ஜி.எஸ்.டி கவுன்சில் நடைமுறைகள் குறித்து உச்சநீதிமன்றம் இன்று அளித்துள்ள தீர்ப்பை தொடர்ந்து நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மதுரை சின்ன சொக்கிகுளம் பகுதியில் உள்ள அவரது முகாம் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்து வருகிறார். அப்போது அவர், ‘ஜி.எஸ்.டி கவுன்சில் மாநில, ஒன்றிய அரசுகளுக்கு பரிசீலனைகளை அனுப்ப மட்டுமே முடியும். அரசுகளை கட்டாயப்படுத்த முடியாது என்று உச்ச நீதிமன்ற தீர்ப்பு தெளிவாக சுட்டிக்காட்டி உள்ளது.
மாநில, ஒன்றிய அரசுகளின் உரிமைகளை கடந்து முடிவெடுக்க ஜி.எஸ்.டி கவுன்சிலுக்கு அதிகாரம் கிடையாது. பேரறிவாளன் விடுதலை தீர்ப்பையும், ஜி.எஸ்.டி வரைமுறை தீர்ப்பையும் இணைத்துப் பார்க்க வேண்டிய கட்டாயம் உள்ளது. பல ஆண்டுகளாக மாநில உரிமைகளை குறைக்கும் வகையில், கூட்டாட்சி தத்துவத்தை அழிக்கும் வகையில் ஒன்றிய அரசு, குடியரசுத் தலைவர், ஆளுநர் ஆகியோரின் செயல்கள் இருந்தன.
இந்த நிலையில் அடுத்தடுத்த இரண்டு தீர்ப்புகளின் மூலமாக மாநில சட்டமன்ற உரிமைகளுக்கு இருக்கும் வலிமையை உணர்த்தி இருப்பது கவனிக்கத்தக்கவை.
ஜி.எஸ்.டி கவுன்சில் தொடர்பான தீர்ப்பு சட்டமைப்பில் உள்ளவற்றையே சுட்டிக் காட்டி உள்ளது. இதில் புதிய அம்சம் எதுவும் இல்லை.
மாநில சட்டமன்ற உரிமைகள் குறித்து நீதிமன்றம் சுட்டிக் காட்டுவது தான் கவனிக்க வேண்டியது. உச்ச நீதிமன்றத்தில் பண மதிப்பிழப்பு, தேர்தல் பத்திரம் உள்ளிட்ட பல வழக்குகள் இதுவரை பதில் இல்லாமல் நிலுவையில் உள்ளது. வரலாற்றில் இல்லாத சட்டமைப்பு பிழைகளை ஜி.எஸ்.டி கவுன்சில் செய்து கொண்டிருப்பதாக கடந்த ஆண்டே கவுன்சில் கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் முன்வைத்து உள்ளோம்.
மாநில உரிமைகளை காக்கும் முயற்சிகளை கொண்டாடும் வகையிலான தீர்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. ஜனநாகயத்திற்கும், மக்களுக்கும் அவர்களுக்கான உரிமைகளை நிலைநிறுத்தும் வகையிலேயே தீர்ப்புகள் வெளியாகி உள்ளன.
ஜி.எஸ்.டி கவுன்சில் எடுக்கும் முடிவுகளை சட்டமாக இயற்றாமல் அப்படியே அரசுகள் பின்பற்றும் சூழல் உள்ளது. ஜி.எஸ்.டி கவுன்சிலின் அடிப்படை செயல்பாடே பிழையாக உள்ளது. மாநில சட்டமன்ற உரிமைகளை உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் வழியாக மீண்டும் நிலை நிறுத்தி உள்ளார்கள்.
பழைய ஓய்வூதிய திட்ட விவகாரம் குறித்து நான் தெரிவித்த கருத்துக்கள் தவறாக திரித்து பரப்பப்பட்டது. திட்டத்தை அமல் படுத்துவதில் உள்ள நடைமுறை சிக்கல் குறித்து மட்டுமே நான் சட்டமன்றத்தில் பேசினேன்’ என்று தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.