• HOME
 • »
 • NEWS
 • »
 • tamil-nadu
 • »
 • தமிழகத்திற்கு புதிதாக 2,213 டீசல், 500 மின்சார பேருந்துகள் - அமைச்சர் ராஜ கண்ணப்பன் அறிவிப்பு

தமிழகத்திற்கு புதிதாக 2,213 டீசல், 500 மின்சார பேருந்துகள் - அமைச்சர் ராஜ கண்ணப்பன் அறிவிப்பு

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

அரசு போக்குவரத்து கழகங்களில் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்.

 • Share this:
  தமிழ்நாட்டில் புதியதாக பி.எஸ்-4 (BS - IV) குறியீட்டிற்கு இணக்கமான, இரண்டாயிரத்து 213 டீசல் பேருந்துகள், 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும் என, போக்குவரத்து துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் தமிழக சட்டப்பேரவையில் துறைரீதியான மானிய கோரிக்கையின் போது பேசுகையில் அறிவித்தார்.

  தமிழக சட்டப்பேரவையில் துறைரீதியான மானிய கோரிக்கையின் போது பேசிய அமைச்சர் ராஜ கண்ணப்பன் 10 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி, அரசு போக்குவரத்து கழகங்களின் கூடுதல் வருவாய்க்காக பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனை நிலையங்கள், அரசு போக்குவரத்து கழகங்களுக்கு சொந்தமான 10 இடங்களில் நிறுவப்பட உள்ளன. அரசு போக்குவரத்து நிறுவனங்களின் கட்டடங்களின் கூரையில் சூரிய சக்தி மின்னாற்றல் தகடுகள் நிறுவுவதோடு, அரசு போக்குவரத்து கழகங்களில் உள்ள காலிப் பணியிடங்களும் நிரப்பப்படும் என்றார்.

  பொதுமக்கள் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு வராமலேயே பழகுனர், ஓட்டுனர் உரிமம் புதுப்பித்தல் மற்றும் ஓட்டுநர் உரிமத்தில் முகவரி மாற்றம் ஆகிய சேவைகளைப் பெறுதல் நடைமுறைபடுத்தப்பட உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தனி மோட்டார் ஆய்வாளர் அலுவலகத்திற்கு புதிய பகுதி அலுவலக கட்டடம், மதுரை தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு சொந்தக் கட்டடம் மற்றும் ஓட்டுநர் தேர்வு தளத்துடன் கோயம்புத்தூர் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கும் சொந்தக் கட்டடம் கட்டப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார்.

  போக்குவரத்து துறையில் உட்தணிக்கை பணிகளை மேற்கொண்டு வரும் தணிக்கை அலுவலர்களுக்கு, மடிக்கணினிகள் மற்றும் தரவு அட்டைகள் வழங்கப்படும். அனைத்து சரக அலுவலகங்கள் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகங்கள் மற்றும் சோதனைச் சாவடிகளுக்கு, புதிய கணினிகள் மற்றும் அச்சுப்பொறிகள் வழங்கப்படும் என, அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவித்தார்.

  இந்நிலையில், தமிழக அரசு துறைகளின் அலுவலக செயல்பாடுகளை மின் மயமாக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என, தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவித்துள்ளார். துறை ரீதியான மானியக்கோரிக்கையின் போது பேசிய அமைச்சர், 11 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி, விரைந்து கண்காணிக்க, அணுக மற்றும் பதிலளிக்கும் வகையில், வெளிப்படையான நிர்வாகத்தை மக்களுக்கு வழங்க, டிஜிட்டல் தமிழ்நாடு திட்டம் செயல்படுத்தப்படும் என்றார்.

  அடுத்த 2 நிதியாண்டுகளில் 15 கோடி ரூபாய் செலவில், அரசின் கொள்கை முடிவுகளுக்கான ஆதரவு அமைப்பு செயல்படுத்தப்பட உள்ளது. வரலாற்றுச் சின்னங்கள், கலைப்பொருட்கள் உள்ளிட்டவற்றின் விவரங்கள் தொடர்பாக, அடுத்த மூன்று ஆண்டுகளில் தமிழ் இணைய கல்விக் கழகத்தில் மெய்நிகர் அருங்காட்சியம் அமைக்கப்படும், அரிய ஒலி, ஒளி உள்ளிட்ட வரலாற்றுப் படங்களை மின்னுருவாக்கம் செய்யப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

  வளர்ச்சி, முதலீடு மற்றும் உயர்தர வேலைவாய்ப்பினை ஊக்குவிக்க தரவு மைய கொள்கையும், தமிழ்நாட்டை உலகளாவிய திறன் மையங்களுக்கான முக்கிய முனையமாக மாற்றிட, திறன் மையக் கொள்கையும் வெளியிடப்படும் என்றார். யூமாஜின் எனும் வருடாந்திர தொழில்நுட்ப தலைமை உச்சிமாநாடு தமிழகத்தின் பல்வேறு சுற்றுலா நகரங்களிலும், முதலாவதாக சென்னையிலும் நடத்தப்பட உள்ளது.

  Must Read : அரசுப் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த முக்கிய நடவடிக்கை - மு.க.ஸ்டாலின்

  இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் அமைக்கப்படும் என்றும், அரசு திட்ட பயனாளிகளுக்கான ஒருங்கிணைந்த பார்வை தளம் அமையும் என்றும், அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவித்தார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Suresh V
  First published: