ராகுல் காந்தி கீழே விழுந்தது சித்தரிக்கப்பட்டதுபோல உள்ளது - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சனம்

ராஜேந்திர பாலாஜி

உத்தரப் பிரதேசத்தில் காவல்துறையினர் ராகுல் காந்தியை கீழே தள்ளியிருக்க வாய்ப்பில்லை. அது சித்தரிக்கப்பட்டது போல உள்ளது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சனம் செய்துள்ளார்.

  • Share this:
    விருதுநகரில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலஜி, ‘மு.க.ஸ்டாலின் தடையை மீறி கிராம சபை கூட்டம் நடத்துவார். கடையை திறப்பார். திமுக ஆட்சியில் நடந்த அக்கிரமம். விவசாயம் மீது தொடுக்கப்பட்ட வழக்குகளை மு.க.ஸ்டாலின் திரும்பிப் பார்க்கவேண்டும். எடப்பாடி முதல்வர் ஆன பின்பு விவசாயிகளுக்கு நன்மை செய்யப்பட்டுள்ளது. குடிமராமத்து மூலம் அனைத்து குளங்களும் தூர்வாரப்பட்டு நீர் சேகரிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணை நிரம்பி கொண்டிருக்கிறது. முதல்வர் எடப்பாடி எடுத்த முயற்சியின் காரணமாக தமிழகத்தில் தண்ணீர் பிரச்சனை இல்லாமல் உள்ளது.

    ஏழை விவசாயிகளுக்கு, பாட்டாளிகள், படைப்பாளிகளுக்கு அனைத்து திட்டத்தை நிறைவேற்றிக் கொண்டிருப்பவர் எடப்பாடி பழனிசாமி. முதல்வர் எடப்பாடியின் புகழை கெடுப்பதற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முயற்சி எடுத்து வருகிறார். அவர் முயற்சி ஒருகாலும் பழிக்காது. அவர் முயற்சி காணல் நீராகத்தான் போகும்.

    எடப்பாடி ஆட்சி தெளிவான ஆட்சி, வலுவான ஆட்சி, வல்லமையான ஆட்சி, பொலிவான ஆட்சி, சிறப்பான ஆட்சி என்று மக்களால் போற்றப்படும் ஆட்சி. இந்த ஆட்சி எந்தவிதமான வில்லங்கம் இல்லாமல் தொடர்ந்து நடைபெறும். உத்திரபிரதேசத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தால் அந்த குற்றவாளியை சுடவேண்டும்.

    உத்திரபிரதேசத்தில் சிறுமி உயிரிழந்தது தொடர்பாக காவல்துறை விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, இந்த நேரத்தில் ராகுல் காந்தி அங்கு சென்று வம்பு இழுக்க கூடாது. காவல்துறை ராகுல் காந்தியை தடுத்து இருப்பார்கள். தள்ளிவிட்டு இருக்க வாய்ப்பில்லை. அவர் தவறி விழுந்து இருக்கலாம்.

    பெருந்தன்மைக்கு சொந்தக்காரர் நரேந்திர மோடி. அவரும் உத்திரப்பிரதேச முதல்வரும், ராகுல் காந்தியை தள்ளி விடுவது போன்ற ஈனத்தனமான செயலை செய்திருக்க மாட்டார்கள். நடந்த சம்பவம் சித்தரிக்கப்பட்டது தெரிகிறது. உண்மைக்குப் புறம்பான சம்பவமாக தெரிகிறது. இதை வைத்து ஈனத் தனமான அரசியல் நடத்தி லாபம் தேடும் காங்கிரஸ் கட்சியின் நினைப்பு பிழைப்பை கெடுக்கும்.

    வரும் 6 ஆம் தேதி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அ.தி.மு.க தலைமை அவசர அழைப்பு ஒன்றும் விடுக்கவில்லை. சட்டமன்ற உறுப்பினர்கள் பணி இருக்கிறது என்று கூறினால் கூட்டத்திற்கு செல்லாமல் இருந்து கொள்ளலாம். அ.தி.மு.கவை சுற்றி என்னதான் மாவாட்ட நினைத்தாலும் ஒன்றும் நடக்காது. அ.தி.மு.க என்பது கடல்போல் பொங்கத்தான் செய்யும். கடைசியாக அமைதியாகிவிடும்.

    துணை முதல்வரை புறக்கணிக்கவில்லை. பணியின் காரணமாக அரசு விழாக்களில் கலந்து கொள்ளாமல் இருந்திருக்கலாம். அதிமுக மிகப்பெரிய ஆலமரம் அதில் விழுதுகள் பல இருக்கும். அதில் எந்த விழுது பெரியது எந்த விழுது சிறியது என பார்க்க முடியாது. அனைத்துமே பெரிய விழுது தான்.


    அனைத்துமே உறுதியானவர்கள் தான். அ.தி.மு.கவை விட்டு யாரும் எங்கும் செல்ல மாட்டார்கள். இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. மு.க.ஸ்டாலின் எண்ணங்களை தவிடு பொடியாக்கி வெற்றி இலக்கை நோக்கி அ.தி.மு.க செல்கிறது. அ.தி.மு.க வாழும். நிச்சயம் தமிழகத்தை தொடர்ந்து ஆளும்’ என்று தெரிவித்தார்.
    Published by:Karthick S
    First published: