெற்றி பெற்றிருக்க முடியுமா என்று கேள்வி எழுப்பினார்.

  மேலும் பேசிய அவர், “இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களுக்கு எந்தவித பிரச்சினையும் இல்லாத நிலையில் ஏன் மற்ற நாட்டில் உள்ள இஸ்லாமியர்களுக்காக போராடுகிறீர்கள் என அமைச்சர் கேள்வி எழுப்பினார்.

  இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கள் தங்களின் குடும்ப வளர்ச்சியை பற்றி மட்டும் யோசிக்க வேண்டும் அதை விடுத்து பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷில் உள்ள இஸ்லாமியர்களுக்காக ஏன் போராட வேண்டும். இந்திய நாட்டை அவமதிப்பு செய்யும் நாட்டில் உள்ளவர்களுக்காக ஏன் இங்கு போராட வேண்டும்” என்றார்.

  Also see:

  Published by:Sheik Hanifah
  First published: