தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் பழனிசாமியா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பதிலளிக்க மறுத்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் மத்திய சுற்றுச்சூழல், வனம், தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களை சந்தித்தார். புதிய இந்தியா சமாச்சார், விவசாயிகளின் நலன் காக்கும் மோடி அரசு ஆகிய புத்தகங்களை மேடையில் அறிமுகம் செய்தார் பிரகாஷ் ஜவடேகர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பீஹாரில் 3-வது முறையாக தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. தனது ஆட்சி முறையால் காங்கிரஸ் ஒவ்வொரு மாநிலங்களாக இழந்து வருகிறது. தமிழ்நாட்டில் வரக்கூடிய சட்ட மன்றத் தேர்தலில் பாஜக சிறப்பான வெற்றியைப் பெறும். நாட்டில் பெரும்பாலான கட்சிகள் குடும்பக் கட்சிகளாக உள்ளன. ஆனால், பாஜகவே ஒரு குடும்பம் தான்.
கடந்த 6 ஆண்டுகளாக விவசாயிகளின் நலன்களுக்காக பாஜக அரசு தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளது. பாஜக ஆட்சியில் 9 கோடி விவசாயிகளுக்கு தலா ரூ.2,000 வழங்கப்பட்டுள்ளது. 6 கோடி விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் தங்களின் விளை பொருட்களை தாங்களே அதிக விலைக்கு விற்க வழி வகை செய்யப்பட்டுள்ளது. அது அவர்களின் உரிமையும் கூட. அதை தான் பா.ஜ.க செய்துள்ளது.
பாஜக ஆட்சியில் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகி உள்ளது. பஞ்சாபைத் தவிர வேறெங்கிலும் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தவில்லை. பஞ்சாபில் மட்டுமே தவறான புரிதல் காரணமாக போராட்டம் நடைபெறுகிறது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் பழனிசாமியா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பதிலளிக்கவில்லை. தொடர்ச்சியாக செய்தியாளர்கள் இக்கேள்வியை எழுப்பிய போது அவர், பதில் எதுவும் தெரிவிக்கவில்லை. தங்களது கட்சிக்கு என சில வழிமுறைகள் உள்ளன. அதன்படி கட்சி தலைமை தான் அறிவிக்கும். அதை தான் மாநில தலைவர் தெரிவித்திருக்கிறார் என்றார்
ஒரு கூட்டணி என்று இருந்தால், அதில் ஒருவரை ஒருவர் சார்ந்திருத்தல் இயல்பு. இது அதிமுக - பாஜக கூட்டணியில் மட்டுமல்ல. எந்தக் கூட்டணியாக இருந்தாலும் அதில் இருப்பவர்கள் ஒருவரை ஒருவர் சார்ந்தே இருக்க வேண்டும்.
Also read... டெல்லியில் கடுங்குளிரில் 30-வது நாளை எட்டியுள்ள விவசாயிகள் போராட்டம்
திருத்தப்பட்ட சுற்றுச்சூழல் தாக்க அறிவிக்கைக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளதே என்ற செய்தியாளரின் கேள்விக்கு, அது தொடர்பாக மத்திய அரசு ஆலோசித்து முடிவு எடுக்கும் என்று அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பதில் தெரிவித்தார்.
வேளாண் சட்டங்கள் உடனுக்குடன் செயல்படுத்தப்பட்டவை அல்ல. ஏறத்தாழ 20 ஆண்டுகள் கலந்தாலோசித்து பல தரப்பினரிடம் கருத்துக்கேட்பு நடத்திய பின்னரே வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த வேளாண் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது என்றும் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.