வாரிசு அரசியல் என்ற குற்றச்சாட்டு ஒன்றும் புதிது இல்லை, ஸ்டாலின் வரும் போது இதை தான் கூறினார்கள் இப்போது உதயநிதிக்கும் அதே தான் சொல்கிறார்கள் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
கடந்த 2018-ம் ஆண்டு அரசியலில் தடம் பதித்த உதயநிதி ஸ்டாலின், 2019ம் ஆண்டு ஜூலையில் திமுக இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து, நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு திமுக கூட்டணிக் கட்சிகளுக்காக சூறாவளி பிரசாரம் மேற்கொண்டார். பின்னர், 2021 சட்டப்பேரவை தேர்தலில், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று, கோட்டைக்குள் அடியெடுத்து வைத்தார்.
அப்போதிருந்தே உதயநிதிக்கு அமைச்சர் பொறுப்பு வழங்க வேண்டும் என்று மூத்த அமைச்சர்கள் உட்பட கட்சி நிர்வாகிகள் சிலர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். அண்மையில், திமுக இளைஞரணி செயலாளராக இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டார். இதை தொடர்ந்து, உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்க உள்ளதாகவும், அவருக்கு சிறப்பு திட்ட அமலாக்கத்துறை ஒதுக்கப்படும் என்றும் கூறப்பட்டு வந்தது.
ஆளுநர் ஆர்.என். ரவியின் முதன்மை செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், உதயநிதியை அமைச்சரவையில் சேர்க்க, முதலமைச்சர் ஸ்டாலின் பரிந்துரைத்து உள்ளதாகவும் அதற்கு ஆளுநர் ஒப்புதல் தந்துவிட்டதாகவும் தெரிவித்தார். பதவியேற்பு நிகழ்ச்சி, கிண்டி ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில் நாளை காலை 9.30 மணிக்கு நடைபெறும் என கூறியுள்ளார். உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் பதவியில் பொறுப்பேற்க உள்ள நிலையில் அவருக்கு திமுகவின் மூத்த நிர்வாகிகள் பலர் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
Also Read : "சேப்பாக்கத்தின் தென்றல் இனி செந்தமிழ் நாடெங்கும் வீசட்டும்" - உதயநிதிக்கு செந்தில் பாலாஜி வாழ்த்து!
இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது உதயநிதி ஸ்டாலினுக்க அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட உள்ள கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது, உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சரவையில் தற்போது இடம் ஒதுக்கி இருப்பது தாமதம் எனத்தான் நான் கூறுவேன். வாரிசு அரசியல் என்ற குற்றச்சாட்டு ஒன்றும் புதிது இல்லை. ஸ்டாலின் வரும் போது இதை தான் கூறினார்கள். இவற்றையெல்லாம் மக்கள் பார்த்துக் கொள்வார்கள். இது எல்லா கட்சியிலும் இருப்பது தான் அதில் ஒன்றும் தப்பு இல்லை. உதயநதிக்கு அமைச்சர் பொறுப்பு கொடுப்பது கூட்டான ஒரு முடிவு தான். அவருடன் இணைந்து நாங்களும், எங்களுடன் இணைந்து அவரும் செயல்படுவார் என்றார்.
மேலும் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பொறுப்பு கொடுக்கப்படுமா என்ற கேள்வி எழுப்பினர். அவர் துணை முதல்வராவரா என்று உங்களை போல் நானும் காத்துக் கொண்டிருக்கிறேன் என்று தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: DMK, Minister Ponmudi, Udhayanidhi Stalin