ஊரகப் பகுதிகளில் கடனை வசூலிப்பதில் வங்கிகள் மென்மையான போக்கை கடைபிடிக்கவேண்டும் - அமைச்சர் பெரியகருப்பன் வலியுறுத்தல்

மாதிரிப் படம்

கொரோனா சூழலை கருத்தில் கொண்டு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் ஊரகப் பகுதிகளில் பொதுமக்களிடம் கடனை வசூலிப்பதில் மென்மையான போக்கை கடைப்பிடிக்க வேண்டும் என ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  இந்தியாவை கொரோனா இரண்டாவது அலை புரட்டிப் போட்டுள்ளது. கொரோனா முதல் அலையை சமாளித்து இந்தியா எழுந்து நிற்கும்போது இரண்டாவது அலை மிகப்பெரிய தாக்குதலை ஏற்படுத்தியது. இரண்டாது அலையில் எந்த உலக நாடுகளிலும் இல்லாத அளவுக்கு நாள் ஒன்றுக்கு 4 லட்சம் பேர் வரை பாதிக்கப்பட்டனர். தற்போது கொரோனா பாதிப்பு மெல்லமாக குறைந்துவருகிறது. தற்போது நாள் ஒன்றுக்கு கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை 2.5 லட்சமாக உள்ளது. கொரோனா இரண்டாவது அலையின் தாக்கத்திலிருந்து இந்தியா இன்னமும் மீளாத நிலையில் மூன்றாவது அலைக்கான எச்சரிக்கைவிடுக்கப்படுகிறது.

  இந்திய அளவில் கொரோனா பாதிப்பு குறைந்துவந்தாலும், தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துவருகிறது. கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த தமிழக அரசு கடந்த இரண்டு வாரங்களாக முழு ஊரடங்கு பிறப்பித்துள்ளது. மேலும், ஊரடங்கை தொடர்வது குறித்து ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  கொரோனா ஊரடங்கால் மக்களின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் வங்கிகள் இ.எம்.ஐ தள்ளுபடி செய்யவேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார். இந்தநிலையில், ஊரக வளர்ச்சித்துறை மற்றும் வங்கி பிரதிநிதிகள் பங்குபெற்ற ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற்றது.

  ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன், ‘ஊரகப் பகுதிகளில் கொரோனா நோய்த்தடுப்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு அதற்குரிய பணிகளை அரசின் மற்ற துறைகளுடன் இணைந்து ஊரக வளர்சித் துறை மேற்கொண்டு வருகிறது. தற்போது கொரோனோ 2-வது அலையின் தாக்கம் அதிகம் இருப்பதன் காரணமாக பொதுமக்களிடம் கடனை வசூலிப்பதில் மென்மையான போக்கை கடைபிடிக்க வேண்டும் என்று தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிடம் கேட்டுக் கொண்டுள்ளேன்’ என்று தெரிவித்தார்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: