• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனை மன்னிப்பு கேட்கச் சொல்லும் கோவா அமைச்சர்: ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் நடந்தது என்ன?

நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனை மன்னிப்பு கேட்கச் சொல்லும் கோவா அமைச்சர்: ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் நடந்தது என்ன?

பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் vs மவ்வின் கோடின்ஹோ

பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் vs மவ்வின் கோடின்ஹோ

கோவா மக்களுக்கு இது போன்ற அமைச்சர் கிடைத்ததற்காக வருத்தப்படுகிறேன் என பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் குறிப்பிட்டுள்ளார்.

  • Share this:
சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று பத்தாண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சியமைத்து ஒரு மாதம் முடிவதற்குள் தனது அதிரடி கருத்துக்கள் மூலம் அடுத்தடுத்த சர்ச்சைகளில் சிக்கிக்கொண்டுள்ளார் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன். ஆரம்பத்தில் ஈஷா நிறுவனர் ஜக்கி வாசுதேவ், பாஜக தலைவர் ஹெச்.ராஜா ஆகியோருடனான வார்த்தை மோதல்களைத் தொடர்ந்து தற்போது கோவா அமைச்சருக்கும், பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனுக்குமிடையேயான மோதல் இரு மாநிலங்களுக்கு இடையிலான விவகாரமாக மாறியிருக்கிறது.

சமீபத்தில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தான் இரு மாநில அமைச்சர்களுக்குமிடையேயான உரசல் ஏற்பட்டுள்ளது.

கடந்த மே 28ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 43வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. இதில் தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டார்.

இக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் “ஜிஎஸ்டி கவுன்சிலின் ஒரு மாநிலத்திற்கு ஒரு வாக்கு என்ற நடைமுறை ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. ஒரு மாநிலத்தின் மக்கள் தொகை, பொருளாதாரம் போன்றவற்றின் அடிப்படையிலேயே வாக்கு அளிக்கப்பட வேண்டும் என கூறினார்.

மேலும் இதன் அடிப்படையிலேயே கவுன்சில் கூட்டத்தில் பேசுவதற்கான நேரத்தையும் நிர்ணயிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

ஆனால் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் பேச்சுக்கு, மிகச்சிறிய மாநிலமான கோவா சார்பில் கலந்து கொண்ட அம்மாநில அமைச்சர் மவ்வின் கோடின்ஹோ தனது எதிர்ப்பை தெரிவித்தார்.

பெரிய அண்ணன் மனப்பான்மையில் பேசக்கூடாது என்ற வகையில் தனது எதிர்ப்பை பதிவு செய்தார் கோவா அமைச்சர் மவ்வின் கோடின்ஹோ. இந்த விவகாரம் இருவருக்குமிடையேயான பிரச்னைக்கு வித்திட்டுள்ளது.

தமிழக அரசினுடைய பிரதிநிதியின் நடத்தை மிகவும் ஆட்சேபகரமானது.  ஒரு சிறிய மாநிலமாக இருப்பதால் கோவாவின் குரலை பறிக்க முயற்சி செய்யப்பட்டது. இது ஜனநாயகக் கொள்கைகளுக்கு எதிரானது, இதற்காக என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என கோவா அமைச்சர் மவ்வின் கோடின்ஹோ தன்னுடைய ட்விட்டரில் பதிவிட்டார்.

இதற்கு பதிலடி தரும் வகையில் அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.



அதில், “8 கோடி மக்கள் தொகை கொண்ட மாநிலத்தின் பல்வேறு துறைகளை கவனித்து வருகிறேன். 3 லட்சம் கோடி மதிப்பிலான பட்ஜெட்டை சட்டமன்றத்தில் தாக்கல் செய்பவன். தேவையில்லாத குற்றச்சாட்டுகளுக்கு நான் பதில் கூறி என் நேரத்தை வீணடிப்பதில்லை. ஆனால் கோவா மக்களை நான் அவமானப்படுத்திவிட்டதாக அமைச்சர் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுக்க விரும்புகிறேன்.

ஜிஎஸ்டி கவுன்சிலில் ஒரு மாநிலத்திற்கு ஒரு வாக்கு என்ற முறையே தவறு. மாநில உரிமைகளை பிரதிநிதித்துவப்படுத்துவதன் அடிப்படையிலேயே அக்கூட்டத்தில் பேசினேன்.

நான் கோவா மக்களை அவமானப்படுத்தும் வகையில் எதுவும் பேசவில்லை என்பதால் நான் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் கிடையாது. நான் கோவா மக்களுக்காகவும், அவர்களுக்கும் ஆதரவாகத்தான் பேசினேன். அதற்காக எனக்கு நன்றி தெரிவிக்க தேவையில்லை. ஆனால் உங்களுக்கு இது போன்ற அமைச்சர் கிடைத்ததற்காக வருத்தப்படுகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

 



முன்னதாக அவர் மேற்கொண்டிருந்த ட்விட்டர் பதிவில், “17 ஆண்டுகளாக காங்கிரஸில் இருந்து தற்போது பாஜகவில் உள்ள அமைச்சர் மவ்வின் கோடின்ஹோ பத்ரிகையாளர் சந்திப்பில் பொய் கூறியதாக கடுமையாக விமர்சனம் செய்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: