பாலிடெக்னிக் படிப்புகளில் சேர மாணவர்களிடையே ஆர்வம் குறைந்து வருவதாகவும் இதன் காரணமாக தமிழகத்தில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை மிகக் குறைவாக உள்ளது என்றும் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவே நான் முதல்வன் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், ஊட்டி தொகுதி, குந்தா வட்டம் மஞ்சூரில் பாலிடெக்னிக் கல்லூரி தொடங்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா என சட்டமன்ற உறுப்பினர் கணேஷ் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, கல்வியும், சுகாதாரமும் என் இரு கண்கள் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளதாகவும், கடந்த பட்ஜெட்டில் 21 அரசு கலை அறிவியல் கல்லூரியும், இந்த பட்ஜெட்டில் 10 புதிய அரசு கலை அறிவியல் கல்லூரிகள் தொடங்குவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
மேலும், இன்றைய சூழலில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர்கள் அதிகமாக சேருவதில்லை என்பதை வருத்தத்துடன் பதிவு செய்வதாக குறிப்பிட்ட அவர், ஊட்டி பகுதிகளில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் இருக்கும் 705 மொத்த இடங்களில், 265 இடங்களில் தான் மாணவர்கள் சேர்ந்துள்ளதாகவும், பாலிடெக்னிக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவே "நான் முதல்வன்" திட்டம் கொண்டுவரப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: சுத்தியலா? சாவியா?... பேரூராட்சி தலைவர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு சொன்ன ரகசியம்!
அதேபோல், வரும் காலத்தில் தேவை ஏற்பட்டால் ஊட்டி மஞ்சூரில் பாலிடெக்னிக் கல்லூரி தொடங்குவது பற்றி பரிசீலிக்கப்படும் என கூறிய அவர், 26 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு புதிய கட்டடங்கள் கட்டுவதற்கும், 55 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: இந்த ஆண்டின் மிஸ் கூவாகமாக சென்னையைச் சேர்ந்த மெகந்தி தேர்வு (படங்கள்)
சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது தொகுதிகளுக்கு அரசு கல்லூரிகள் வேண்டுமேன்று கேட்கிறார்கள். அவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் அரசு கலைக்கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரிகள் கொண்டு வருவதற்கு முதலமைச்சருடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொன்முடி தெரிவித்தார். தமிழகத்தில் பல்வேறு கல்லூரிகளில் இந்த ஆண்டு புதிய பாடப் பிரிவு கொண்டு வரப்படுவதோடு, 10 கல்லூரிகளில் பி.எச்.டி படிப்பு கொண்டு வருவதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.